டிசிஎஸ் நிறுவனம் மே 15 அன்று பெங்களூரில் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஒன்றை நடத்தியது. அதில் சர்வதேச, இந்திய ஓட்டக்காரர்கள் கலந்து கொண்டார்கள். பெண்கள், முதியோர் என்று பல பிரிவுகளில் ஓட்டம் நடந்தது. அதில் அதிசயிக்க வைத்தவர் ஷாலினி சரஸ்வதி. முப்பத்தேழு வயது பெங்களூரு மங்கை.
ஷாலினிக்கு வலது கையில் மணிகட்டுக்குக் கீழே கை கிடையாது. இடது கை முழங்கைக்குக் கீழ் இல்லை. கால்கள் முழங்காலுக்குக் கீழ் ஒரு முக்கால் அடி இருக்கும். குதிகால், பாதங்கள் கிடையாது. ஆனால் எதையாவது சாதிக்க வேண்டும் ... குறிப்பாக தன்னை வீழ்த்திய விதியின் முகம் பார்த்து எனக்கு கைகள் இல்லை கால்கள் இல்லை .. நடக்கிறேன்... ஓடுகிறேன்.. என்று சொல்லி விதியைத் தோற்கடிக்க வேண்டும்.. என்பது ஷாலினியின் லட்சியம்.
ஷாலினியே சொல்கிறார்:
""2013 வரை உடல் ஆரோக்கியமாகத்தான் இருந்தேன். வேலைக்குப் போவது, ஷாப்பிங் போவது என்று ஜாலியாக பொழுது போய்க் கொண்டிருந்தது. கருவுற்ற சமயத்தில் திருமணத்தின் நான்காவது ஆண்டு விழா வந்தது. சந்தோசம் பொங்க, அதை கம்போடியாவில் கொண்டாடிவிட்டு பெங்களூரு திரும்பினோம். சில நாட்களில் காய்ச்சல் என்னைப் படுத்தத் தொடங்கியது. டாக்டர்கள் காய்ச்சலை டெங்கு என்று நினைத்தார்கள். அதற்கான சிகிச்சை அளித்தார்கள். மீண்டும் சுகவீனம். அப்போதுதான், என்னைத் தாக்கி இருப்பது, டெங்கு இல்லை. பத்து லட்சத்தில் ஒருவருக்கு வரும் ""தண்ஸ்ரீந்ங்ற்ற்ள்ண்ஹப்'' பாக்டீரியாவினால் வரும் பாதிப்பு என்று. மரணம் ஏறக்குறைய நிச்சயமாகி விட்டது. ஆனால் தரமான தீவிர சிகிச்சையினால், மரணத்தை விரட்டி அடித்தேன். அதற்கு நான் கொடுத்த விலை மிக மிக அதிகம்.
நடைப்பிணமாய் வீட்டிற்கு திரும்பிய மூன்று மாதத்திற்குள் சோதனைகள் மீண்டும் என்னை துரத்தின. டாக்டர்கள் பலரைக் கண்டேன். எல்லா கடவுள்களிடமும் என்னைக் காப்பாற்றும் படி வேண்டினேன். கோயில்களில் காணிக்கை செலுத்தினேன். மனதில் கொஞ்சம் சஞ்சலம் குறைந்தது. எல்லாம் சரி ஆயிருச்சு, இனி பயமில்லை... என்று எண்ணியபோது, மூக்கு விபரீதத்தைக் கண்டு பிடித்து விட்டது. முதலில் பாதிக்கப் பட்டது வலது கை. தசைகள் உயிர்த்தன்மையை இழந்து அழுகும் நிலையை அடைந்தன. அதனால் நாற்றம் உருவானது. மனதள விலும் உடல் ரீதியாகவும் தளர்ந்து போனேன்.
எனக்கே என் மேலும் பிறர் மேலும் வெறுப்பு... எனக்கு மட்டும் ஏன் இப்படி .. நண்பர்கள், குடும்பத்தினர் என என்னை யாரும் பார்ப்பதை தவிர்த்தேன். தனிமையில் என்னைச் சிறைப்படுத்தி அழுவேன். யாருக்காவது கெடுதல் செய்திருப்பேனோ... உன் நாக்கு கருநாக்கு... ஏதாவது சொல்லி வைக்காதே பலிச்சிறப் போகுதுன்னு தோழிகள் சொல்வதுண்டு. அப்படி ஏதாவது பலித்து, பாதிக்கப்பட்டவர்கள் பதிலுக்கு எதிர் சாபம் விட்டிருப்பார்களோ... என்றெல்லாம் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.
திடீரென்று வலதுகையில் விரல்கள் தானாக உதிர்ந்து விழுந்தன. வலது உள்ளங்கையின் முக்கால் பாகத்தை அந்த பாக்டீரியாவின் பாதிப்பு தின்று விட்டது. அடுத்த தாக்குதல் இடது கைக்கு மாறியது. முழங்கைக்குக் கீழ் நான்கு அங்குலம் போக ஏனைய பகுதிகளை அறுவை சிகிச்சை செய்து மாற்றினார்கள். இந்த அறுவை சிகிச்சை நடந்த போது, வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து எனக்குத் தரப் படவில்லை. காரணம், எங்கே திசுக்களில் உணர்வு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள, எங்கு அறுவை சிகிச்சை செய்தால் வலியை உணர்கிறேனோ அந்தப் பகுதி வந்ததும் அறுவை சிகிச்சையை நிறுத்தி, எல்லா திசுக்களும் ஆரோக்கியமாக இருக்கிறதா... மீண்டும் பாக்டீரியா தொத்திக் கொள்ள வாய்ப்புள்ளதா என்று பரிசோதனை நடத்தி.. ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தி கட்டு போடுவார்கள். இரண்டு கைகளைக் காவு வாங்கிய பின்னும், பாக்டீரியாவின் பாழும் பசி அடங்கவில்லை. அதன் அடுத்த குறி என் கால்கள். பாக்டீரியா தாக்குதலினால், கால்கள் துவளத் தொடங்கின. ரண வேதனை. டாக்டர்கள் இதை எதிர் பார்த்தார்கள். ஆனால் நான் எதிர்பார்க்கவில்லை.
