மகளிர்மணி

கோலங்கள் மூலம் கரோனா விழிப்புணர்வு..!

மதுரையில் கோலங்கள் மூலம் கரோனா  பரவுதலைத் தடுக்கும் விழிப்புணர்வைப் பரப்பி வரும் போதி லட்சுமி பிரபலம்.  

பிஸ்மி பரிணாமன்

மதுரையில் கோலங்கள் மூலம் கரோனா பரவுதலைத் தடுக்கும் விழிப்புணர்வைப் பரப்பி வரும் போதி லட்சுமி பிரபலம். புள்ளிக் கோலங்களை மட்டும் வீட்டு முற்றத்தில் போட்டு வந்த போதி லட்சுமி, ஊரடங்கு தொடங்கியதிலிருந்து கரோனா குறித்த விழிப்புணர்வு தரும் கோலங்களை பெரிய அளவில் முற்றத்தில் வரைய ஆரம்பித்தார்.

இவரது கோலங்களைக் காண, விழிப்புணர்வு வாசகங்களை வாசிக்க ஆத்திகுளம் பகுதியில் வசிப்பவர்கள் காலையில் இருந்து வர ஆரம்பித்துவிடுகிறார்கள். இதுவரை 105 கோலங்களை வரைந்திருக்கும் போதி லட்சுமி ஆத்திகுளம் பகுதியின் மகளிர் சுயஉதவிக் குழுவின் பொறுப்பாளரும் ஆவார்.

"திருமணம் ஆனதிலிருந்து மதுரையில் வசித்து வரும் நான், திண்டுக்கல்லுக்கு அருகில் பிறந்து வளர்ந்தவள். நூலகப் படிப்பில் பட்டம் பெற்று சிறிது காலம் நூலகராக வேலை பார்த்தேன். கடந்த எட்டு ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக் குழு மூலமாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து சாலைகள் அமைக்க உதவி வருகிறோம். பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து எப்படி சிறு துகள்களாக ஆக்க வேண்டுமென்றும், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கலாம் என்றும் இந்தியாவில் முதன்முதலாகக் கூறிய மதுரை பேராசிரியர் பத்மஸ்ரீ வாசுதேவன் எங்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, நல்ல உணவுப் பழக்கங்கள், தானியங்களை உணவாகச் சேர்த்துக் கொள்ளுதல், மூலிகைகளை உடல் உபாதைகளுக்குப் பயன்படுத்துதல், மரக்கன்று நடுதல் குறித்த விழிப்புணர்வுகளை எங்கள் குழு மூலம் பரப்பி வந்தோம். கரோனா பரவ ஆரம்பித்து ஊரடங்கு வந்த பிறகு "வீட்டை விட்டு வெளியே போக முடியாது... மகளிர் சுய உதவிக் குழு பணிகளைச் செய்ய முடியாது' என்ற சூழல் ஏற்பட்ட போது கரோனா குறித்த விழிப்புணர்வைப் பரப்ப கோலத்தை ஓர் ஊடகமாக கையில் எடுத்தேன்.

கரோனா குறித்து பல ஊடங்களில் வரும் விழிப்புணர்வு வாசகங்களுடன், நானும் யோசித்து எழுதிய வாசகங்கள்தான் கோலங்களில் இடம் பெறுகின்றன. ஒரே வாசகங்களை மீண்டும் எழுதுவதில்லை. அதனால் புதிய புதிய வாசகங்களை எழுதுவதிலும் அடுத்த கோலத்தின் வடிவம் எப்படி அமைப்பது என்பதிலும் நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. அடுத்த நாள் கோலத்திற்காக முன்னைய நாள் குறிப்பு எடுத்துக் கொள்வேன். தொடக்கத்தில் முதல் நாள் கோலத்தை புதிய கோலம் போடுவதற்காக அடுத்த நாள் அழிப்பது சிரமமாக இருந்தது. அதனால் சாணம், மஞ்சள் கலந்த தண்ணீரை வீட்டிற்கு முன் தெளித்து அதன் மேல் கோலத்தைப் போட்டேன். இதனால், அடுத்த நாள் புதிய கோலம் போட, முதல் நாள் கோலத்தை எளிதாக அழிக்க முடிந்தது. கோலத்தைப் பார்ப்பவர்கள் "சட்டென்று வாசிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பெரிய எழுத்துகளில் எழுதினேன். அதனால் கோலம் பெரிதாக அமைந்துவிட்டது. ஒரு கோலம் போட்டு முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும்.

அதிகாலை ஐந்தரை மணிக்கு வரைய ஆரம்பிப்பேன். பிரதான சாலைக்கு நாங்கள் குடியிருக்கும் தெருவழியாகத்தான் போக வேண்டும் என்பதால், இந்த குடியிருப்பில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் கோலத்தைக் கண்டதும் நின்று வாசித்து விட்டுத்தான் போவார்கள். வர முடியாதவர்கள், வீட்டில் யாரையாவது அனுப்பி அலைபேசியில் படம் பிடித்து வரச் சொல்வார்கள். கரோனா காலத்தில் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்ன உணவுவகைகளை உண்ண வேண்டும், கரோனா தாக்குதல் வராமல் இருக்க எந்த நாட்டு மருந்துகளை உட்கொள்ளலாம் என்பதைக் கோலம் மூலம் தெரிவிப்பதால், கோலம் வரையத்தொடங்கிய கொஞ்ச நாளில் மதுரை நகர் முழுவதும் பேச்சாகி எல்லா சானல்களும் எனது கோலங்கள் குறித்து செய்திகளை ஒளிபரப்பின.

வேளாண் துறை ஏற்பாடு செய்த விழாவில் "கோலம் மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வினைப்பரப்பி வருவருவதற்காக' என்னைப் பாராட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி பெரிய குத்து விளக்கு ஒன்றைப் பரிசளித்தார்.

மாமனார் சித்த வைத்தியத்தில் அறிஞர் என்பதால், எங்கள் வீட்டில் சீனி பயன்பாட்டில் இல்லை. நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டிதான். வீட்டில் மூலிகை காப்பி, தேநீர்தான். வீட்டிலும் சரி வெளியிலும் சரி... பரோட்டா.. நூடுல்ஸ் எதையும் தயாரிப்பதில்லை...சாப்பிடுவதில்லை. அரிதாக ஹோட்டலுக்குப் போனாலும் அங்கேயும் இட்லி, தோசை, சப்பாத்திதான் சாப்பிடுவோம். நூறாவது கோலம் வரைந்த போது கபசுர கசாயம் தயாரித்து கோலங்களை வாசிப்பவர்களுக்கு வழங்கினேன். கரோனா நம்மை விட்டுப் போய்விட்டது என்று அரசு அறிவிக்கும் வரை கரோனா கோலம் தொடரும்'' என்கிறார் போதி லட்சுமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT