இன்னொரு பிறவியிலும் தீயணைப்புத் துறைதான்! சொல்கிறார் : மீனாட்சி விஜயகுமார்
"மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே தெளிவு வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்' இவருக்காகத் தான்
"மனதில் உறுதி வேண்டும்; வாக்கினிலே தெளிவு வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்' இவருக்காகத் தான் அந்நாளில் பாரதி இப்படி பாடியிருப்பாரோ? என
எண்ணத் தோன்றியது தீயணைப்பு - மீட்புத்துறை துணை இயக்குநராகப் பணியாற்றி வரும் மீனாட்சி விஜயகுமாரை சந்தித்தபோது. இவர்தான் முதல் பெண் தீயணைப்பு- மீட்புத்துறை அதிகாரி ஆவார். தற்போது வேலூர், வடமேற்கு மண்டல தீயணைப்பு - மீட்புத்துறையில் பணியாற்றி வருகிறார். தீயணைப்புத் துறையில் மட்டுமின்றி, விளையாட்டிலும் பல சாதனைகள் புரிந்து வருகிறார். இவர், காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தியுமாவார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள தும்பப்பட்டி என் சொந்த ஊர். கக்கனின் மூத்த மகன் பி.கே.பத்மநாதனின் மூத்த மகள் நான். பிறந்தது மட்டும்தான் அங்கு. படித்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். கல்லூரி படிப்பு முடிந்ததும், செல்லம்மாள் கல்லூரியில் ஓராண்டு விரிவுரையாளராகப் பணியாற்றினேன். அதன்பின், திருமணம்.
திருமணத்துக்கு பின்னும், என் மனதுக்குள், எப்படியாவது காக்கிச் சீருடை அணிய வேண்டும் என்ற தீ கனன்று கொண்டே இருந்தது. காரணம், என் தாத்தா கக்கனின் பாதிப்பு, உந்துதல் என்னுள் அதிகம் இருந்தது. எனக்கு விவரம் தெரியாத வயதில் அவருடன் இருந்தேன். விவரம் தெரிந்த வயதில் அவர் எனக்கு பிரமிப்பாக இருந்தார். தாத்தா ரொம்ப கண்டிப்பானவர், அதே சமயம் ரொம்ப எளிமையானவர். என் 12 வயது வரை தாத்தாவோடுதான் இருந்தேன். அப்போது தாத்தா காங்கிரஸ் சார்பில் காவல்துறை மந்திரியாக இருந்தார். அவருடன் போகும்போதெல்லாம், அதிகாரிகள் அவருக்கு சல்யூட் வைப்பார்கள். அது எனக்கும் சேர்த்து கிடைக்கும். அது அந்த வயசுலேயே என்னைக் கவர்ந்தது. நான் வளர்ந்து பெரியவளானால் நிச்சயம் காவல் உடை அணிந்து காவல் அதிகாரியாக வேண்டும் என்ற கனவை எனக்குள் விதைத்தது. என் மகன் பிறந்து, பள்ளிக்குச் செல்லும் வயதுவரை அவனைக் கவனித்து வந்தேன். அதன்பின், என் கணவரின் ஆதரவோடு குரூப்- 1 தேர்வு எழுதி, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றேன். வட சென்னை மண்டல தீயணைப்பு அதிகாரியாக முதலில் பொறுப்பேற்றேன். 2003-ஆம் ஆண்டு வரைக்கும் இந்திய தீயணைப்புத் துறையில் பெண்களே கிடையாது. அந்த ஆண்டில்தான் இந்தியாவில் முதல் தீயணைப்பு அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆண்கள் மட்டுமே இந்த வேலைகளைச் செய்ய முடியும், பெண்களால் முடியாது என்கிற எண்ணத்தை மாற்றினேன்.
முதல் பெண் தீயணைப்பு துறை அதிகாரி என்பது எப்படி இருக்கிறது?
