மலையேற்றத்தில் சாதனை படைத்த இரட்டையர்!
ஐந்து கண்டங்களிலும் உள்ள ஏழு உயரமான மலைகள் அனைத்திலும் ஏறி சாதனை படைத்த முதல் இரட்டையர்களாக நூங்ஷி மற்றும் தாஷிமாலிக், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் 60ஆவது பதிப்பில் இடம் பெற்றுள்ள
ஐந்து கண்டங்களிலும் உள்ள ஏழு உயரமான மலைகள் அனைத்திலும் ஏறி சாதனை படைத்த முதல் இரட்டையர்களாக நூங்ஷி மற்றும் தாஷிமாலிக், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் 60ஆவது பதிப்பில் இடம் பெற்றுள்ளனர். அது மட்டுமல்ல வட மற்றும் தென் துருவங்களில் நடக்கும் பனிசறுக்குப் போட்டியிலும் வெற்றி பெற்ற முதல் இரட்டையர் என்ற பெருமையுடன் "அட்வென்சர்ஸ் கிராண்ட் ஸ்லாம்' மற்றும் "த்ரி போல் சேலஞ்ச்' போன்ற விருதுகளையும் பெற்றுள்ளனர்.
தாஷி மாலிக் சொல்கிறார்: ""முதன் முதலில் 18ஆவது வயதில் நாங்கள் மலையேறும் பயிற்சி பெற விரும்பியபோது பயிற்சியாளர்கள் எங்களை "எவரெஸ்ட் இரட்டையர்கள்' என்று தமாஷாக கூறுவதுண்டு. இதுவே எங்களை உலகில் உள்ள உயரமான மலைகள் மீது ஏறுவதற்கு உந்துதலாக அமைந்தது. இயற்கையிலேயே துணிச்சலை வெளிப்படுத்துவதென்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தணியாத ஆர்வமாகும். மலையேறுவது என்பது ஆண்களுக்கே உரிய சாதனை என்ற கருத்தை மாற்ற விரும்பினோம்'' என்கிறார் தாஷி மாலிக்.
நூங்ஷி சொல்கிறார்: "" பெண்களை பொருத்தவரை பெற்றோர் கண்காணிப்பிலேயே எப்போதும் இருப்பார்கள். துணிச்சலான செயல்களை செய்ய அவர்கள் அனுமதிப்பதும் இல்லை. அதிலும், பெண்கள் மலையேறுவது என்பது ஆபத்தானதும் கூட. நாள் கணக்கில் வார கணக்கில் ஆண்களுடன் தங்க வேண்டியிருக்கும். அவர்கள் தங்கும் கூடாரத்திலேயே ஒரு மூலையில் ரிஸ்க் எடுத்து தங்க வேண்டும்.
குறிப்பாக மருத்துவ உதவி, பீரியட் போன்றவை பெண்களை பொருத்தவரை சவாலான பிரச்னையாகும் ஆனாலும் நாங்கள் ரிஸ்க் எடுத்தோம். இமயமலை உச்சியில் 23 ஆயிரம் அடி உயரம் ஏறிய தினத்தன்று மாலை என்னுடைய பீரியட் தொடங்கியது. தாங்க முடியாத வலி. எப்படியோ சமாளித்து 11 மணி நேரத்திற்கு பின் பாதுகாப்பாக எங்கள் முகாமுக்கு வந்து சேர்ந்தது மறக்க முடியாத அனுபவம்'' என்கிறார் நூங்ஷி. அவரைத் தொடர்ந்து தாஷிமாலிக் சொல்வதாவது,
""எங்களுக்குள்ள கூடுதலான பிரச்னை எங்கள் இருவருக்குமே பார்வை கோளாறு உண்டு. இருவருமே "பவர் கிளாஸ்' அணிபவர்கள். மலையேறும்போது பனிப்பொழிவு ஏற்பட்டால் தலை, முகம் முழுக்க பனி படர்ந்து கண்களை மறைக்கும். சரியான பாதை
தெரியாது இருந்தாலும் சமாளித்தோம். ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள உயரமான மலைகள் மீது ஏறியபோது கிடைத்த அனுபவங்கள் மலையேறுவது என்பது பெண்களுக்கும் சாத்தியமானதுதான் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது.
அளவுக்கு மீறிய குளிரில் உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் நம்மை வலுப்படுத்திக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை அதிகரித்தது. சில நேரங்களில் எங்களுடன் மலையேற்றத்துக்கு வந்த ஆண்களை விட நேர்த்தியாகவே மலையேறியதாக பயிற்சியாளர்கள் எங்களை பாராட்டியதுண்டு'' என்கிறார் தாஷிமாலிக்.
""நாங்கள் இருவரும் இந்த சாதனையைப் படைக்க எங்களது பெற்றோர் செலவழித்த தொகை ரூ.2.5 கோடியாகும். இதற்காக அவர்கள் பணத்தைப் புரட்டியதும் சவாலான விஷயமே. அதே நேரத்தில் இவ்வளவு செலவழித்து அவர்கள் நம்மை அனுப்பும்போது தோல்வியடையக் கூடாதே என்ற பயமும் எங்களுக்குள் இருந்தது.
நாங்கள் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்கள் அல்ல. இதுவரை அனைத்துமே நினைத்தபடியே நடந்திருப்பதே பெரிய சாதனை'' என்று இருவரும் ஒருமித்த குரலில் கூறினர்.