கனடாவின் கிங் மேக்கராக மாறியிருப்பவர் ஜக்மீத் சிங். வழக்கறிஞராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஜக்மீத் தலைமை ஏற்றிருக்கும் புதிய ஜனநாயகக் கட்சி 24 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கட்சி தாமஸ் முல்கைர் தலைமையில் முந்தைய தேர்தலில் 44 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கனடா தேர்தலில் 157 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருப்பதால் புதிய ஜனநாயக கட்சியின் ஆதரவு தேவைப்படும்.
ஜக்மீத்தின் வெற்றியின் பின்னணியில் இருப்பவர் அவரது மனைவி குர்கிரண் கவுர். கணவரை தேர்தல் பிரசாரத்தில் நிழலாகத் தொடர்ந்தவர். இதுவரை புகழின் வெளிச்சத்திற்கு வராத குர்கிரண் கவுர் நடந்து முடிந்த கனடா தேர்தலுக்குப் பிறகு பிரபலமாகி வருகிறார். குர்கிரண் கவுர் ஒரு தொழில் முனைவரும் கூட. தன் தங்கையுடன் இணைந்து பஞ்சாபி உடைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கனடாவில் பஞ்சாபிகள் அதிகம் பேர் வாழ்வதால் இவர்கள் தயாரிக்கும் உடைகளுக்கு கனடாவில் நல்ல கிராக்கி.
""எனது பஞ்சாப் பாரம்பரியத்தை இங்கே கனடாவில் மறக்காமல் இருக்கவும்... ஏனைய பஞ்சாபியர் மறக்காமல் இருக்கவும் இந்த முயற்சி... '' என்கிறார் குர்கிரண்.
குர்கிரண் ஜக்மீத் திருமணம் 2018 -இல் தான் நடந்தது. தேர்தலின் போது ஜக்மீத் அணிய வேண்டிய உடைகளை தலைப்பாகை அடக்கம் தேர்ந்தெடுத்தது குர்கிரண் தான். இருவரும் கனடாவில் பிறந்து வளர்ந்தவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.