முகப்பு
மகளிர்மணி

பவளப் பெண்மணி!

2004-ஆம் ஆண்டு தன் கணவருக்கு மாலத்தீவில் அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்ததால், அவருடன் சென்ற சென்னையை சேர்ந்த உமாமணி.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:29 AM
பகிர்:


2004-ஆம் ஆண்டு தன் கணவருக்கு மாலத்தீவில் அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்ததால், அவருடன் சென்ற சென்னையை சேர்ந்த உமாமணி. அங்கு கடற்கரை ஓரங்களில் தெளிவாக தெரிந்த பவளப் பாறைகளை முதன்முதலாக பார்த்தபோது வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்ததாம். பொதுவாக பவளத்தை ஆபரணங்கள் செய்ய மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த உமா மணி, பின்னர் பவளப் பாறைகள் பற்றி அங்குள்ளவர்கள் மூலமாகவும், புத்தகங்களைப் படித்தும் தெரிந்து கொண்டாராம்.

""முதன்முதலாக பவளப் பாறைகளை நேரில் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. பத்தாண்டுகள் கழித்து நான் ஓவியம் வரைவதற்கான அடிப்படை பயிற்சிப் பெற்றிருந்ததால் நிறைய ஓவியங்களை வரைந்திருந்தேன். இருந்தாலும் ஏதாவது ஒரு கருத்தை அடிப்படையாக வைத்து புதுமையான ஓவியங்களை வரைய வேண்டுமென்ற ஆர்வம் உள்ளுக்குள் இருந்தது. நான் வரைந்த ஓவியங்களை இருமுறை கண்காட்சியாக வைத்தேன். இரண்டாவது முறை கண்காட்சியின்போது, பார்வையாளர் ஒருவர் என்னிடம் வந்து இதுவரை நான் பார்க்காத ஒன்றை உங்களால் ஓவியமாக வரையமுடியுமா? என்று கேட்டார். அந்தக் கேள்வி எனக்குள் உறுத்தலாக இருந்தாலும், அதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டேன். அப்போதுதான் டாக்டர் பாஸ்கேல் சபானெட்டின் பவளப் பாறைகள் பற்றிய ஆவணப் படமொன்றை பார்க்க நேர்ந்தது.

ஏற்கெனவே பவளப்பாறைகள் பற்றி தெரிந்து வைத்திருந்ததால், மேலும் அவை
களைப் பற்றி ஆய்வு செய்யவும், அவைகளை ஓவியமாக வரையவும் விரும்பினேன். அப்போது என் வயது 49. ஸ்கூபா டைவிங் பயிற்சி பெறத் தொடங்கினேன். விரைவிலேயே ஸ்கூபா டைவிங்கில் தேர்ச்சிப் பெற்றதற்கான சான்றிதழ் கிடைத்தது. 2014-ஆம் ஆண்டு என்னுடைய 25-ஆவது திருமண நாளன்று முதன்முறையாக மாலத்தீவு கடலுக்கடியில் சென்று பவளப் பாறைகளை பார்க்க என்னுடைய மகன் உதவி செய்தான். கடலுக்கடியில் பவளப்பாறைகளை நேரில் பார்த்தபோது பரவசமாக இருந்தது. கடலுக்கடியில் ஓரிருமுறை மட்டுமே சென்று பார்த்த பவளப்பாறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. அவைகளை முறைப்படி ப்ளீச்சிங் செய்து பார்க்கும்போதுதான் அதன் உண்மை தன்மைகளை அறியமுடியும். 

பின்னர் கடலுக்கடியில் நான் கண்ட பவளப்பாறைகளின் அதியங்களை ஓவியமாக வரையத் தொடங்கினேன். கூடவே பவளப் பாறைகளைச் சேத படுத்தக் கூடாது என்ற எண்ணம் என்னை சமூக ஆர்வலராக மாற்றியது. பவளம் எளிதில் உடையக் கூடியவை. மிகவும் முக்கியம். தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும். கழிவுகள் சேரக் கூடாது. தூத்துக்குடி, ராமேஸ்வரம், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் பவளப் பாறைகளை சிலர் சேதப்படுத்துவதை அறிந்தபோது, அவைகளை பாதுகாக்கவும், அது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆவண படமொன்றை தயாரிக்க விரும்பினேன். 
அப்போதுதான் பிரியா துவாசே என்ற தயாரிப்பாளர் என்னை சந்தித்து, 56 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படமொன்றை "பவளப் பெண்மணி' என்ற தலைப்பில் தயாரிக்க முன்வந்தார். தற்போது இந்த ஆவணப் படம் இந்திய திரைப்பட விழாக்களில் இடம் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது.

அடுத்த 30 ஆண்டுகளுக்குள் இந்திய கடற்கரைப் பகுதிகளில் பவள நர்சரிகளை நிறுவதிட்டமிட்டுள்ளேன். இவையனைத்தும் மீனவர்களுக்காக மீனவர்களே அமைப்பார்கள்'' என்று நம்பிக்கையுடன் கூறினார் உமாமணி.

உமாமணியைப் பற்றி "பவளப் பெண்மணி' (இஞதஅக ரஞஙஉச) என்ற தலைப்பில் ஆவணப் படம் தயாரித்த பிரியா துவாசே கூறுகையில், ""பல ஆண்டுகளாக என் அம்மா வயதுடைய ஒரு பெண்மணி தன் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு கடலுக்கடியில்  சென்று பவளப்பாறைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருவதை அறிந்து ஆச்சரியமடைந்தேன். பவளப் பாறைகள் பாதுகாப்பு குறித்து ஆவணப் படமெடுத்தபோது உமா மணியைப் பற்றி நிறைய தகவல்களை வெளிப்படுத்த வேண்டியதாகிவிட்டது. அவரது கண்ணோட்டத்திலேயே பவளப் பாறைகள் பற்றிய அரிய தகவல்களை அவரது குரல் மூலமாகவே வெளிப்படுத்துவது சவாலாக  இருந்தது. அவருடன் உள்ளகுழுவினரும் கடுமையாக உழைப்பது பெருமையாக இருக்கிறது. இந்த ஆவணப் படத்திற்கு திரைப்பட விழாக்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.