முகப்பு
மகளிர்மணி

மீண்டு வந்த குசுமா!

சிறுவயது முதலே எதுவானாலும் உடனடியாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட பெங்களூருவைச்

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

சிறுவயது முதலே எதுவானாலும் உடனடியாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட பெங்களூருவைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் குசுமா (31) தன்னுடைய கர்ப்பப்பை பிரச்னை காரணமாக நிறைவேறாமல் இருந்த நடன அரங்கேற்றத்தை எட்டாண்டுகள் கழித்து சாதித்துள்ளார்.

 கலைக் குடும்பத்தில் பிறந்த குசுமா, அவரது தாத்தா எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் உந்துதல் காரணமாகவும் நடனத்தின் மீது இவருக்கிருந்த ஆர்வத்தாலும் ஐந்து வயதிலேயே "அருண்கலா விருது' என்ற நடனப் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் 2000-ஆம் ஆண்டில் நடனக் கலைஞர் வந்தியா ஸ்ரீநாத் மேற்பார்வையில் நான்காண்டுகள் பயிற்சி பெற்றார்.

 2004-ஆம் ஆண்டில் எதிர்பாராதவிதமாக இவரது கனவுகள் நொறுங்கின. ""என்னுடைய சலங்கைகள் ஒலியிழந்தன. உடல் முழுவதும் சொல்ல முடியாத வலி. கர்ப்பப்பையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கால்களில் சுளுக்கு ஏற்பட்டதால், நடனத்தின் மீதிருந்த என்னுடைய ஆர்வம் தடைபட்டது'' என்கிறார் குசுமா.

 எட்டாண்டுகள் படுத்த படுக்கையாக மருத்துவ உதவியோடு தெய்வத்தை நம்பி வந்த குசுமாவுக்கு ஆறுதலாக நம்பிக்கையைக் கொடுத்தவர் அவரது அம்மா மட்டுமே. ஒரு கட்டத்தில் தற்கொலைக்குக்கூட முயற்சித்துள்ளார்.

""உடல் முழுக்க வலி இருந்தாலும் மீண்டும் எழுவேன் என்ற நம்பிக்கையை என்னுடைய அம்மா எனக்களித்ததைப்போல், பெங்களூருவில் உள்ள ஸ்ரீமாருதி மருத்துவமனை டாக்டர் விஷ்ணு ஹயகிரீவ் மேலும் நம்பிக்கை அளித்தார். கர்ப்பப்பையின் தசைப்பகுதியின் உட்புறத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் காரணமாகவே இந்தப் பிரச்னை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினாலும் அளவு கடந்து வெளியேறிய ரத்தமும், வலியும் என்னை முழுமையான பெண்ணாக வைக்க முடியவில்லை.

நீண்ட பரிசோதனைக்குப் பின்னர் கர்ப்பப்பையில் ஒரு பகுதியை அகற்றுவதென்றும் மறுபகுதியின் மூலம் மற்ற பெண்களைப்போல் கர்ப்பமுற்று வாழ்க்கை நடத்தலாம். கர்ப்பப்பையை முழுமையாக அகற்ற வேண்டாம் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால், இந்தப் பரிசோதனைக்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு பகுதியை அகற்றினாலும் வலி இருந்துகொண்டேதான் இருக்கும். திருமணமாகி குழந்தையைப் பெற்றுக்கொள்வது அத்தனை சுலபமல்ல என்று எனக்குத் தோன்றியது. இந்த வலியைப் பொறுத்துக் கொள்வதைவிட உடனடியாக இறப்பதே மேல் என்று தோன்றியதால் கர்ப்பப்பையை முழுமையாக அகற்றும்படி கேட்டுக் கொண்டேன்.

இறுதியில் என் விருப்பப்படியே கர்ப்பப்பை அகற்றப்பட்டது. ஆறு மாதத்திற்குப் பின்னர் உடல் நலம் தேறிய பின் 2013-ஆம் ஆண்டில் பிஏ.எல்எல்பி படிப்பைத் தொடர்ந்தேன். இருந்தாலும் மீண்டும் நடனமாட வேண்டும் என்ற ஆசை மனதிலிருந்து அகலவில்லை. ""மீண்டும் நடனமாட முயற்சிக்க வேண்டாம்'' என்று டாக்டர்கள் அறிவுறுத்தினாலும், வேண்டுமானால், மற்றவர்களுக்கு நடனப் பயிற்சியளிக்க முயற்சியுங்கள்'' என்று கூறினார். மீண்டும் டாக்டர் ஹயகிரீவைச் சந்தித்தபோது காலில் தொடர்ந்து இருக்கும் சுளுக்கைப் போக்க நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும்படி கூறினார்.

 ""இந்த அறிவுரை என்னுடைய வாழ்க்கையை மாற்றும் என்று அப்போது நான் கருதவில்லை. இந்த நீச்சல் பயிற்சி என் கால்களில் இருந்த சுளுக்கை மட்டும் நீக்கவில்லை. என்னுடைய நம்பிக்கையையும் மீட்டுத் தந்தது. வக்கீல் பயிற்சி பெறும்போதே யோகாவையும் கற்று வந்தேன். வீட்டிலேயே நடன அசைவுகளைச் செய்யத் தொடங்கினேன். என்னுடைய சிநேகிதியும் நடனக் கலைஞருமான தீபா பட்டை சந்தித்தேன். பரத நாட்டியத்திற்கே உரிய சலங்கை மற்றும் புடவையைக் கட்ட முதலில் சிரமப்பட்டாலும், சிநேகிதியின் பொறுமையான அறிவுரையால் அவரது நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். முதலில் பார்ட்னர்ஷிப்பில் நடன நிகழ்ச்சியை நடத்திய பின்னர் இரு மாதங்களுக்கு முன்பு அரங்கேற்றத்தையும் முடித்துவிட்டேன். விரைவில் தனிநபராக நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தும் எண்ணமும் இருக்கிறது. என்னுடைய தாத்தாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகவே கருதுகிறேன். இதைவிட மகிழ்ச்சி வேறு ஏதுமில்லை'' என்கிறார் குசுமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.