கேரக்டருக்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொள்வேன்... சொல்கிறார் : ஜீவிதா
இப்போது "பாசமலர்', "கைராசி குடும்பம்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறேன் என்கிறார் ஜீவிதா. மேலும் தொடர்கிறார்...
ஏவி.எம் தயாரித்த "மனதில் உறுதி வேண்டும்' என்ற சீரியலில்தான் முதன்முதலாக அறிமுகமானேன். அதைத் தொடர்ந்து மீண்டும் ஏவிஎம்மின் "வைராக்கியம்' தொடர். அதன்பிறகு "ஆபீஸ்', "தேவதை', "பைரவி', "63 நாயன்மார்கள்', "சித்திரம் பேசுதடி' என தொடர்ந்து வந்த நான்,
இப்போது "பாசமலர்', "கைராசி குடும்பம்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறேன் என்கிறார் ஜீவிதா. மேலும் தொடர்கிறார்...
பாசிட்டிவ்-நெகடிவ் எந்த கதாபாத்திரம் பிடிக்கும்?
பாசிட்டிவான வேடங்கள்தான் எனக்கு அதிகமாக கிடைத்து வருகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒன்று நெகடிவாகிட வேண்டும், இல்லையேல் பாசிட்டிவாகிவிட வேண்டும். இப்படி முழுசாக மாறி நடிக்கும்போதுதான் அந்த கேரக்டர் பேசப்பட்டு பிரபலமாக முடியும். மேலும், எனக்கு பிடித்த ரோல் என்றால் நெகடிவ்தான். காரணம், அழுறதை விட அழ வைக்கிறவங்களைத்தான் அதிகமாக கவனிப்பார்கள்.
அதேபோன்று கைராசி குடும்பம் தொடரில் நடித்துவரும் இன்ஸ்பெக்டர் ரோலும் ரொம்ப பிடிக்கும். இந்த மாதிரி இன்னும் நல்ல நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. மேலும், எனது உயிர் உள்ளவரை ஏதாவது ஒரு வேடத்தில் நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும்.
உங்களை அடையாளப்படுத்திய வேடம் எது?
எந்த வேடம் கொடுத்தாலும் அதில் நேயர்களின் பாராட்டு கிடைக்கும் வகையில் நான் நடித்து விடுவேன். அதில் எந்த குறையும் வைத்ததில்லை. அந்தவகையில, தற்போது பாசமலர் தொடரில் கூட நான் நடித்து வரும் உமா கேரக்டர், சிந்து பைரவி படத்தில் சுகாசினி நடித்தது போன்ற தியாகம் செய்கிற வேடம். நிறைய விட்டுக்கொடுத்து நடிக்கிற வேடம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உங்களது நடிப்பைப்பார்த்து விட்டு நாங்களெல்லாம் அழுதோம் என்று என்னை வெளியிடங்களில் பார்க்கும் நேயர்கள் சொல்கிறார்கள். நான் நிஜத்திலேயும் அப்படித்தான், அதனால்தான் இந்த கதாபாத்திரத்தில் எனது நடிப்பு ரொம்ப இயல்பாக வெளிப்பட்டு நேயர்களை கவர்ந்து வருகிறது என நினைக்கிறேன். அதுபோன்று ஒவ்வொரு கேரக்டர்களுக்கேற்ப என்னை பக்காவாக மாற்றிக்கொண்டு நடிப்பேன். ஏனோதானோவென்று எப்போதும் இருக்க மாட்டேன்.
இந்தி சீரியல்களில் இருக்கும் பிரமாண்டம் இங்கு இல்லையே?
அங்குள்ள சீரியல்களில் நடிப்பவர்கள் எந்த அளவுக்கு பிரமாண்டமான உடைகளை அணிந்து நடித்தாலும் அதற்கேற்ற தொகையை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் நம்ம சீரியல்களில் அப்படியல்ல. பட்ஜெட்டுக்குள் அடக்கி விடுகிறார்கள். அதோடு அவர்களுக்கு நிறைய நேரம் கொடுப்பார்கள். இங்கே அப்படியில்லை. இத்தனை நாளுக்குள் இத்தனை எபிசோடு எடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆக, போதிய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தால் இந்தி சீரியல்களில் நடிகர் நடிகைகள் நடிப்பது போன்று நம்ம ஊர் நடிகர் நடிகைகளாலும் பிரமாண்டமாக உடை, நகைகளை அணிந்து நடிக்க முடியும். மற்றபடி அவர்களை விட, அழகிலும், திறமையிலும் நாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை.
ரோல் மாடல் ?
நதியா, ராதா எனக்கு ரொம்ப பிடித்தமான நடிகைகள். ஹோம்லியாக அனைவரையும் கவர்ந்து விடுவார்கள். அவர்களை மாதிரி ஒரு நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
சினிமா வாய்ப்புகள் வருகிறதா?
ஒரு சில படங்களில் சின்னசின்ன கேரக்டரில் நடித்துள்ளேன். சின்னத்திரை தொடர்களில் நடிக்க பிரச்னை ஏற்படாத வகையில் படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடிக்கிறேன். அதனால் பெரிய ரோல்களில் கவனம் செலுத்த முடியவில்லை.