"தாரை தப்பட்டை' கருப்பையா... "மருது' ரோலக்ஸ் பாண்டியன்... என அடுத்தடுத்த பாய்ச்சல்களில் கவனம் ஈர்க்கும் கலைஞன் ஆர்.கே.சுரேஷ். இப்போது "தனிமுகம்' படத்தின் மூலம் கதாநாயகன் அவதாரம் எடுக்கிறார். "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "சலீம்', "தர்மதுரை' என தயாரிப்பாளராகவும் கவனம் கொள்ளும் படைப்பாளி...
தயாரிப்பாளர், வில்லன், இப்போது கதாநாயகன்... என அடுத்தடுத்த கட்டம் போகிறீர்கள்... இதுவெல்லாம் ஏற்கெனவே திட்டமிட்டவையா...?
திட்டங்கள் இல்லாமல் பயணங்கள் எப்படி... நல்ல சினிமாக்கள் பற்றி நிறைய கனவுகள் இருந்தது. அதற்கு நான் சின்ன வயதில் இருந்து பார்த்து வந்த சினிமாக்கள்தான் காரணம். ஒரு கட்டத்தில் சினிமாவை மீறி வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டேன், இருந்தாலும் சினிமா ஆசை அவ்வப்போது எட்டிப் பார்க்கும். அதைத் தீர்த்துக் கொள்ளத்தான் சினிமாவுக்கு வந்தேன். இப்போது என் தயாரிப்புக்கும், நடிப்புக்கும் கிடைத்திருக்கிற வரவேற்பு நான் எதிர்பார்த்த ஒன்றுதான். ஏன் என்றால் என்னிடம் எப்போதுமே மெனக்கெடல்கள் உண்டு. எதை தொட்டாலும் ஜெயித்து விட வேண்டும் என்ற வேட்கை இருக்கும். கல்லூரி போவதற்கு முன்பே ஆக்டிங் கோர்ஸ் சேர்ந்தேன். "பவர்
ஃபாஸ்ட்' மாஸ்டர் மாதிரியான ஆளுமைகளிடம் இன்னப் பிற பயிற்சிகளை எடுத்துக் கொண்டேன். "புதுப்பேட்டை' படத்தில் அடியாட்களில் ஒருவராக நடிக்க வாய்ப்பு வந்தது. கொஞ்சம் பெரிய வேடமாக இருக்க வேண்டும் என நினைத்ததால், அதில் நடிக்கவில்லை. "சாட்டை' உள்ளிட்ட பல படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்திருக்கிறேன். கொஞ்சமாக காசு சேர்த்து "சலீம்' படம் தயாரித்தேன். "பரதேசி' விநியோகஸ்தராக இருந்த போதுதான் "தாரை தப்பட்டை' வாய்ப்பை தந்தார் பாலா அண்ணன். இப்படி என் பயணம் பெரியது.
பெரிய தயாரிப்பு நிறுவனங்களே யோசிக்கும் கால கட்டத்தில், அடுத்தடுத்து நிலையான வெற்றிகளை பெறும் தயாரிப்பாளராக வலம் வருகிறீர்கள்....?
என் வாழ்க்கையில் நஷ்டங்களும் இருக்கின்றன. நஷ்டம் தந்தாலும் நல்லப் படங்களை எடுத்தவன் என்பதுதான் என் அடையாளம். இதுவரைக்கும் நான் எடுத்த நல்லப் படங்களின் வெற்றி "தர்மதுரை' படத்தில் கிடைத்திருக்கிறது. நிலையான வெற்றிகள் இப்படித்தான் வரும். "ஸ்டுடியோ 9 தயாரிக்கிற படங்களுக்கு என் குழந்தைகளை கூட்டிட்டுப் போவேன்...'' என்று சொல்கிறார் ஒரு அப்பா. அந்த நம்பிக்கைதான் தலைமுறை தாண்டி நிற்கிற அற்புதம். அதைக் கேவலம் காசுக்கு விற்பதற்கு எனக்கு மனசு இல்லை. லாபம் சம்பாதிக்க வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என நான் சினிமா தயாரித்தால் எனக்கு பணம் சேர்ப்பது நிர்பந்தமாகி விடும். நண்பர்கள் உதவிக்கு வந்தார்கள். என்னிடமும் கொஞ்சம் காசு இருந்தது, அதையெல்லாம் போட்டு என்ன காரணத்துக்காக சினிமா தயாரிக்க வந்தேனோ... அந்த இலக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக வந்தடைந்துகொண்டே இருக்கின்றன. எப்போதுமே வெற்றிகளால்தான் ஒரு மனிதன் அழகாக வேண்டும் என்று நினைப்பேன். அந்த தருணத்தை நோக்கி நல்ல படங்கள் தயாரித்துக் கொண்டே இருப்பேன். எல்லாம் ரசிகர்களின் கையில்தான் உள்ளது.
அடுத்து "தனிமுகம்' மூலம் கதாநாயகன்...?
ஏதோ மாய மந்திரம் நடந்தது மாதிரிதான் இதுவும். "தாரை தப்பட்டை' படத்தின் மூலம் எனக்கு கிடைத்த வெளிச்சம்தான் இதை அரங்கேற்றியுள்ளது. மலையாள இயக்குநர் சஜித். ஷாஜி கைலாஷின் பல படங்களுக்கு இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ஒருநாள் தேடி வந்து கதை சொன்னார். அப்போது "மருது' படமும் வெளியாகி விட்டது. அவர் சொன்ன கதையில் ஹீரோயிசம் இல்லை. மாறாக மனித மனங்களை வெளிப்படுத்தும் இடம் இருந்தது. அதனால்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். இரு முகம் காட்டும் விதத்தில் என் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. கதாநாயகன் என்பது என் கொள்கை இல்லை. ஆனால், தேடி வந்தவற்றை தட்டிக் கழிக்கும் ஆள் நான் இல்லை. அடுத்து உதயநிதி நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். முழுக்க முழுக்க என் மேல் பயணிக்கும் விதமாக சரவண ஷக்தி இயக்கப் போகிற படம். சீனுராமசாமி ஒரு கதை சொல்லியிருக்கிறார். இப்படி நடிப்பில் அடுத்தடுத்த பயணங்களுக்கு தயாராகி வருகிறேன்.
தயாரிப்பாளர் சங்க விவகாரத்தில் விஷாலுக்கு ஆதரவு என கருத்து தெரிவித்து உள்ளீர்கள்...?
விஷால் என் நண்பன். அது மட்டும் இல்லாமல், அவர் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். அதனால் அவர் பக்கம்தான் நான் இருப்பேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.