மகளிர்மணி

மாதவிடாய் சுமையல்ல... சுகமே..!

ஒரு பெண்ணின் உடல் நலம், மன நலம், உடலியல் செயல்பாடுகளைப் பராமரிக்கும் அனைத்து மண்டலங்களின் சீரான வேலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழு ஆரோக்கியமும்

DIN

ப. வண்டார்குழலி இராஜசேகர், உதவி பேராசிரியர், மனையியல் துறை, அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால்.
ஒரு பெண்ணின் உடல் நலம், மன நலம், உடலியல் செயல்பாடுகளைப் பராமரிக்கும் அனைத்து மண்டலங்களின் சீரான வேலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழு ஆரோக்கியமும் அவளின் முறையான மாதவிடாயில்தான் இருக்கிறது. பருவமடைந்த பெண்ணின் ஆரோக்கியத்தைக் கணிக்கும் மிகப் பெரிய மருத்துவக் கருவியாக மாதவிடாய் இருக்கிறது என்றும் கூறலாம். அதில் ஏற்படும் சிக்கல், அவளை மட்டுமல்லாது, அவளின் குடும்பத்தினர், அன்றாட வாழ்க்கை, மன நலன், பொருளாதார நிலை, வேலைத்திறன், பேறு காலம், குழந்தைகளின் பராமரிப்பு என்று அனைத்தையும் பாதிக்கிறது. 
பருவமடைந்தது முதல் மாதவிடாய் நிற்கும் காலம் (Menopause) வரையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 400 முறைகள் மாதவிலக்கு ஏற்படுகிறது. ஒரு மாதவிடாயின் சராசரி சுழற்சிக் காலம் 28 நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இது அவர்களின் உடல் தன்மையைப் பொருத்தும் அமைகிறது. இவையனைத்தும் தெரிந்தும், பருவப்பெண்கள் மாதவிடாயை எப்படி நினைக்கிறார்கள் தெரியுமா? Unicef கொடுத்துள்ள ஒரு புள்ளி விவரத்தின்படி, இந்தியாவில் 19% பருவ வயதினரே. இதில் பெரும்பாலோர் பெண்களாக இருக்கின்றனர். இவர்களின் மனவோட்டம், மாதவிடாய் என்பது, தங்களின் உடலை அசுத்தமாக்கும் ஒரு நிகழ்வாகவும், அதனால் தாங்கள் எப்போதும் சுத்தமற்றவர்களாக உணர்வதாகக் கருதுகிறார்கள். 
மாதவிடாயின்போது என்ன நிகழ்கிறது?
பெண்ணின் கருப்பையிலிருந்து உதிரத்துடன், சிதைந்துபோன செல்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் (28 அல்லது 30 நாட்கள்), சுழற்சிமுறையிலும் வெளியேறுவதையே "மாதவிலக்கு அல்லது மாதவிடாய்' என்று அழைக்கிறோம். ஆரோக்கியமான பெண்ணுக்கு இந்த மாதவிடாய் சுழற்சியானது, 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. நான்கு வாரத்திற்கு ஒரு முறை ஏற்படும் மாதவிடாயை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
தொடர்நிலை அல்லது பெருகுநிலை மாதவிலக்கின் முதல் நாளிலிருந்து 5 நாட்கள் முடிந்த பிறகு, இந்த பெருகுநிலை துவங்குகிறது. இந்நிலையில் கருப்பையின் உட்சுவர் (Uterine epithelium) மென்மையாக இருப்பதுடன், அதிக ரத்த ஓட்டத்தைப் பெறுகிறது. இதே நேரத்தில், சினைப் பையிலுள்ள கருமுட்டையை சுமக்கும் கிராபியன் பாலிக்கிளின் முதிர்ச்சியடைந்து 14- வது நாள் முட்டையை வெளியேற்றுவதற்குத் தயாராக இருக்கிறது.
சுரப்பு நிலை அல்லது முன் மாதவிடாய் நிலை
சுழற்சியின் 15- வது நாள் முதல் 28- ஆவது நாள் வரை நிகழும் மாற்றங்களில், கருப்பையின் சுவர்கள் அதிக ரத்த ஓட்டத்தைப் பெற்றும், தடித்தும் காணப்படும். கருப்பையில் அதிகமாகச் சுரக்கும் சளித்திரவம், கருப்பைப் பால் (Utrine milk) என்றழைக்கப்படுகிறது. அதே நேரம், கிராபியன் பாலிக்கிள் (Graffine follicle) ஆனது உடைந்து, பல செல்களாக பெருக்கமடைந்து, மஞ்சள் நிற படிமங்களாக கார்பஸ் லுடியம் (Corpus luteum) என்று மாற்றம் பெறுகின்றது. 
அழிவு நிலை (அ) மாதவிடாய்
முன்னர் கூறிய நிலையான 28- வது நாளுக்குப்பிறகு வருவதை முதல் நாளாகக் கொண்டு அதிலிருந்து 5 நாட்கள் வரை கருப்பையின் உள்ளிருந்து உதிரம், சளித்திரவம், சிதைந்த செல்கள் ஒன்று சேர்ந்து வெளியேறுவதையே மாதவிடாய் என்கிறோம். 
