வீட்டிலிருந்து வெளியேறியபோது சினு கலாவின் கையில் வெறும் 300ரூபாய் தான் இருந்தது. இன்றைக்கு கலா ஏழு கோடி வணிகம் உள்ள நிறுவனத்திற்கு தலைவியாக உயர்ந்திருக்கிறார்.
கலா தனது வெற்றிக் கதையை விவரிக்கிறார்:
""எப்படி இதனை சாதித்தீர்கள்... இந்த சாதனைக்குப் பின்னால் உள்ள சூத்திரம் என்ன? என்று கேட்டால், எனக்கு சரியாகச் சொல்ல வராது. எப்படி துணிந்து இறங்க தைரியம் வந்தது என்பதையும் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. பிரச்னையிலிருந்து வெளிவர எதையாவது செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தேன். அதுதான் உண்மை.
வீட்டில் வெளியே சொல்ல முடியாத பிரச்னைகள். வீட்டை விட்டு வெளியேறியபோது என்னிடம் இருந்தது இரண்டு உடைகள். கையில் 300 ரூபாய் பணம். வீட்டை விட்டு வெளியே வந்தபோதுதான் தனி ஆளாக உணர்ந்தேன். எனக்கு அப்போது வயது 15. பள்ளிப்படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியவில்லை.
இரண்டு மூன்று நாள்கள் கழிந்த பிறகுதான் கொஞ்சம் தைரியம் வந்தது. இரவில் தங்க இடம் தேடி கண்டுபிடிக்கும் வரையில் மும்பை, ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் தூங்கினேன். இவை நடந்தது 1998 வாக்கில். சில தினங்களில் இரவில் தூங்க ஒரு படுக்கை மட்டும் உள்ள இடம் கிடைத்தது. தினசரி வாடகை இருபது ரூபாய். எத்தனை நாளுக்கு ரூபா 300 வரும். அதற்காக பல நிறுவனங்கள் ஏறி இறங்கி, வீடு வீடாக ஏறி இறங்கும் "சேல்ஸ் கேர்ள்' வேலையில் சேர்ந்தேன்.
அப்போதெல்லாம் வீடுகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளுக்குப் போய் வருவதில் இப்போது இருக்கிற கட்டுப்பாடு இருந்ததில்லை. பெரும்பாலான வீடுகளில் முகத்தில் அடிப்பது போல "வேண்டாம்' என்று சொல்லி விரட்டுவார்கள். சகித்துக் கொண்டு வேலையில் தொடர்ந்தேன். இந்த விரட்டல்கள், விலக்கல்கள் மனதில் பொறுமையையும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும் தந்தது.
பிறகு சின்னதாகப் பதவி உயர்வு கிடைத்தது. புதிதாகச் சேரும் சேல்ஸ் கேர்ள்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு. மாலை வேளைகளில் ஹோட்டல்களில் பணிப்பெண்ணாக மாலை ஆறு முதல் இரவு பதினொன்று வரை பணிபுரிந்தேன். ஒரு நாள் செலவுக்குப் பணம் உண்டாக்க வேண்டும் என்பதுதான் தொடக்க கால லட்சியமாக இருந்தது. இரண்டு வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து என்னிடம் கொஞ்சம் பணம் சேர்ந்தது. விற்பனைத் துறையில் நான் ஈடுபட்டு வந்ததால் அதன் நெளிவு சுளிவுகளை நன்றாக அனுபவ பூர்வமாக படித்துக் கொண்டேன்.
அந்த அனுபவம், ஒரு நாள் செலவுக்குப் பணம் என்ற லட்சியத்தை தவிர்க்கச் சொன்னது. பெரிதாக ஏதாவது செய் என்றது. வர்த்தகத் துறையில் கால் பதிக்க வேண்டும். ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஊற்று நீராக எண்ணில் பெருக்கெடுத்தது.
அமித் கலாவை 2004-இல் சந்தித்தேன். திருமணம் நடந்தது. மும்பையிலிருந்து பெங்களூருவுக்கு குடி பெயர்ந்தேன். தோழிகள் நண்பர்கள் வற்புறுத்தியதின் பேரில் மாடலானேன். பிறகு அழகிப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு இறுதி சுற்றுவரை சென்றேன். அழகிப் போட்டியில் தேர்வாகாவிட்டாலும் பெண்கள் அதிகம் விரும்பும் நகைகளின் பக்கம் கவனம் சென்றது.
எனக்கு ஃபேஷன் பிடிக்கும். ஃபேஷனான நகைகள், உடைகள் வாங்க என்னிடம் பணம் இருந்ததில்லை. வசதியுள்ளவர்கள் ஃபேஷனாக உள்ள எதையும் விரும்பி வாங்குகிறார்கள். வெள்ளியில் விதம் விதமான காது, கழுத்து, கையணிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதை அறிந்து "ரூபன்ஸ்' அழகு அணிகளை விற்கும் கடையைத் திறந்தேன். நல்ல வரவேற்பு கிடைத்ததால் பெங்களூரில் கிளைகள் ஆரம்பித்தேன். பிறகு ஹைதராபாத், கொச்சி நகரங்களில் கிளைகள் விரிவடைந்தது. ஆன்லைன் வர்த்தகம் அறிமுகம் ஆனதும் உள்நாடு வெளிநாட்டு விற்பனை கொடி கட்டிப் பறந்தது. ஃ பேஷன் டெக்னாலஜி படித்தவர்கள் எனது நிறுவனத்திற்காக நகைகளை வடிவமைக்கிறார்கள்.
குஜராத்திலும் கொல்கத்தாவிலும் பட்டறைகள் அமைத்திருக்கிறேன். இப்போது ஆண்டிற்கு ஏழு கோடிக்கு வர்த்தகம் நடக்கும் நிறுவனமாக மாற்றியுள்ளேன். உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்'' என்கிறார் சினு கலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.