மன நிறைவாக இருக்கிறது. யாருக்கும் கிட்டாத வரப்பிரசாதமாக நினைக்கிறேன். நான் தீயணைப்பு அதிகாரியாக பதவி ஏற்றுக் கொள்ளும்போது எனக்கு அதிகாரியாக இருந்த எஸ்.கே.டோக்ரா என்னிடம் சொன்னார்: ""நீ ஒரு அதிகாரி என்ற எண்ணமில்லாமல் ஒரு கடைநிலை ஊழியராக நினைத்துதான் செயல் பட வேண்டும்'' என்று அதை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன். அதனால்தான் நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
தீயணைப்புத் துறையை பொருத்தவரை 24 மணி நேரமும் வேலை காத்திருக்கும். வட சென்னைப் பகுதியில் நான்கு ஆண்டுகள் தீயணைப்புத் துறை அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளேன். 300-க்கும் மேற்பட்ட பேரிடர்களைச் சந்தித்துள்ளேன். தீயணைப்பு துறையில் பணியாற்றுவது அவ்வளவு எளிதல்ல. எப்போது அழைத்தாலும் உடனடியாகக் கிளம்பிப்போய் மக்களைக் காப்பாற்ற வேண்டும். உடல் உழைப்பு மிக மிக அதிகம் தேவைப்படும். ஒவ்வொருமுறை நாங்கள் தீயணைக்க செல்லும்போது எங்கள் உயிரை சட்டை பையில் வைத்துக் கொண்டுதான் செல்வோம். திரும்பி வந்தால்தான் நிச்சயம். கரணம் தப்பினால் மரணம் என்பார்களே அப்படித்தான் எங்கள் வேலை. இருந்தாலும், இன்னொரு பிறவி எனக்கிருந்தால் அதிலும் நான் தீயணைப்புத் துறையில்தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்க்கையில் அன்பு, உயிரைவிட மேலானது எதுவுமில்லை. முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே நான் கற்றுக் கொண்ட பாடம்.
மனதை பாதித்த நிகழ்வு? மகிழ்ச்சியான நிகழ்வு?
சுனாமி வந்தபோது குவீன் மேரிஸ் பகுதியில் பணியாற்றி வந்தேன். சுனாமி தகவல் வந்ததும். நாங்கள் நீரில் சீக்கியவர்களை மீட்க புறப்பட்டோம். எங்களால் முடிந்தவரை பேரிடர் எனும் கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போராடினோம். அங்கே சொந்தங்களைத் தொலைத்துவிட்டு தவித்து நின்ற குழந்தைகளையும், பிணக்குவியல்களும் இன்னமும் என் மனதைவிட்டு அகலவில்லை. அதுபோன்று, திருவல்லிக்கேணியில் ஐந்து மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. அப்படியே கட்டடம் மண்ணுக்குள் புதைந்துவிட்டது. அதில் இரண்டு உயிர்களை மீட்க 7 மணி நேரம் போராடினோம். அவர்கள் இருவரையும் காப்பாற்றியதற்காக எனக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது மறக்க முடியாதது.
நமது ஒலிம்பிக் போட்டி போன்று உலக தீயணைப்பு போராட்ட வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெறும். அந்தவகையில் 2010- இல் தென் கொரியாவில் நடந்த போட்டியில் குண்டு எறிதலில் நான் தங்கம் வென்றதும், 2012 -இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளியும், மிக்ஸ் டபுள்ஸில் தங்கம் வென்றதும் மகிழ்ச்சியானது.
ரோல் மாடல்?
என் அம்மாதான். எனது சிறுவயதிலேயே அப்பா தவறிவிட்டார். அம்மா குழந்தை நல மருத்துவராக இருந்து கொண்டு தனியாளாக இருந்து என்னையும், என் தங்கையையும் வளர்த்ததை நேரில் கண்டதனால்.
வளரிளம் பெண்களுக்கு உங்கள் அட்வைஸ்?
பெண்கள் சாதனை படைப்பது என்பது பெரிய விஷயமில்லை. ஆண்கள் 50 % உழைப்பு கொடுத்தால், பெண்கள் 200% உழைப்பு கொடுக்க வேண்டும். சலிக்காத முயற்சியும், பயிற்சியும் வேண்டும். இலக்கு, கடின உழைப்பு, இறை நம்பிக்கை இம்மூன்றும் இருந்தால்
நிச்சயம் சாதிக்கலாம். பெண்கள் உடல் அளவில் வலிமை குறைந்தவர்கள் என்று அறிவியல் கூறினாலும், மனதளவில் ஆண்களைவிடவும் வலிமையானவர்கள். ஆண்களால் முடியாதவற்றையும் பெண்களால் சாதிக்க முடியும். பெண்கள் அதை உணர வேண்டும்.
குடும்பம்?
என் கணவர் விஜயகுமார், ஏர் இந்தியா நிறுவனத்தில் பொது நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றுகிறார். மகன் ஷித்திக், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு கணினி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். என்னைப்
பற்றிய முழுமையான புரிதல் கொண்ட என் கணவரும், மகனும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்.