மாதவிடாய் வயிற்றுவலி எதனால் ஏற்படுகிறது? 
மாதவிடாய் வயிற்றுவலியை பொதுவாக இரண்டாகப் பார்க்கலாம். முதல்நிலை மாதவிடாய் வலி என்பது, சாதாரண அடிவயிற்றில் ஏற்படும் வலியாகவும், மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் துவங்கி இரண்டு அல்லது நான்கு நாட்களுக்கு நீடிப்பதாகவும் இருப்பதாகும். இரண்டாம்நிலை மாதவிடாய் வலி என்பது, மாதவிடாய் சுழற்சியில் கோளாறுடனும், உதிரப்போக்கில் அசாதாரண நிலையுடனும், சினைப்பை, கருக்குழாய் மற்றும் கருப்பையில் ஏதேனும் நோய்களுடனும் ஏற்படுவதாகும். எந்தவிதமான நோய் மற்றும் நோய் அறிகுறிகளும் இல்லாமல் வெறும் அடிவயிற்றுவலி மட்டுமே மாதவிடாயின்போது ஏற்படுவதற்கு மாதவிடாய் வலி (Primary dismenorrhea) என்று கூறுவோம். மாதவிடாய் வலியுடன் சேர்ந்து, வியர்த்தல், தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படுவதுண்டு. பருவமடைந்து, குழந்தைப் பேருக்கு ஆயத்தமாகும் பெண்களுள் 45% முதல் 95% வரையிலுள்ளவர்களுக்கு இவ்வாறு வலி ஏற்படுகிறது. 
மாதவிடாய் வயிற்று வலிக்குப் பல காரணங்கள் இருக்கிறதென்றும், என்ன காரணம் என்று இன்னும் சரிவர கண்டு பிடிக்கவில்லை என்றும் இன்னும் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இருப்பினும், ஓரளவிற்கு மருத்துவர்களாலும், ஆய்வறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு காரணம்தான் புரோஸ்டாகிளாண்டின்ஸ். ஹார்மோன்கள் போலுள்ள சுரப்புகளுள், புரோஸ்டாகிளாண்டின்ஸ் என்பவை, மென்திசுக்களின் சுருங்கி விரிதல் தன்மை, ரத்தநாளங்களில் ரத்த அழுத்தத்தின் கட்டுப்பாடு, கர்ப்பப் பையின் சுருங்கி விரிதல் தன்மை மற்றும் அழற்சிகள் ஆகியவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கூட்டு கொழுப்புப் பொருட்களாகும். இவை முக்கியமாக Arachidonic acid என்னும் கொழுப்பு அமிலத்திலிருந்து பெறப்படுகின்றன. ஓரிடத்தில் வலியையும், அழற்சியையும் உருவாக்கும் இவை, வேறொரு இடத்தில் நிவாரணத்தைக் கொடுக்கும் திறன் வாய்ந்தவை. 
புரோஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கொழுப்புப் பொருட்களே மாதவிடாய் வலிக்குக் காரணம் என்று கூறுவதால், அவையனைத்தும் தீமை விளைவிப்பவையல்ல என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். ஏனெனில், உடலில் ஓரிடத்தில் சீராய்ப்போ அல்லது வெட்டுக்காயமோ ஏற்பட்டு ரத்தக்கசிவு இருக்கும் வேளையில், இந்த புரோஸ்டாகிளாண்டின்ஸ் வெளியேற்றப்பட்டு, ரத்தம் உறைதலுக்கு உதவி செய்கின்றன. ரத்த நாளங்களிலும், தசை திசுக்களிலும் சுருக்கங்களை ஏற்படுத்தி, மேலும் ரத்தப்போக்கு ஏற்படாமலும் தடுக்கின்றன. பிரசவத்தின்போது, கர்ப்பப் பையிலும், இடுப்புப் பகுதியிலும் அசைவுகளை ஏற்படுத்தி விரிவடைதலுக்கு உதவி செய்து சுகப்பிரசவத்திற்கு உறுதியளிக்கிறது. 
சில பருவப் பெண்களுக்கு, மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர், அடிக்கடி மலம் கழிக்கும் பழக்கமும், வயிற்றுப் போக்கும் ஏற்படுவதுண்டு. புரோஸ்டாகிளான்டின்ஸ்கள், சுருங்கி விரிவடையும் தன்மையை கர்ப்பப் பை சுவர்களுக்கு அளிக்கும் தருணத்தில் அதே விளைவுகளால் மலக்குடலிலும் பாதிப்பு ஏற்படுவதே இதற்குக் காரணமாகும். இந்த புரோஸ்டாகிளான்டின்களை புத்திசாலித்தனமாக கையாண்டு, அவற்றின் சமநிலையை பக்குவமாக வைத்திருப்பதன் மூலம், மாத
விடாய் வலியை ஓரளவிற்கு அல்ல.. நன்றாகவே சரி செய்யலாம். இதற்கு, முன் மாதவிடாய் காலத்திலேயே ஒவ்வொரு பருவப் பெண்ணும் தயாராகிக் கொள்ள வேண்டும்.
(அடுத்த இதழில்...)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT