மகளிர்மணி

நோய் தீர்க்கும் பரதம்!

ந.முத்துமணி

6 வயது முதல் பரதக்கலையை கற்றுத் தேர்ந்துள்ள ஹம்சவர்த்தினி, தற்போது எம்.பி.பி.எஸ். மருத்துவம் பயின்று வருகிறார். பெங்களூரில் வசித்து வரும் ஜி.வெங்கட குப்புசாமி } ராஜமாதாங்கி தம்பதியினரின் மகள் இவர்.

ஸ்டெதஸ்கோப்பும், ஊசியும், மருந்து வாசனையுமாக திரிந்து வந்தாலும், பரதக்கலையில் கிடைக்கின்ற இளைப்பாறுதலும், உற்சாகமும் வேறு எதிலும் கிடைக்கவில்லை எனும் ஹம்சவர்த்தினி. மருத்துவத்திற்கும் பரதக்கலையும் சம்பந்தம் இருப்பதாக உணர்ந்து, அது குறித்து ஆராய்ச்சி நோக்கில் இருக்கிறார். பரதநாட்டியமும் மருத்துவமுமாக பயணித்துவரும் ஹம்சவர்த்தினி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

""அம்மாவுக்கு பரதநாட்டியம் என்றால் உயிர். ஆனால், இளம் வயதில் தன்னால் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்றிருந்த குறையைப் போக்க, 6 வயதில் என்னை பரதநாட்டியப் பயிற்சியில் சேர்த்துவிட்டார். 

ஆரம்பத்தில் பிடிக்காமல் இருந்தது உண்மைதான். அதன் நுணுக்கங்கள், கலைப்பண்புகளை கற்றுக் கொண்ட பிறகு, பரதநாட்டியம் எனது உயிர் மூச்சானது. நமதுநாட்டின் கலை, பண்பாடு, புராணங்கள், வரலாற்றோடு ஆழமாக வேர் பிடித்திருக்கும் கலை பரதநாட்டியம். 

பள்ளியில் சோர்வு ஏற்பட்டால், மனம் கலங்கினால், தோல்வி மனப்பான்மை ஏற்பட்டால், அவற்றில் இருந்துவிடுபட பரதநாட்டியம் அருமருந்தாக உள்ளதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். 

பள்ளிக்காலத்தில் பரதநாட்டியக்கலையை கற்றுக்கொண்டபோது கவனச்சிதறல், ஆர்வமின்மை, படிப்பில் கவனமின்மையை போக்க உதவியாக இருந்தது. பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பரதமும் கற்றுவந்ததால் படிப்பிலும் சுட்டியாக இருந்தேன். 

இன்றைய குழந்தைகள், பள்ளிக் காலத்தில் கலை மீதான ஆர்வத்தை காட்டிலும் விளையாட்டு, உடற்பயிற்சியில் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் பரதம் கற்றுக் கொண்டால், விளையாட்டு, உடற்பயிற்சியை காட்டிலும்நூறுமடங்கு பலன் கிடைக்கும். 

2017-ஆம் ஆண்டு அரங்கேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு சென்னை, மைசூரு, சிதம்பரம், கோவா, ஆஸ்திரேலியாவில் நாட்டியமாடியுள்ளேன்.

கால ஓட்டத்தில் மேற்கத்திய சாயலை பரதக்கலையில் சேர்க்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. இதை நான் விரும்பவில்லை. தற்கால நாட்டியங்களுடன் பரதநாட்டியத்தையும் இணைத்து கலவையாக தருகிறார்கள். 

இது பரதநாட்டியத்தின் தூய்மையான வடிவத்தைச் சிதைத்துவிடும். பரதநாட்டியத்தை அதன் ஆதிவடிவத்தை பாதுகாப்பது மிகமிக முக்கியம் என்று கருதுகிறேன். கி.மு.200 - ஆம் ஆண்டில் தோன்றியதாக கூறப்படும் பரதநாட்டியத்தை பள்ளிக் கல்வியில் கட்டாயமாக்க வேண்டும்.

பரதநாட்டியத்தில் காணப்படும் அறிவியல் காரணம் குறித்து ஆராய்ந்து வருகிறேன். அதேபோல, மருத்துவத்தில் பரதநாட்டியத்தின் பங்களிப்பு குறித்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். 

பல நோய்களை தீர்க்கும் மாமருந்தாக பரதக்கலைக் கோவை அமைந்திருப்பதாக உணர்கிறேன். அவற்றை அறிவியல் ரீதியாக உறுதி செய்ய ஆராய்ச்சி தேவைப்படுகிறது. நாட்டியம் ஒருவகையான யோகக் கலையாகும். அதன்மூலம் பெருமூளைவாதம் (cerebral palsy), வலிப்புநோய் கோளாறுகள் போன்றவற்றை குணமாக்க பரதநாட்டிய யோகாக்கலை உதவும். 

இதுபோல, நாட்டியத்திற்கும் மருத்துவத்திற்கும் உள்ள தொடர்புகளைக் கண்டறிய முற்பட்டுள்ளேன். இதன் முடிவுகள் மருத்துவத்தில் பல மாற்றங்களுக்கு வித்திடும்.

கடந்த 15 ஆண்டுகளாக கற்றுள்ள பரதநாட்டியத்தின் வாயிலாக பாரதி, கிருஷ்ணர், சிவபெருமானை அரங்கேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். 

கர்நாடக இசையையும் கற்று வருகிறேன். அது பரதநாட்டியத்திற்கு உதவியாக உள்ளது. மருத்துவப்படிப்பு முடிந்ததும், மேற்படிப்பை படித்து கைதேர்ந்த மருத்துவராக உருவானப் பிறகும், பரதநாட்டியத்தை தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்பேன்'' என்று கூறுகிறார் ஹம்சவர்த்தினி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT