மகளிர்மணி

என் வேகத்துக்கு காரணம் சினிமா கனவுகள்!

"சாலிகிராமத்தில் இருந்து தியாகராய நகர் அன்னை இல்லத்துக்கு செல்ல அரை மணி  நேரம் பிடிக்கும்...

ஜி. அசோக்

"சாலிகிராமத்தில் இருந்து தியாகராய நகர் அன்னை இல்லத்துக்கு செல்ல அரை மணி  நேரம் பிடிக்கும்... அந்த நேரத்தில் பேசலாமா...?' கேள்வி கேட்டு எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார் விக்ரம்பிரபு. "வீரசிவாஜி', எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கும் "முடிசூடா மன்னன்', சொந்த தயாரிப்பில் "நெருப்புடா' என பரபரத்து பயணிக்கிறது விக்ரம்பிரபுவின் கார்...

நிதானமான கதை தேடல்கள், உங்கள் ஸ்டைல்... இருந்தும், சின்ன சின்ன சரிவுகள்... எப்படி எடை போடுறீங்க...?

"வாகா' படத்துக்காக நான் பட்ட கஷ்டங்களை சொன்னால் உங்களுக்கு மிகையாக கூட தெரியலாம். உள்ளே போய் அலசி, ஆராய்ந்து இதுவெல்லாம் நடந்தது.... இப்படியெல்லாம் இருந்ததென... என்னால் சொல்ல முடியாது. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்குமான உழைப்பு அந்த படத்துக்கும் இருந்தது. நல்ல கதை, எல்லை தாண்டிய நேசம், தேசப் பற்று என கதைக் களம் அமைந்ததும் சாதிக்க வேண்டும் என்கிற வெறிதான் இருந்தது. அதனால் கதையின் எண்ணங்களில் நுழைந்து உண்மையாக வெளியே வந்தேன். கதையும், கதாபாத்திரமும் தந்த சவால்களை சரியாகவே கையாண்டேன். சிலருக்கு பிடிக்கவில்லை. பலருக்கு பிடித்திருக்கிறது. எந்தப் படத்துக்கும் இரண்டு வகையான விமர்சனங்கள் உண்டு. இந்தப் படத்துக்கும் அது மாதிரிதான். எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி நடிக்கத்தான் ஆசை. அது "மிஸ்' ஆகும் போது கவலைதான். ஒரு நடிகனுக்கு எல்லாம் சரியாக அமைந்து விட்டால், கடவுளைப் பக்கத்தில் பார்க்கிற அனுபவம் கிடைத்து விடும். அந்த தருணத்துக்கான பயணமாக அடுத்தடுத்த தேடல்கள் இருக்கும்.

அடுத்து வருகிற "வீர சிவாஜி' எப்படியிருக்கும்... தாத்தாவின் பெயரில் வருகிற படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருக்குமே...? 

சமீபமாக தமிழில் இப்படியொரு கதைக் களம் தாங்கி ஒரு சினிமா வந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு  அருமையான களம். அற்புதமான கதை. கனவுகளைத் துரத்திப் பிடிக்கிற ஓர் இளைஞனின் யதார்த்த வாழ்க்கைதான் இது. அவ்வளவு நேர்த்தியாக படமாகியிருக்கிறது. கதைக்கு அப்படியே ஒளி உருவம் கொடுத்து விடாமல், இன்னும் என்னவெல்லாம் சுவாரஸ்யம் சேர்க்க முடியுமோ, அதை செய்து முடித்திருக்கிறோம். யாராக இருந்தாலும் வாழ்க்கையை காதலிக்க வேண்டும். அப்போதுதான் துன்பம் ஓடி ஒளிகிற விஷயமாக இல்லாமல், கடந்து வர வேண்டிய அனுபவமாக இருக்கும். இப்படியான பல செய்திகள் படத்தில் இருக்கின்றன. "தகராறு' படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்குநர். நல்ல சினிமாக்களுக்கான தேடல் உள்ளவர். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரிப்பாளர். ஷாம்லி, ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் சக நடிகர்கள். இசைக்கு இமான். உற்சாக வேகத்தில் வந்திருக்கிறது படம்.

எதிர்பார்ப்பே இல்லாமல் வருகிற படங்கள் ஜெயிப்பதும், பல விளம்பர நுணுக்கங்களோடு வருகிற படங்கள் தோற்பதும் தொடர்கிறது... இந்த நிலையில் படம் தயாரிக்க வர்றீங்க...?

எந்தப் படங்களை ஆதரிக்க வேண்டும் என்பது ரசிகர்களுக்கு தெரிகிறது. அது தெரியாமல் ரசிகர்கள் இப்படித்தான் என கணக்கு போடும் போதுதான் தவறுகள் நேருகின்றன. நல்லப் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களின் ஆதரவு உண்டு. "கும்கி', "இவன் வேற மாதிரி' படங்களுக்கு அந்த வகையில்தான் வெற்றி கிட்டியது. இந்த நடிகரின் படத்தை போய் பார்க்கலாம் என்ற நம்பிக்கை மட்டும்தான் தலைமுறை தாண்டி நிற்கிற அற்புதம். அதுபோன்ற வார்த்தைகளுக்காகத்தான் இன்னும் வேகமாக ஓட தயாராகி வருகிறேன். அதற்கு சொந்த தயாரிப்பு நிறுவனம் இருந்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. அதற்காகத்தான் இந்த தயாரிப்பாளர் அவதாரம். இப்படியான வேகத்துக்கு என் சினிமா கனவுகள்தான் காரணம். 

சிவாஜி பேரன், பிரபுவின் மகன் இந்த அடையாளங்களோடுதானே இப்போதும் உங்களை அணுகுவார்கள்...?

அது இல்லாமல் எப்படி... உண்மையும் அதுதானே!  திறமையை மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்து இறங்கியவர் என் தாத்தா. அவரின் வறுமையை பகிர்ந்து கொண்ட நண்பர்கள். வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட பாட்டி. சிரிப்பிலேயே சந்தோஷப்படுத்துகிற குழந்தைகள் என சில அர்த்தமுள்ள பக்கங்களை இந்த சினிமாதான் கொடுத்திருக்கும். திறமை இருந்தால் ஒருவன் எந்த இடத்துக்குப் போகலாம் என்பதற்கு என் தாத்தாவின் வாழ்க்கை சிறந்த உதாரணம். எல்லாரும் ரோல் மாடல்களை வெளியில் போய் தேடுவார்கள். எனக்கு அப்படியில்லை. தூக்கி வளர்த்த தாத்தா, அன்பில் மகிழ்ந்த அப்பா என எல்லோரும் வீட்டுக்குள்ளேதான் இருந்தார்கள். சினிமா உலகத்தில் வித விதமான குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் வந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள். அந்த ஆயிரக்கணக்கான நடிகர்கள், லட்சக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் விசித்திரமான வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போன கலைஞன் என் தாத்தா. அங்கிருந்து வந்தவன் என்கிற பொறுப்புதான் என் முன்னால் இப்போது இருக்கும் பெரிய சவால். அதை துரத்தி அடைகிற வரை ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT