மகளிர்மணி

இயற்கை விவசாயத்தில் எல்லை தாண்டியும் வெற்றி பெறலாம்!

DIN

இயற்கை விவசாயம் சார்ந்த உணவுப் பொருள்களை தென் தமிழகத்தில் முதன் முதலாகத் தொடங்கி தொழில் முனைவராக உயர்ந்திருப்பவர் மதுரையைச் சேர்ந்த கவிதா செந்தில் குமார். "வணிகத்திலும் பெண்கள்' வெற்றிகரமாக செயல்படலாம்' என்று நிரூபித்திருப்பவர் இவர். "ஆர்கானிக் கோல்டு' என்னும் பெயரில் பத்தாண்டுகளாக பலவகை அரிசிகளில் தொடங்கி மரச்செக்கு எண்ணெய் வகைகள், மளிகைப் பொருள்கள், தேன், பருப்பு சிறுதானியங்களை எளிதாக சமைக்கும் விதத்தில் ரவை, மாவு, களி மிக்ஸ் தயாரித்து விற்பனை செய்து வரும் கவிதா, மதுரை நகரத்தையும் தாண்டி அகில இந்திய எல்லையையும் தாண்டி வெளிநாடுகளுக்கும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறார். கவிதா தனது தொழில் அனுபவங்களைப் பகிர்கிறார்: 
"எனது பலமே கிராமப்புறம் தான். எனது சொந்த ஊர் காரைக்குடி பக்கம் உள்ள ஒரு கிராமம். அப்பா விவசாயி. அதனால் எனக்கும் சிறுவயதிலிருந்தே வேளாண்மையில் ஆர்வம் இருந்தது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் மக்களின் வாழ்க்கை மட்டுமல்ல விலை நிலங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்கிற விழிப்புணர்வு உழவர்கள் மத்தியிலும், மக்களிடையேயும் வந்துள்ளது. எனக்கும் இயற்கை விவசாயம் குறித்து போதுமான புரிதல் இருந்ததால் அதையே எனது வியாபார தளமாக்கிக் கொண்டேன். மக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காத சத்துக்கள், விட்டமின்கள், தாதுக்கள் தரும் இயற்கை விவசாயத்தில் விளையும் உணவுப் பொருள்களை விற்கிறேன் என்ற திருப்தி தற்போது எனக்கு கிடைத்திருக்கிறது. அதனால் இந்தத் தொழிலை வெகுவாக நேசிக்கிறேன். 
மதுரை சுற்று வட்டாரத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை சந்தித்தேன். அங்கே வயலில் இயற்கை விவசாயம்தான் நடைபெறுகிறது என்பதை உறுதி செய்து கொண்டு, தரக் கட்டுப்பாடு அலுவலகத்தில் சான்றிதழ்களையும் பெற்று பொருள்களை விற்று வருகிறேன். இடையிடையே வயல்கள், தோப்புகள், தோட்டங்களுக்குச் சென்று இயற்கை உரம் போடப்படுகிறதா. இயற்கை பூச்சி மருந்துகள் அடிக்கப் படுகின்றனவா என்று கள ஆய்வு செய்வதை விட்டுவிடவில்லை. 
ரசாயன உரங்கள் போடப்பட்டிருக்கும் வயல்களின் தன்மை, குணம், சத்து மாறியிருக்கும். இயற்கை உரம் போடத் தொடங்கினாலும், மண் பழைய இயற்கைத் தன்மையை மீட்டெடுக்க குறைந்தது நான்கு ஆண்டுகளாவது பிடிக்கும். அந்த நான்கு ஆண்டுகளில், நாற்று, செடி, கொடி, மரங்களுக்கு இயற்கை உரம் போட்டாலும், முன்பு போட்ட ரசாயன உரத்தின் தாக்கம் மண்ணில் இருக்கத்தான் செய்யும். விளையும் காய்கறிகளும் கொஞ்சம் நோஞ்சானாகத்தான் இருக்கும். மக்களும் வாங்கத் தயங்குவார்கள். அதனால் விவசாயிக்குத் தொடக்கத்தில் நஷ்டம் ஏற்படும். இயற்கை உரம் போடத் தொடங்கி நான்கைந்து ஆண்டுகள் முடியும் போது மண் வளம் புதுப்பிக்கப்பட்டு நல்ல விளைச்சல் கிடைக்கும். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் உணவுப் பொருள்களுக்கு தேவையான சந்தையும், நியாயமான விலையும் கிடைக்கிறது. முறையான வணிகம் நடத்த முடிகிறது. அதனால் விளைவிப்பவர்களுக்கும், விற்பவர்களும் போதுமான வருமானம் உறுதி செய்யப்படுகிறது. 
தொடக்கத்தில் சிரமத்தை அனுபவித்தேன். இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், கீரைகள் வைத்து வியாபாரத்தை சிறிதாகத் தொடங்கினேன். வியாபாரம் சூடு பிடித்ததும், அரிசி, பருப்பு, சிறுதானிய உணவுப் பொருட்கள் விற்பனையை ஆரம்பித்தோம். சமையலுக்குத் தயார் (ready   to  cook)நிலையில் இருக்கும் உணவு வகைகளையும் அறிமுகம் செய்தேன். விற்பனை பொருள்களுக்கு "அறுவடை', "திருவிழா' போன்ற சொற்களை அடைமொழியாக வைத்து விற்கிறேன். 
வியாபாரத்தில் ஆர்வம் உள்ள பெண்களுக்கு அவர்கள் வாழும் பேரூர்களில் "ஃபிராஞ்சைஸ்' முறையில் விற்பனை நிலையங்கள் தொடங்க ஆவன செய்து வருகிறேன். பெண்களுக்கு தொழில் வாய்ப்பு தொடர்பான கருத்தரங்கு, பட்டறைகளில் எனது வியாபார வெற்றி குறித்துப் பேசி பெண்களை ஊக்குவித்து வருகிறேன். இயற்கை விவசாயம் எவ்வளவு முக்கியமானது. அவசியமானது என்பதையும் அந்த தருணங்களில் வலியுறுத்தி வருகிறேன். உழவர்கள் - விற்பனையாளர்கள் - நுகர்வோர் என்று எனது வியாபாரம் விரிந்து வருகிறது. 
இந்தியாவில், பதினேழு மாநிலங்களில் இயற்கை விவசாயம் செய்யும் சுமார் மூவாயிரம் சிறு, குறு விவசாயிகளிடமிருந்து விளை பொருள்கள் வாங்குகிறேன். உற்பத்தியாளர்கள் கேட்கும் நியாமான விலையைத் தந்துவிடுவதால், தரமான பொருள்கள் கிடைக்கின்றன. கலப்படம் ஏதும் நிகழ்வதில்லை. இயற்கை உணவுப் பொருள்களில் மக்களின் தேவைகளை உரிய முறையில் அ முதல் ஃ வரை நிறைவேற்ற எங்களால் முடிகிறது. பலருக்கும் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம். இயற்கை விவசாயத்தில் விளையும் பொருள்கள் என்று உத்திரவாதம் கொடுப்பதால், வளைகுடா, ஐரோப்பிய நாடுகளிலும் எனது பொருள்கள் விற்பனையாகின்றன. ஆன்லைன் விற்பனையும் இருக்கிறது. தரம் இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர்கள் உணவுப் பொருள்களை விரும்பி வாங்குகின்றனர். இது நான் என் அனுபவத்தில் படித்த பாடம். 
எனது தொழிலின் அடுத்த திருப்பமாக தொடங்கியதுதான் "பாரம்பரிய விருந்தகம்'. அறுபது வகையான உணவு வகைகளை காரைக்குடி சமையல் முறையில் தயார் செய்து ஆர்டர்களின் அடிப்படையில் சமைத்து வழங்கி வருகிறோம். இந்தப் பிரிவை ஆரம்பித்து ஓர் ஆண்டு ஆகிறது. உணவுப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் வேலைகளை கணவர் கவனித்துக் கொள்கிறார்'' என்கிறார் கவிதா செந்தில்குமார்.
- பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT