லட்டுகள் பிடிக்க வரவில்லையா?
சரியாக லட்டுகள் பிடிக்க வரவில்லையா? சிறிதளவு கோவாவை பூந்தியில் சூட்டோடு கலந்துப் பிடித்தால் லட்டு அருமையாக வரும்.
சரியாக லட்டுகள் பிடிக்க வரவில்லையா? சிறிதளவு கோவாவை பூந்தியில் சூட்டோடு கலந்துப் பிடித்தால் லட்டு அருமையாக வரும்.
*ஜவ்வரிசிப் பாயசம் செய்யும்போது வெறும் வாணலியில் ஜவ்வரிசியை நன்குப் பொரித்து கொள்ளவும். பிறகு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். குறைந்த நேரத்தில் பாயசம் ரெடி ஆகிவிடும்.
*குலாப்ஜாமூன் செய்யும்போது ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்தால் ஜாமூன் மிருதுவாக வரும். சுவையும் கூடும்.
*ஜாங்கிரி செய்யும்போது துணிக்குப் பதிலாக பால் கவரைக் கோன் மாதிரி செய்து மூலையில் வெட்டி மாவை ஊற்றிப் பிழியலாம்.
*தேங்காய்ப் பர்ஃபி செய்யும்போது ஏலக்காய்த் தூளுக்குப் பதில் சிறிது வெனிலா எஸன்ஸ் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
*அதிரசம் செய்யும்போது அந்த மாவுடன் கொட்டையில்லாத பேரீச்சம் பழங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து அதிரசம் செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
*பர்ஃபி, மைசூர்பாகு போன்றவற்றைத் துண்டுகள் போடும்போது சிதறி விழும் தூள்களை ஒன்றாகக் கலந்து வைத்து கொண்டு, சோமாஸ் செய்யும்போது இந்த தூளைப் பூர்ணமாக வைத்து சில சோமாஸ்களை சின்னசின்னதாக தயாரித்து விடுங்கள். தனிச்சுவையுடன் இருக்கும்.
*கேசரி, பால்கோவா , தேங்காய் பர்ஃபி போன்ற இனிப்புகளை நான்-ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடிபிடிக்காமல் எளிதாகச் செய்யலாம்.
*இரண்டு பங்கு பாசிப்பருப்பு, ஒரு பங்கு கடலைப்பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவில் மைசூர்பாகு செய்தால் மைசூர்பாகு மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.
* எந்த வகையான இனிப்பு செய்தாலும் ஒரு கல் உப்பு அதில் சேர்த்தால் அந்த இனிப்பு திகட்டாமல் இருக்கும்.
-ஆர்.கீதா
*தட்டை செய்யும்போது அரிசி மாவுடன் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி மாவுடன் கலந்து செய்தால் தட்டை கரகரப்பாக, சுவையுடன் கமகமவென வாசனையாக இருக்கும்.
*முறுக்குக்கு மாவு பிசையும்போது அத்துடன் ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி மாவைப் பிசைந்து முறுக்கு சுட்டு எடுத்தால் நெய் மணத்துடன் கூடுதலான சுவையுடன் இருக்கும்.
*சிப்ஸ், காராபூந்தி ஆகியவற்றை தயார் செய்யும்போது காரத்திற்கு மிளகாய்த்தூள் போடுவதற்குப் பதில் மிளகுத்தூள் போடலாம். காரமும் குறைவாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
*சீடை, தட்டை முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப்பால் விட்டுச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
*முறுக்கு மாவு வகைகளைக் கலக்கும்போது ஒரு தேக்கரண்டி, எண்ணெய் ஊற்றி கலந்தால், முறுக்கு கடகடவென்று இல்லாமல் மொறு மொறுப்பாக இருக்கும்.
- சி.ஆர்.ஹரிஹரன்