தேவையானவை:
வெண்ணெய் - 100 கிராம்
பொடி செய்த சர்க்கரை - 100 கிராம்
மைதாமாவு - 250 கிராம்
சுக்குப்பொடி - 2 தேக்கரண்டி
தேன் - 2 தேக்கரண்டி
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை: வெண்ணெய்யை உருக்கி கீழே இறக்கி அதனுடன் தேனையும், சர்க்கரையையும் சேர்த்து லேசான சூட்டில் வைத்துக் கிளறி நன்றாகக் கரைந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதில், மைதா மாவையும், சுக்குப் பொடியையும் சோடா உப்பையும் சேர்த்து, அதில் உருக்கிய சர்க்கரை கலவையைச் சேர்த்து ரொட்டிமாவு போல் பிசைந்து சப்பாத்தி போன்று இட்டு பிஸ்கட் அச்சில்இட்டு வெட்டி போர்க்கால் துளை போட்டு, நெய் தடவிய ஒவன் தட்டில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும்.
தேவையானவை:
மொடக்கத்தான் கீரை - 1 கட்டு
தேங்காய் - 1 மூடி
புளி - ஒரு சிறு உருண்டை
துவரம் பருப்பு - 1கரண்டி
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வற்றல்மிளகாய் - 4
எண்ணெய், உப்பு - தேவையானது
செய்முறை: கீரையை ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, ஊளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, வற்றல் மிளகாய் இவற்றைப் போட்டு வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும். புளி, உப்பு, கீரை இவற்றையும் போட்டு வதக்க வேண்டும். தேங்காய் துருவலையும் வறுத்து பிறகு எல்லாவற்றையும் மொத்தமாக மிக்ஸியில் போட்டு கரகரப்பாய் அரைத்தெடுத்தால் துவையல் ரெடியாகி விடும்.
தேவையானவை:
தூதுவளைக் கீரை - 1 கிண்ணம்
பூண்டு - 5 பல்
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1 கரண்டி
பொட்டுக்கடலைப் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையானவை
கொத்துமல்லித்தழை - 1 பிடி
செய்முறை: தூதுவளைக் கீரையில் முட்களை எடுத்து தனித்தனி இலையாகப் பிய்த்து கழுவி உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர்விட்டு வேக வைக்க வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, சீரகம், கறிவேப்பிலை போட்டு பூண்டு சிவந்ததும் வெந்த கீரையைப் போட்டு மிளகாய்த்தூள் பொரி கடலைப் பொடி, மல்லி தழை, தேங்காய்த் துருவல் போட்டு நன்றாக சுருள கிளறி கீழே இறக்க வேண்டும். சளி, தொண்டைக் கட்டுக்கு நல்ல மருந்தாகும் தூதுவளைக் கீரை.
தேவையானவை:
சுண்டைக்காய் வற்றல் - 50 கிராம்
உளுத்தம் பருப்பு - 25 கிராம்
மிளகாய் வத்தல் - 3
புளி - சிறு உருண்டை
பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: சுண்டைக்காய் வற்றலை எண்ணெய்விட்டு வறுத்துக் கொள்ளவும். மற்ற தாளித சாமான்களை வறுத்து சுண்டைக்காய் வற்றலோடு புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். பின்னர், சிறிது எண்ணெய்யில் வதக்கி சாப்பிட உடலுக்கு சத்தான துவையலாகும்.
தேவையானவை:
கண்டந்திப்பிலி - 10 கிராம்
அரிசி திப்பிலி - 5 கிராம்
தனியா, மிளகு, சீரகம்,
சுக்கு - தலா 10 கிராம்
லவங்கப்பட்டை - 1
சிவப்பு மிளகாய் - 3
துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
தக்காளி - 100 கிராம்
பெருங்காயப் பொடி - 1 தேக்கரண்டி
புளி - 1 உருண்டை
மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை , கொத்துமல்லி - 1 ஈர்க்கு
செய்முறை: புளி, உப்பு தக்காளி, வெந்த பருப்பு, மஞ்சள்பொடி தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் வறுத்து அரைக்க வேண்டும். புளியைத் தண்ணீர்விட்டு கரைத்து புளித் தண்ணீரில் அரைத்த விழுது, மஞ்சள் பொடி, உப்பு, தக்காளி சேர்த்து கொதிக்க விடவேண்டும். துவரம் பருப்பை குழைய வேக வைத்து இதில் கலந்து கொதி வந்ததும் கீழே இறக்க வேண்டும். பிறகு கரண்டியில் நெய்விட்டு கடுகு தாளித்து ரசத்தில் விட வேண்டும். கொத்துமல்லி, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.