முகப்பு
மகளிர்மணி

இளம் விஞ்ஞானிகளின் வழிகாட்டி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்தவர் மாஷா நசீம். அறிவியலில் ஆர்வம் கொண்ட இவர், சிறு வயது முதலே பல்வேறு கருவிகளை கண்டுபிடித்து விருதுகளைப் பெற்றுள்ளார்.

Updated On : 16 டிசம்பர், 2020 at 6:00 AM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்தவர் மாஷா நசீம். அறிவியலில் ஆர்வம் கொண்ட இவர், சிறு வயது முதலே பல்வேறு கருவிகளை கண்டுபிடித்து விருதுகளைப் பெற்றுள்ளார். இது குறித்து மாஷா கூறியதாவது:

""எனக்கு 9 வயதிருக்கும் போது குடும்பத்துடன் உணவு விடுதிக்குச் சாப்பிட சென்றேன். அங்கே கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாயைப் பார்த்தேன். அது என்னை மிகவும் ஈர்த்தது. அந்த குழாய் எப்படி இயங்குகிறது என தந்தையிடம் கேட்டேன். ஃபோட்டோ எலக்டிரிக் எஃபக்ட் மூலம் செயல்படுவதாகச் சொன்னார்.

அந்த சமயத்தில் எனது பள்ளியில் அறிவியல் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்தார்கள். அதற்காக புதிய கண்டுபிடிப்புகள் செய்ய சொன்னார்கள். அதே சமயம் எங்கள் பகுதியில், திருடர்கள் பயம் அதிகமாக இருந்தது. எனவே, நான் உணவு விடுதியில் கண்ட கையை நீட்டினால் தண்ணீர் கொட்டும் குழாயை அடிப்படையாகக் கொண்டு ஃபோட்டோ எலக்டிரிக் எஃபக்ட் மூலம் திருடனை கண்டுபிடிக்கும் "பர்க்லர் அலாரம்' வடிவமைத்தேன். இந்த கண்டுபிடிப்புக்காகப் பள்ளியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. அது எனக்கு பெரும் உத்வேகத்தை அளிக்க, அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்தது.

Advertisement

அதைத்தொடர்ந்து 14-ஆவது வயதில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் கலந்து கொண்டேன். அதில் "ரயில் கழிப்பறை மாதிரி'யை (ஹைடெக் ட்ரைன் டாய்லெட்) உருவாக்கினேன். இதன்மூலம் தண்டவாளங்களில் கழிவுகள் விழாமல் சேகரிக்கப்பட்டு சாக்கடையில் விடப்படும். இந்த கண்டுபிடிப்புக்காக, 2007 -ஆம் ஆண்டு நடைபெற்ற 46 நாடுகள் கலந்து கொண்ட, "உலக கழிவறை கூட்டத்தில்' சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து, இதுவரை 14-க்கும் மேற்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்துள்ளேன். இந்த கண்டுபிடிப்புகளுக்காக பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளேன். மேலும் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

தற்போது, "மாஷா ஆக்கத்திறன் மையம்' என்ற ஒன்றைத் தொடங்கி, பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் விதத்தில் இலவச பயிற்சி அளித்து வருகிறேன்.

இதுவரை இந்த ஆக்கத்திறன் மையத்தில் பயிற்சிபெற்ற மாணவர்கள் ஏழு பேர் தேசிய அளவில் விருதுகளைப் பெற்றுள்ளனர். குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியல் திட்டங்கள் செய்வதற்கான நிதி உதவி பெறுவதற்கும் இந்த மையம் உதவி செய்து வருகிறது. மேலும் இந்த ஆக்கத்திறன் மையத்தை "நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' ஆக மாற்ற வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்று கூறும் மாஷா, இவர் செய்து வரும் சமூக சேவைக்காக 2016- ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் "மாநில இளைஞர் விருது' பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.