மகிழ்ச்சியானவாழ்க்கை! சொல்கிறார் : சாந்தி ரங்கநாதன்
1992-இல் இந்திய அரசால் "பத்மஸ்ரீ விருது', "யுனைடெட் நேஷன்ஸ் வியன்னா சிவில் சொசைடி' விருது, "போதைப் பழக்கத்திற்கு அடிமையானோருக்கான சேவை'க்கு இருபத்தி ஆறு நாடுகள் அளித்த முதன்மை விருது என பல விருதுகளைப் பெற்றவர் சாந்தி ரங்கநாதன். டி.டி.ரங்கநாதன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் டி.டி.கே மருத்துவமனை என்கிற தனது
1992-இல் இந்திய அரசால் "பத்மஸ்ரீ விருது', "யுனைடெட் நேஷன்ஸ் வியன்னா சிவில் சொசைடி' விருது, "போதைப் பழக்கத்திற்கு அடிமையானோருக்கான சேவை'க்கு இருபத்தி ஆறு நாடுகள் அளித்த முதன்மை விருது என பல விருதுகளைப் பெற்றவர் சாந்தி ரங்கநாதன். டி.டி.ரங்கநாதன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் டி.டி.கே மருத்துவமனை என்கிற தனது அமைப்புகள் மூலம், குடி மற்றும் போதைப் பழக்கத்திற்கு ஆளானோரை மீட்டெடுத்து, அவர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொடுத்து 25,000 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் ஒளியேற்றிருக்கிறார்.
அவரிடம் பேசுவோம்:
இப்படியோர் அமைப்பைத் துவங்க உங்களுக்குத் தோன்றியது எப்படி?
முதலில் இந்த மாதிரி லட்சியமெல்லாம் எனக்கு இல்லை. என் குடும்பத்தில் எல்லோரும் நன்கு படித்தவர்கள்! எல்லோரையும் போல படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் என்னை ஈடுபடுத்துவது என்பதுதான் எங்கள் குடும்பத்தின் முடிவாக இருந்தது. நானும் அதற்குச் சம்மதித்தேன். ஆனால் விதி வேறு விதமாக ஆகிவிட்டது! என் கணவர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார். அப்போதைய சூழ்நிலையில் இதெற்கெல்லாம் நம் நாட்டில் சிகிச்சை முறையோ, ஆலோசனை வழங்கும் அமைப்போ எதுவும் இல்லை! ஆனால் அமெரிக்காவில் இருந்தது. அமெரிக்காவிற்கு அவர் சிகிச்சைக்குச் சென்று திரும்பி வந்தார். நல்ல ஆரோக்கியமாகவே இருந்தார். துரதிர்ஷ்ட வசமாக அவர் மறுபடியும் மது அருந்தத் தொடங்கியதால் மறைந்து விட்டார்!
கேட்கவே சங்கடமாக இருக்கிறது. பிறகு?
எனக்கு மிகவும் துக்கமாகத்தான் இருந்தது! என்ன செய்வது? இது போன்று எத்தனை குடும்பங்கள் இருக்குமோ? (கண்களைத் துடைத்துக் கொண்டு) நான் இந்தக் குடிபோதைக்கு எதிரான போராட்டத்தைத் துவங்கினேன்.
இது பெரிய காரியமாயிற்றே...? இதற்குப் பெரும் பொருள் தேவைப்படுமே?
இந்த சமயத்தில் என் மாமியார் எனக்கு உறுதுணையாக இருந்தார். அவர் என்னை ஆச்சரியத்துடன் பார்த்தார். தன்னால் முடிந்த எந்த உதவியும் செய்வதாகச் சொன்னார்! உடனடியாக ஒரு கோடி ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் இது பெரும் தொகை! உடனே ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் துவங்கப்பட்டது! நான் இது பற்றி மேலும் கல்வி பெற அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது! அந்த காலகட்டத்தில் தனியாக நான் அமெரிக்கா செல்வது என்பது மிகக் கடினம்!எனவே எனது அக்கா பிரேமா ராகவன் என்னுடன் அமெரிக்கா வந்தார். நான் திரும்பியதும்,1980இல் இந்த மருத்துவ மனையைத் துவங்கினோம்! இந்த மருத்துவ மனையில் இருக்கும் அத்தனை மரங்களும் செடிகளும் என் மாமியார் நட்டவை!
பொருளாதாரம் தவிர சிகிச்சை முறையில் ஒத்துழைப்பு? மற்றும் மனோரீதியான ஒத்துழைப்பு?
அப்போது இந்தியாவில் இந்த முயற்சியெல்லாம் ஏளனமாகப் பார்க்கப்பட்டது! சில மருத்துவர்கள் இதெல்லாம் சாத்தியமா?..., என நினைத்தனர். சிலர் இதெல்லாம் வினைப்பயன், மாற்றுவது சாத்தியமல்ல, என்றும் நினைத்தனர். அப்போது மனோதத்துவ சிகிச்சையில் டாக்டர் பட்டம் பெற்ற ரேமான் செரியன் உதவிக்கு வந்தார். டாக்டர் தேவர் என்பவரும் உதவிக்கு வந்தார். மற்றும் சில கவுன்சிலர்கள் உதவிக்கு வந்தனர். மெல்ல மெல்ல எனது கனவு மெய்ப்பட ஆரம்பித்தது.
ஒரு குடிகாரனைத் திருத்த முடியுமா?
""குடிப் பழக்கத்திற்கு ஆளான எவரையும் இனி, குடிகாரன், நம்ப முடியாதவன், எதற்கும் லாயக்கில்லாதவன் என்றெல்லாம் நினைக்க வேண்டாம்! ஜுரமோ, அல்லது வேறு ஏதாவது நோயோ ஒருவரைத் தாக்கினால் நாம் அந்த நபரை மதிக்காமல் இருப்போமா? நோய்க்கு மருந்தளித்து அவரைத் தேற்றுவோம்...அல்லவா? அது போல குடிப் பழக்கமும் ஒரு நோய்தான்.ஒரு நோயாளிக்கு எப்படி ஆறுதல் அரவணைப்பு, சிகிச்சை எல்லாம் தேவையோ அப்படித்தான் நாம் குடி நோயாளியையும் பார்க்க வேண்டும்'' அது ஒரு நோய். மனோதத்துவ, மருத்துவ சிகிச்சைக்குக் கட்டுப்படும் நோய்! குடும்பத்தினரின் உதவியுடன் சிகிச்சை பெற்றுக்கொண்டால் இந்தக் குடிநோயிலிருந்து விடுபடலாம். அதற்கு வழிமுறைகள் உள்ளது. சிறிது குடித்தால்தான் என்ன...? என்று விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம், அறுக்க முடியாத இரும்புச் சங்கிலியாக ஆகிவிடுகிறது. குடி நோயாளி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டு விட்டால் எளிதில் இந்த நோயிலிருந்து விடுபட்டு விடலாம். மொத்தம் மூன்று நிலைகளாக இந்நோயைப் பிரித்திருக்கிறோம். ஆரம்ப நிலை, இதில் மதுவின் தேவை அதிகரிக்கும், இரண்டாவது நிலை, மறதி நிலை, போதையில் செய்தது நினைவிலிருந்து அகன்று விடுவது, மூன்றாவது நிலை, தீவிர நிலை, இதில் உடல், மனம், மற்றும் சமூக ரீதியில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
தீவிர நிலையில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன?
இதனை குறைந்த பட்சம் மூன்று நிலைகளாக நாம் சிந்திப்போம்! ஒன்று சுய பாதிப்பு! இரண்டாவது குடும்பத்தை இந்நோய் எப்படி பாதிக்கிறது? மூன்றாவது, சமூகத்தை, அதாவது பொது இடங்கள், நண்பர்கள் மற்றும் பணிபுரியும் இடங்கள்.
இது இவ்வளவு தீவிரமான நோயா?
ஆமாம். முதலில் சுய பாதிப்பு பற்றிச் சிந்திக்கலாம்.
l தன் சுய மதிப்பை அவர் இழக்கிறார்.
l மற்றவர்களின் நம்பிக்கையை இழக்கிறார்.
l பணத்தேவை அதிகரிக்கிறது. எனவே பொய்சொல்லுதல், திருடுதல், போன்ற செயல்கள் அதிகரிக்கிறது.
l சின்னச் சின்னச் சந்தோஷங்களைக்கூட அடையாளம் காண முடியாமை.
l உடல் நடுக்கம்.
l பசியின்மை. ருசியின்மை.
l வேலையை இழத்தல்.
l குடிப்பதற்குப் பொய்க் காரணங்கள் கூறுதல்
l முக்கியமானஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட மறுத்து ஆல்கஹாலுக்கு முன்னுரிமை அளிப்பது.
l பயம், மற்றவர் மீது நம்பிக்கை இழத்தல், கோபம், தேவையற்ற பிரமை.
l மரணம் கூட ஏற்படலாம்.
இரண்டாவது, குடும்ப பாதிப்பு!
l குடும்ப உறவில் சிக்கல்.
l பொருளாதாரப் பிரச்னை.
l குடும்பத்தினர் குடி நோயாளி மீது
நம்பிக்கை இழத்தல்.
l சண்டை, தான் குடிப்பதற்கு மற்றவர் மீது பழிபோடுதல்.
l உறவினர்கள் குடிநோயாளியை ஏற்றுக்கொள்ள மறுத்தல்.
l குடும்ப உறவினர்களின் மனநிலையும் பாதிக்கப்படுதல்.
l குழந்தைகளின் மனநிலையும், கல்வியும் பாதிக்கப்படும்.
l மற்றவர்களின் வேலைகளும் பாதிக்கப்
படுகிறது.
மூன்றாவது சமூக பாதிப்பு
l பொது இடங்களில் மயங்கி விழுதல், வாந்தி எடுத்தல். சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துதல்,
l சோர்வு, உடல் உபாதை காரணமாக வேலைக்குச் செல்லாமை. உற்பத்திக் குறைவது.
l சக ஊழியர்களிடம் கோபம், எரிச்சல்.
l பணியில் கவனமின்மை, பணியில் தரக்குறைவு.
l தனியார், பொது நிறுவனங்கள், மற்றும் அரசு நிறுவனங்கள் அனைத்தும் பொருளாதார, மற்றும் உற்பத்தி முறையில் சரிவடைதல்.
l உயரதிகாரிகளிடம் கெட்ட பெயர்.
l சமூகத்தால் ஒதுக்கப்படுதல்
l எனவே குடிப்பழக்கம் உள்ளோருடனே(குடி நோயாளிகளுடனே) நேரம் செலவிடுதல்
l குடிநோயாளிகளின் தவறான வழிகாட்டுதல்கள், தத்துவங்களை நம்புதல், அதன்படி செயல்படுதல்.
l விபரீத விளைவுகள்.
(இந்த முறையில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார இழப்பு அளவுகடந்தது!)
இதற்குகான சிகிச்சை முறைகள்?
(அடுத்த இதழில் பேட்டி தொடர்கிறது)