கால்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் நாளில், கால் நகங்களுக்கு வர்ணம் பூசி அழகு பார்த்தேன். குழந்தைப் பருவத்தில் தத்தி தத்தி நடை பழகிய கால்கள்.. அம்மா அப்பா நெஞ்சில் உதைத்த கால்கள்... சைக்கிள் ஓட்டிய கால்கள்... புல்தரையில், பீச்களில் அழுத்தம் கொடுத்து நடந்த கால்கள்... காலில் கொலுசு போட்டு அதன் கிலுக்கத்தைக் கேட்க குலுக்கப்பட்ட கால்கள் .. காலில் சலங்கைக் கட்டி ஜல் ஜல் என்று பாரத நாட்டியம் ஆடிய கால்கள்... என்னை விட்டு அந்நியமாகப் போகின்றன...
என் கண் முன்பு இரண்டு கால்களின் முட்டிற்குக் கீழ் வெட்டி மாற்றினார்கள்.... இந்த இரண்டு கால்களுடன், கொலை வெறியுடன் செயல்படும் பொல்லாத பாக்டீரியாவுக்கும் நிரந்தர விடை கொடுத்தேன்.
உடல் உறுப்புகள் அகற்றப்பட்ட பிறகு முகம் பார்க்கும் கண்ணாடியை இரண்டு வருடங்களாகப் பார்க்கவில்லை. நான் உயிர் பிழைத்தது என் கதையை சொல்லத்தானோ என்னவோ... என்னைக் குழந்தை மாதிரி அம்மாவும், அப்பாவும், கணவரும் கவனித்துக் கொண்டனர். இவர்கள்தான் என்னை ஆழ்ந்த துயரத்திலிருந்து மீட்டவர்கள். இவர்கள் துணையுடன்தான் இப்போது ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கிறேன்.
ஐடி நிறுவனம் ஒன்றில் துணை பொது மேலாளராக பணி புரிகிறேன்... இப்படி நடந்து விட்டதே.. என்று நொந்து போகாமல், இனி நடக்க வேண்டியது என்ன.. என்று சிந்திக்கும் பக்குவம் என்னிடம் வந்திருக்கிறது. பழைய குறும்பு... நட்பு வட்டம் அனைத்தையும் பேணி வருகிறேன்... வார்ட்ரோபில் பொருத்தப்பட்டிருக்கும் ஆளுயரக் கண்ணாடியில் முகம் பார்க்கும் தைரியம் வந்துவிட்டது.
உடல் ஊனமானாலும் மனது ஊனமாக அனுமதிக்கவில்லை. சுவரில் அடித்த பந்து மாதிரி எகிறித் திரும்ப ஆசை. அப்போதுதான் பெங்களூருவில், ஒன்பதாவது டிசிஎஸ் பத்தாயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் குறித்து கேள்விப் பட்டேன். அதில் ஏன் நாம் பங்கேற்கக் கூடாது என்று மனதில் தோன்றியது. போட்டிகள் எல்லா துறையிலும் அதிகரித்து விட்ட இன்றைய கால கட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.
நம்பிக்கை, விதைகளை விதைக்கும் என்ற முடிவில் ஓட்டம் பயிற்றுவிக்கும் கோச் ஐயப்பாவைச் சந்தித்தேன். அவரும் எனது ஆர்வத்தைப் புரிந்து கொண்டு என்னை பயிற்சி பெற அனுமதித்தார். ஏனைய ஓட்டக்காரர்களைப் போலவே என்னையும் அவர் சமமாக நடத்தினார். பயிற்சிகள் தந்தார். நான் மாற்று திறனாளி என்பதற்காக சலுகைகள் எதுவும் தரவில்லை. ஓடுவதற்காக, பிளேட் (ல்ப்ஹற்ங்) எனப்படும் செயற்கைக் கால் தேவை. இது ஜெய்ப்பூர் செயற்கைக் காலைவிட வேறுபட்டது. மிகவும் மேம்பட்டது. கார்பன் இழைகளால் பிரத்யேகமாக செய்யப்படுவது. விலை சுமார் 25 லட்சம் ரூபாய். ஜெர்மனி நாட்டு நிறுவனமான ஞற்ற்ர்க்ஷர்ஸ்ரீந் எனக்குக் கடனாக இந்த விசேஷமான கால்களை தந்து உதவியுள்ளது. பயிற்சியின் போது, பத்தாயிரம் மீட்டர் ஓட்டத்தில் ஓடி, அந்த தூரத்தை நான் 90 நிமிட நேரத்தில் கடப்பேன் என்ற உறுதி ஏற்பட்டது. எனது அடுத்த லட்சியம் 2020-இல் நடக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான்'' என்கிறார் ஷாலினி சரஸ்வதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.