கதை சொல்லும் குறள்- 6: மனைவி அமைவதெல்லாம்...
நாசா, தேசிய வான் பயணவியல், மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் கிளைகளில் ஒன்றான ஜான்சன் விண்வெளி மையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
நாசா, தேசிய வான் பயணவியல், மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் கிளைகளில் ஒன்றான ஜான்சன் விண்வெளி மையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அமெரிக்காவின், டெக்ஸஸ் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஹுஸ்டன் நகரத்திற்கு பெருமை சேர்க்கும் வரிசையில் இந்த ஜான்சன் விண்வெளி மையம் அமைந்திருக்கிறது.
தனது நாட்டைச் சார்ந்த விண்வெளி வீரர்கள் மட்டுமின்றி தங்களோடு இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் இதர நாடுகளைச் சார்ந்த விண்வெளி வீரர்களுக்கும் தகுந்த பயிற்சி அளித்து, விண்கலத்தை வெற்றிகரமாக இயக்கவும், அதில் பயணித்து பல ஆராய்ச்சிகளைச் செய்து திரும்பும் மையமாகவும் இந்த ஜான்சன் விண்வெளி மையம் இயங்குகின்றது.
மறைந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன் நினைவாக, டெக்ஸஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர். என்ற காரணத்திற்காக இந்த விண்வெளிப் பயிற்சி மையத்திற்கு அவரது பெயரையே சூட்டினர்.
மாதவன் அழகன், இளைஞன், அறிவாளி. சிறுவயது முதல் விண்வெளியில் பறக்கவேண்டும் என்பதைத் தன் வாழ்நாளின் கனவாகவும் லட்சியமாகவும் கொண்டிருந்தான். வெறும் கனவு மட்டும் கண்டுகொண்டிருக்காமல், அதனை அடைய உழைத்தான். பல நிலைகளைக் கடந்தபின், இந்திய அரசாங்கமே அவனைத் தேர்ந்தெடுத்து விண்வெளி வீரனாகத் தகுதி பெற நாசாவுக்கு அனுப்பியிருந்தது. அங்கேயும் பல தகுதிப் பரீட்சைகளில் வெற்றி பெற்று இதோ இன்று ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி பெற வந்திருக்கிறான்.
""ஹலோ, அனைவருக்கும் வணக்கம். இங்கே மாணவர்களாகிய நீங்கள் இரண்டு வருடங்கள் பயிற்சி பெறப்போகிறீர்கள், உலகின் பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்து கூறி வரவேற்கிறேன்'' என்றார், விண்வெளி மையத்தின் தலைவர்.
மாதவன் இங்கே வந்து சேர்ந்து விளையாட்டுபோல் ஒரு வருடம் ஓடி மறைந்துவிட்டது. விண்கலத்தின் அடிப்படை அமைப்புகள் மற்றும் சர்வதேச விண்வெளி மையத்தின் செயல்பாடுகளைப் பற்றியெல்லாம் மாதவன் கற்று தெளிந்தான். விண்வெளி கலத்தில் மற்ற விண்வெளி வீரர்களோடு அதைச் செலுத்துவதற்குத் தகுதியாக நாசா ஜி-38 ஜெட் விமானங்களை ஓட்டக் கற்றுக்கொண்டான்.
இதைத்தவிர ஒரு விண்வெளி வீரன் கணிதம், இயற்பியல், வேதியியல், வான் நோய் மருத்துவத்தில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியமானதால் அவைகளையும் பயில வேண்டியது, மற்றும் ஆபத்துக் காலத்தில் பிழைக்கும் வழிமுறைகள் கற்பது என்று மாதவனுக்கு ஒரு வருடம் ஓடியது தெரியவில்லை.
இரண்டாம் வருடத் தொடக்கத்தில் ரஷ்ய மொழியை விண்வெளி மாணவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்த நேரம் அது. ஏன் ரஷியமொழி என்றால் சர்வதேச விண்வெளி மையத்தில் உறுப்பினராக இருப்பதனால், ரஷிய மிஷன் கண்ட்ரோல் சென்டருடன் தொடர்பு கொண்டு பேசவேண்டும் என்பதினால்தான்..!
இப்படி வாழ்க்கையின் அதிமுக்கியமான காலகட்டத்தில் இருக்கும்போதுதான் மாதவன் அவசரமாக இந்தியா திரும்பும் நிலைமை ஏற்பட்டது. சென்னையில் அவன் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டு வாரத்தில் இருதயத்தில் அறுவை சிகிச்சை என்றபோது, தன் ஒரே மகனின் திருமணத்தைக் காணவேண்டும் என்று பிடிவாதமாக மாலினியை அவனுக்குக் கட்டி வைத்துவிட்டாள்.
""மாலு, குட்மார்னிங் எழுந்திரும்மா'' என்று தன் மனைவியை வேண்டினான் மாதவன்.
ஹுஸ்டனின், டிசம்பர் மாத குளிருக்குச் சுகமாக, கம்பளிப் போர்வைக்குள் சுருண்டு கிடந்தாள் மாலினி.
விடியற்காலை நான்கு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, குளித்து முடித்து, ரெடியாகி காபி தயாரித்து, ரொட்டித் துண்டுகளை வெண்ணெய் தடவி, பதமாகச் சுட்டு எடுத்து அதன் நடுவில் வெள்ளரி மற்றும் தக்காளித் துண்டுகளை வைத்து, ஒரு டிரேயில் அவைகளை அடுக்கி டைனிங் டேபிளின் மீது வைத்துவிட்டுத்தான் மாதவன் மனைவியை எழுப்பினான். அவனின் கைக்கடிகாரம் மணி ஆறு என்று காட்டியது. பரபரப்பு அவன் உடலைத் தழுவிக் கொண்டது. சரியாக மணி 6.50க்கு அவன் விண்வெளி மையத்தில் இருக்க வேண்டும். இன்று ஜூனியர் விண்வெளி வீரர்களுக்கு, விண்கலத்தின் பாகங்களைப் பற்றியும் அவைகளின் இயக்கங்கள் பற்றியும் பாடம் எடுக்கவேண்டும். ஒருவரைத் தகுதியுள்ள விண்வெளி வீரனாக்கும் பாடத்திட்டத்தில், ஜூனியர்களுக்கு பாடம் எடுப்பதும் ஒன்றாக இருக்கிறது.
மாலினி, உடம்பில் சிறு அசைவைக்கூட காட்டவில்லை. திருமணம் முடிந்து இங்கே ஹுஸ்டனுக்கு வந்து மாதங்கள் ஆறு ஓடி விட்டன. ஆனாலும் மாலினியின் நடவடிக்கைகளில் மாறுதல் இல்லை. திருமணத்திற்கு முன்பு மாதவன் ஹாஸ்டலில் தங்கி இருந்தான். வேளா வேளைக்கு சாப்பாட்டுக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது. திருமணத்திற்குப் பிறகு விண்வெளி மையக் குடியிருப்பில் குடும்பஸ்தர்களுக்கான பிளாட்டுகளில் ஒன்றில் தங்கி வாழ்கிறான்.
ஒரு சமையல் அறை, இரண்டு கிங் சைஸ் படுக்கை அறைகள், பெரிய ஹால், அதோடு அதி நவீன சாதனங்களுடன் அந்த பிளாட் படுவசதியாக இருந்தது. இப்போது சாப்பாட்டை, வீட்டில் தயாரிக்க வேண்டிய நிலை. மாதவனுக்கு பகல் உணவைப் பற்றிய கவலை இல்லை. இரவு, காலை ஆகாரத்தை இப்போது மாதவன்தான் சமைக்க வேண்டி இருந்தது.
ஏன் மாலினிக்கு என்ன ஆச்சு?
பெரிய செல்வந்த தம்பதியரின் ஒரே மகள். அடுப்படி என்றால் என்ன என்றே தெரியாதாம். எல்லா பெண்களுமா தெரிந்துகொண்டு வருகிறார்கள். கணவன் மாதவன் காலையில் செய்து வைத்து விட்டுப் போகும் டிபனை சாப்பிட்டுவிட்டு, வெளியே சுற்றப் போய்விடுவாள். மதிய உணவு பிஸ்ஸô ஹட்டிலேயே முடிந்துவிடும். இரவு வந்ததும் தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்தால் மாதவன் களைத்து வீடு திரும்பும்வரை எழுந்திருக்க மாட்டாள்.
காலையில் வீட்டை எப்படி விட்டுச் சென்றானோ, அதே நிலையில் அது இருக்கும். பாத்திரங்களை, டிஷ்வாஷருக்குள்கூட போடமாட்டாள். வாஷிங் மிஷின் கூட மாதவன் வரவுக்காகக் காத்து நிற்கும். விடுமுறை தினத்தில் வீட்டை வேக்வம் செய்வதும் அவன்தான் என்பது கொடுமையான விஷயம்தானே.
எப்படியோ, மாலினியை கடிந்துகொள்ள மனமில்லாமல் எல்லா வேலைகளையும் மாதவனே செய்தான். விண்வெளியில் உயிர் பிழைக்கும் முறைகளை வான்வெளி மையத்தில் கற்றான் என்றால் வீட்டில் மாலினியோடு வாழ்வதே பெரிய சவாலாக இருக்க, எப்படியோ சமாளித்து வாழ்ந்தான்.
இந்த லட்சணத்தில் மாலினி ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயானாள். உதவிக்காக வந்த மாலினியின் தாயாரும் அவளுக்கு எவ்வளவோ புத்திமதிகளை எடுத்துக் கூறினாள். ""மாதவனைப்போல ஒரு கணவன் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும், ஆகையினால் கிடைத்த அருமையான வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதே'' என்றாள்.
எல்லா அறிவுரையும் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிப்போனது.
குழந்தை ராகுலுக்கு வயது மூன்று ஆகிவிட்டது. அடுத்த வருடம் விண்ணில் ஏவ இருந்த விண்கலத்தில் பயணம் செய்யப்போகின்ற வீரர்களில் மாதவனையும் ஒருவனாகத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
மகிழ்ச்சியான இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்ள வீட்டிற்கு மாதவன் ஓடோடி வந்தான். வழக்கம்போல வீடு பூட்டியிருந்தது. தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்துகொண்டு மாதவன் உள்ளே நுழைந்தான்.
கிரஷ்ஷிலிருந்து பிள்ளையை பிக்கப் செய்யக்கூட முடியாமல் எங்கே சென்றுவிட்டாள் என்று கவலையில் மாதவன் மூழ்கினான். ஏதேச்சையாக சாப்பாட்டு மேடையின் மீது இருந்த ஒரு காகிதத் துண்டு அவன் கண்களில் பட்டது. அதில், "என்னைத் தேட வேண்டாம். நான் என் பாய்பிரண்ட் பீட்டரோடு போகிறேன், இனி என் வாழ்க்கை அவனோடுதான்' என்று எழுதியிருந்தது.
சுற்றும் தலையைத் தாங்கியபடி மாதவன் அப்படியே சரிந்தான். தாய்நாட்டிலும், அந்நியநாட்டிலும் அவன் பெற்ற பெருமைகள் அனைத்தும், சரியான வாழ்க்கைத் துணை அமையாததால் சிறுமைப்பட்டு போய்விட்டன.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
(குறள் எண்: 52)
பொருள் :
நல்ல குணமும், பண்பும், மனைவியிடம் இல்லாமற் போனால் அந்த இல்வாழ்க்கை எத்தனைச் சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.
(தொடரும்)