பண்டைய மரபுகளை கொண்டாடும் விசாகாஹரி!
நம்முடைய பண்டைய கலாச்சார வேர்களை அழியாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் இசையுடன் ஹரிகதா காலட்சேபம் நடத்திவரும் விசாகாஹரி, தொழில் ரீதியில் ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட். அதுவும் தங்குதடை
நம்முடைய பண்டைய கலாச்சார வேர்களை அழியாமல் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் இசையுடன் ஹரிகதா காலட்சேபம் நடத்திவரும் விசாகாஹரி, தொழில் ரீதியில் ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட். அதுவும் தங்குதடையின்றி சரளமாக பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் கதா காலட்சேபம் நடத்துவது இவரது தனிச்சிறப்பாகும்.
அண்மையில் பெங்களூருவில் சவுடய்யா மெமோரியல் ஹாலில் இவர் "மாத்ரு தேவோ பவா' என்ற தலைப்பில் 90 நிமிடங்கள் தொடர்ந்து ஆங்கிலத்தில் நடத்திய ஹரிகதையை பார்வையாளர்கள் மெய்மறந்து ரசித்தனர்.
விசாகாஹரி சொல்கிறார்:
இதுவரை நான் ஹரிகதா நடத்திய நகரங்களிலேயே பெங்களூரூ எனக்கொரு புதுமையான அனுபவத்தை அளித்தது. அரங்கு நிறைய அமர்ந்திருந்த பார்வையாளர்கள் என்னுடைய ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து ரசித்தது எனக்குப் பெருமையாக இருந்தது.
இன்றைய உலகத்தினருக்குப் பண்டைய இதிகாச அன்னையர்களை நினைவுபடுத்த வேண்டுமென்பதற்காகவே இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்'' என்று கூறும் விசாகாவுக்கு ஆன்மிக குரு இவரது மாமனார் ஸ்ரீகிருஷ்ண பிரேமி சுவாமிகள்தானாம். அவரது கதாகாலட்சேபங்களைக் கேட்ட பிறகே தானும் காலட்சேபம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாம். இவருடன் அவ்வப்போது இவரது கணவர் ஸ்ரீஹரியும் சேர்ந்து காலட்சேபம் நடத்துவதுண்டு.
""என்னைப் பொருத்தவரை சராசரி இந்தியப் பெண்களைப் போன்றதுதான் என்னுடைய வாழ்க்கையும். ஒரே ஒரு வித்தியாசம் நான் தினந்தோறும் பயிற்சி செய்வதுண்டு. பயிற்சிக்காக தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வேலைகளை கவனிப்பேன். என்னிடம் படிக்க வருபவர்களுக்குப் பாடம் நடத்துவேன்.
நம்முடைய கலாசாரத்தை நம் குழந்தைகள் உணர வேண்டும் என்பதற்காகவே காலட்சேபம் நடத்துகிறேன். நம்முடைய பெருமைகளை நாம் நாள்தோறும் இழந்து வருகிறோம். பெற்றோர்களும் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை குறைத்து வருகின்றனர். இந்திய கலாசாரத்தின் வேர்களான நாம், எப்படி உடை அணிய வேண்டும்? எதை சாப்பிட வேண்டும்? என்பதையெல்லாம் மறந்து வருகிறோம்.
என்னுடைய காலட்சேபத்தின் மூலம் கல்வி மட்டுமல்ல பொழுதுபோக்கையும் அளிப்பதோடு குழந்தைகளிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென்பதுதான் நோக்கமாகும். முன்பெல்லாம் குழந்தைகள் தங்கள் உரிமைகளை வெளிப்படுத்தி வந்தார்கள். தற்போது உலகில் அனைத்து விஷயங்களையும் கற்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்'' என்று கூறும் விசாகா, தனக்கென்று ஒரு கைபேசியைக்கூட இதுவரை வைத்துக் கொள்ளாமலிருப்பதும் ஆச்சரியம்தான்.