சிலம்பத்தில் உலக சாதனை படைத்த கீர்த்தனா..!
சிறுவயது முதல் சிலம்பம் கற்று வளர்ந்த கீர்த்தனா தனது இருபத்தியொன்றாம் வயதில் சாதனைப் படைத்திருக்கிறார்.
சிறுவயது முதல் சிலம்பம் கற்று வளர்ந்த கீர்த்தனா தனது இருபத்தியொன்றாம் வயதில் சாதனைப் படைத்திருக்கிறார். அண்மையில் மலேஷியாவில் நடந்து முடிந்த சர்வதேச சிலம்ப சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கீர்த்தனா தமிழகம் திரும்பியுள்ளார். கீர்த்தனா, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - தாளவாடி மலைப்பகுதியில், கர்நாடகா - தமிழக எல்லையில் உள்ள ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கீர்த்தனா, கோவை தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியலில் நான்காம் ஆண்டு மாணவி.
""அப்பா குமார். அம்மா ஜெயம்மா . விவசாயக் குடும்பம். ஊருக்குச் சாலை வசதி கிடையாது. மின்சார வசதி இருந்தாலும் அவை மங்கிய வெளிச்சத்தை மட்டும்தான் தரும். சுற்றிலும் மலைப் பகுதி. ஆக மொத்தம் குக்கிராமம். எள்ளுக்கேற்ற எள்ளுருண்டை என்று சொல்கிற மாதிரி, கிராமப்புற வீர கலையான சிலம்பம் என்னைக் கவர்ந்தது. பெத்தவங்கதான் என்னை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் படிக்க சின்ன வயதிலிருந்து உற்சாகம் தந்து வர்றாங்க. எனக்கு சிலம்பம் சொல்லிக் கொடுத்தவர் சுதாகரன் அய்யா. சில மாதங்களுக்கு முன் சிலம்பத்தில் உலகப் போட்டிக்கான தேர்வுப் போட்டிகள் கன்னியாகுமரியில் நடந்தன. அதில் பங்கு கொண்டு இந்தியா சார்பில் பங்கு பெறத் தேர்வு பெற்றேன். அக்டோபர் இரண்டு முதல் ஆறு வரை மலேஷியாவில் இறுதி போட்டிகள் நடந்தன. மொத்தம் ஏழு நாடுகளில் இருந்து சிலம்பப் போட்டியாளர்கள் சுமார் ஐநூறு பேர்கள் பல பிரிவுகளில் கலந்து கொண்டனர். கடுமையானப் போட்டாப் போட்டி. "கம்பு வீச்சு' பிரிவில் எனக்குத் தங்கப்பதக்கம் கிடைத்தது. "தொடுமுனை' பிரிவில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
"மலேசியாவின் "கெடா' நகரில் நடைபெற்ற முதல் உலகக்கோப்பை சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றாலும் அங்கு நான் போக முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. காரணம் போட்டியில் பதிவுக் கட்டணம், போக்குவரத்து செலவுதான் முக்கியக் காரணங்கள். போட்டிக்கான கட்டணத்தை பங்கேற்கும் வீரர்கள் செலுத்த வேண்டும் என்று "அனைத்து இந்திய சிலம்பம் கூட்டமைப்பு' முடிவு செய்தது. ஒவ்வொரு வீரரும் போட்டியில் பங்கு பெற, மலேஷியா போக வர விமான செலவு, விசா, நுழைவுக் கட்டணம் தங்கும் செலவாக ரூ.55,000 செலுத்த வேண்டும். அத்துடன் போட்டிப் பதிவுக் கட்டணம் ரூ.25,000 சேர்த்து செலுத்த வேண்டும். விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த நாங்கள் இந்தத் தொகைக்கு எங்கே போவது ? என்ன செய்வது என்று தவித்துப் போனோம். இந்த செலவை ஏற்றுக் கொள்ளக் கூடிய பொருளாதாரம் எங்களிடத்தில் என்றைக்குமே இருந்ததில்லை. என்னைப் படிக்க வைக்கவே எனது பெற்றோர் படாதபாடு படுகிறார்கள். எனது இக்கட்டான நிலையை ஊடகங்கள் பொது மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்றன. நல்லவேளை... ஒரு தனியார் நிறுவனம் எனக்கு உதவ முன் வந்தது. அதனால் மலேஷியாவில் நடந்த போட்டி களில் என்னால் கலந்து கொள்ள முடிந்தது.. பதக்கங்களையும் இந்தியாவிற்காகப் பெற்றுவர முடிந்தது'' என்கிறார் கீர்த்தனா.