இல்லத்தரசியும் தொழில் முனைவோர் ஆகலாம் - 20
""பாக்கு மட்டை யில் தட்டு, கிண்ணம், ஸ்பூன் ஆகியவை செய்வது பற்றி பார்க்கலாம்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்:
""பாக்கு மட்டை யில் தட்டு, கிண்ணம், ஸ்பூன் ஆகியவை செய்வது பற்றி பார்க்கலாம்'' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்:
பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு:
ஆரம்பத்தில் பாக்குமட்டையை எரிபொருளாகத்தான் பயன்படுத்தி வந்தனர். பாக்கு மட்டைகளை கொண்டு பிளாஸ்டிக், பேப்பர் தட்டுகளுக்கு பதிலாக தட்டுகள், கிண்ணம், ஸ்பூன் என செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர்.
இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த பாக்கு மட்டை தட்டுகள், செய்வதற்கான இயந்திரங்கள் ரூ.2.00 லட்சம் முதல் உள்ளன. இதற்கு 10 ஷ் 10 அடி அல்லது அதற்கு மேலும் இடம் இருந்தால் நல்லது. மேலும், இந்த தட்டுகள் 12 அங்குலம், 10 அங்குலம், 8 அங்குலம், 4 அங்குலம் என தயார் செய்ய தனித்தனி மிஷின்கள் உள்ளன.
பாக்கு மட்டைகள், கிருஷ்ணகிரி, சேலம், பொள்ளாச்சி, ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் கிடைக்கின்றன. இதனை செய்வதும் சுலபம்தான். பாக்கு மட்டையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு முதலில் பெரிய அளவு தட்டு செய்யும் மிஷினில் வைத்து பெரிய தட்டுகளும், அதே மட்டையை அடுத்தடுத்த மிஷினில் வைத்து சிறிய அளவு தட்டுகளையும் செய்யலாம். தற்போது பிரியாணி கண்டெய்னருக்கு மூடிபோட்டு வைக்கவும் தயார் செய்கின்றனர். அதுபோன்று சூப் பௌல், விசிறி, டிபன் தட்டு, ஓவல் வடிவம், போன்ற பல வடிவங்களில் செய்யலாம். இதற்கான மிஷின்கள் தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்படுகின்றன. அவர்களே செய்முறை பயிற்சியையும் கற்று தருகிறார்கள்.
ஒரு சிலர் பாக்கு மட்டையையும் கொடுத்து நீங்கள் தயாரிக்கும் பொருட்களையும் அவர்களே வாங்கிக் கொள்ளவும் செய்கிறார்கள். இந்த மிஷினை இயக்குவதற்கு வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் மின்சாரம் போதுமானது. அதிக இயந்திரங்கள் பயன்படுத்தும்போது உங்கள் தொழிலை மாவட்ட தொழில் மையத்தில் பதிவு செய்து மின்கட்டண சலுகையும் பெறலாம். இடவசதி, பொருளாதார வசதி, ஊக்கம் இருந்தால் இந்த காலத்திற்கு அருமையான தொழில் இது.