முகப்பு
மகளிர்மணி

கடவுளுக்கு நன்றி! -உஷா உதூப்

உஷா உதூப் - 40 ஆண்டுகளுக்கு மேலாக பாப் மற்றும் ஜாஸ் இசை மூலம் ரசிகர்களை தன் கணீர் குரலால் வசியப்படுத்தியுள்ள

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

உஷா உதூப் - 40 ஆண்டுகளுக்கு மேலாக பாப் மற்றும் ஜாஸ் இசை மூலம் ரசிகர்களை தன் கணீர் குரலால் வசியப்படுத்தியுள்ள இவர் 17 இந்திய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆல்பங்களை வெளியிட்டிருப்பது பெரும் சாதனையாகும்.

""சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போதே பல மொழிகளைக் கற்கவும் பேசவும் ஆர்வம் ஏற்பட்டது. இது தனிநபரின் விருப்பம் என்றாலும் எப்படி வெளிப்படுத்துவது என்பதில் தயக்கம் இருந்தது. இசையின் மீது எனக்கு நாட்டம் ஏற்பட்டதற்கு இதுவே காரணமாக இருந்தது. நான் எப்போதுமே ரசிகர்களை நேசிப்பவள். அவர்களை சந்திப்பதன் மூலம் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வேன். இசை மூலமாக மக்களுடன் தொடர்பு கொள்வது பிடித்திருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் ரசிகர்களின் முகத்தில் தென்படும் திருப்தியும் மகிழ்ச்சியும் எனக்கு மனநிறைவைத் தருவதுண்டு'' என்கிறார் உஷா உதூப்.

 இவரது பாடல்களில் டோக்ரி மற்றும் காஸி மொழிகளைப் பயன்படுத்துவது குறைவு என்றாலும், அயல்நாட்டு மொழிகளான ஸ்பானிஷ், பிரெஞ்ச், ஜெர்மனி, இத்தாலி, ஜூலு, ஸ்வாஹிலி, சிங்களம், ரஷ்யன், உக்ரைன் மொழிகளை அதிகம் கலந்து பாடுவதுண்டு.

 தான் பாப் பாடகியாக உருவானதே ஒரு விசித்திரமான சூழ்நிலைதான் என்கிறார் உஷா.

""விடுமுறைக்காக ஒருமுறை சென்னை வந்திருந்தபோது எனது அத்தை அண்ணாசாலையில் உள்ள நைன் ஜெம்ஸ் ரெஸ்டாரெண்ட்டிற்கு அழைத்துச் சென்றார். அத்தையின் வற்புறுத்தல் காரணமாக அங்கிருந்த இசைக் குழுவினருடன் சேர்ந்து பாடினேன். இதுதான் எனது முதல் மேடை நிகழ்ச்சி. ஏகப்பட்ட வரவேற்பு. கைதட்டல்கள். ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் காஞ்சிபுரம் புடவை ஒன்றைப் பரிசாக அளித்து தொடர்ந்து ஒருவாரம் அங்கு பாடும்படி கேட்டுக் கொண்டார். இசை உலகில் நுழைய இதுவே எனக்கு வழி வகுத்தது''.

 அதைத் தொடர்ந்து பல ரெஸ்டாரெண்ட்களில் பாட இவருக்கு அழைப்புகள் வந்தபோது மறுக்க முடியவில்லை. இளைஞர்களிடையே இவரது குரல் பிரபலமானதால் இந்தியாவில் பல நகரங்களில் மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் அழைப்புகள் வந்தன. இனம், மொழி, மத வேற்றுமை இன்றி அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இன்றளவும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

 தன்னுடைய குரலில் தனித்தன்மை இருப்பதால்தான் ரசிகர்களைக் கவர்வதாகக் கருதும் இவர், தன் இசை ஆர்வத்திற்கு ஹாரி பெலாடோன்ட்டேவைக் குறிப்பிடுகிறார்.

""என்னுடைய முதல் இசை ஆசிரியர் ரேடியோதான். ரேடியோ மூலம் இசை நிகழ்ச்சிகளைக் கேட்டு ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதோடு, ""சாமி சகோதரிகள்'' என்றழைக்கப்பட்ட எனது மூத்த சகோதரிகள் இந்திரா மற்றும் உமா ஆகியோர் நடத்தி வந்த இசை நிகழ்ச்சிகளும் எனக்கு ஊக்கமளித்தது.  என்னுடைய வாழ்க்கையில் நான் பாடகியாக வேண்டுமென்று நினைத்ததே இல்லை. இப்படியொரு வாய்ப்பை அளித்து பிரபலமடைந்ததற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். தற்போது பழைய பாடல்களுடன் புதிய பாடல்களை இணைத்து ""கிஸ் ஆப் பயர், டைமண்ட்ஸ் பார் எவர், யூ ஒன்லி லிவ் டுவைஸ்'' போன்ற பாண்ட் சீரியல் பாடல்கள் வெற்றியைப் போல் இசையமைத்துத் தயாரித்து வருகிறேன். இந்தப் பாடல்கள் வெளியீட்டின்போது இசைத்துறையில் பின்னணியில் உள்ள தொழில் நுட்பக் கலைஞர்களை கௌரவிக்க விரும்புகிறேன். இசை ஆல்பம் வெற்றியில் மூல காரணமாகவுள்ள தொழில் நுட்பக் கலைஞர்கள், சவுண்ட் என்ஜினீயர்கள், செட் அமைப்பாளர்கள்தான் முக்கியம் என்பதை மறக்கக் கூடாது'' என்கிறார் உஷா உதூப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.