முகப்பு
மகளிர்மணி

கதை சொல்லும் குறள்: மனக்கவலைக்கு  அருமருந்து!

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வத்தக் குழம்பிற்கு இணையாக மங்களத்தின் மனம் கொதித்தது. சே, என்ன வாழ்க்கை இது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:


அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வத்தக் குழம்பிற்கு இணையாக மங்களத்தின் மனம் கொதித்தது. சே, என்ன வாழ்க்கை இது. எப்பொழுதும் பற்றாக்குறை. பார்த்து, பார்த்து செலவு செய்தாலும் கையில் பத்து ரூபாய்கூட தங்காத நிலை. சற்றுமுன் மகன் செந்தில் கேட்ட கேள்வி மனதில் முள்ளாய் நெருடியது.

""அம்மா, இன்னைக்கு என்ன சமையல்?''

""வத்தக் குழம்பும், சுட்ட அப்பளமும்தான் கண்ணா, போய் சீக்கிரம் குளிச்சுட்டு நெத்தியில் திருநீறு இட்டுக்கிட்டு சாப்பிட வா''.

""ஏம்மா, உருளைக்கிழங்கு கறி பண்ணியிருந்தா எவ்வளவு நன்றாக இருக்கும்'' என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டுச் செல்லும் பன்னிரண்டு வயது மகனுக்கு எதைச் சொல்லி புரியவைப்பாள்-?

மகள் மேகலை பிறந்து பத்து வருடங்கள் கழிந்தபிறகு பிறந்த மகன். தங்களால் முடிந்த அளவுக்கு, மகனையும், மகளையும் அருமை, பெருமையாக வளர்க்கத்தான் முயற்சிக்கிறார்கள், ஆனால் ஏழை குருக்களுக்கு வாழ்க்கைப்பட்டு ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட முடியுமா?

மங்களத்தின் கணவன் குருமூர்த்தி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அல்லிக்குளம் என்ற சிறிய கிராமத்தில் உள்ள ஒரே சிவன் கோயிலில் குருக்களாக இருக்கிறார். கோயிலில் கிடைக்கும் சொற்ப வருமானம். மாதம்தோறும் வீட்டுக்கு வந்து சேரும் ஒரு மூட்டை அரிசி. இதைக் கொண்டு வயிற்றுப்பசியை ஆற்றிக் கொள்ள முடிகிறது.

மேகலைக்கு இந்த ஆவணி பிறந்தால் இருபத்து இரண்டு வயது முடிந்துவிடுகிறது. இவள் வயதில் மங்களத்துக்கு மேகலை பிறந்து விட்டாள். ஐந்து பெண் பிள்ளைகளில் கடைசியாகப் பிறந்தவள் மங்களம். அவளுக்கு பதினெட்டு வயது எப்பொழுது முடியும் என்று காத்திருந்து, குருமூர்த்தியின் கையில் ஒப்படைத்துவிட்டு, அவளின் அப்பா கண்ணை மூடி விட்டார்.

கணவன் குருமூர்த்தியின் குணம் தங்கம்தான். "குணத்தில் தங்கமாய் இருந்து என்ன பயன்? மங்களத்தின் உடம்பில் தாலியைத் தவிர குண்டுமணி தங்கம்கூட இல்லையே. கையில் போட்டிருந்த இரண்டு வளையல்கள் மேகலையின் பி.ஏ., படிப்புக்காக விற்கப்பட்டது. காதில் போட்டிருந்த கால் பவுன் தங்கக் கம்மல்களும், கழுத்தை அலங்கரித்த இரண்டு பவுன் தங்கச்சங்கிலியும் போன வருடம், மங்களத்தின் கர்ப்பப்பையில் ஏற்பட்ட கோளாறுக்காக, அதை நீக்க செய்யப்பட்ட அறுவை சிகிச்சை செலவுக்காக அடகுக் கடைக்கு சென்றதை இன்றளவும் மீட்க முடியவில்லை'.

தானும், தன் மகளும் மூளியாக, கவரிங் நகைகளோடு வலம் வர மனமில்லாமல் இப்படி நடமாடுவதை யாரிடம் சொல்லி மனஆறுதல் கொள்வது?

சதாசர்வகாலமும் "நமசிவாய' என்று சிவன் நாமத்தைச் சொல்லியபடி, மங்களம் பெண்ணின் கல்யாணத்தைப் பற்றி பேச்சை எடுத்தாலும், வீட்டின் நிலைமையைச் சொன்னாலும், "எல்லாம் சிவபெருமான் பார்த்துக் கொள்வான், மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றாமலா போய்விடுவான்' என்று நிம்மதியாக வலம் வரும் குருமூர்த்தியைப் பார்த்தால் மங்களத்திற்கு எரிச்சல் வயிற்றிலிருந்து புறப்பட்டு உச்சந்தலையைப் பிளக்கிறது.

சிவனுக்கு, அபிஷேக ஆராதனை, கோயிலைப் பராமரிப்பது, வரும் பக்தர்களை சிவனடியார்களாக நினைத்து சேவை செய்வது என்று இவற்றிலேயே வாழ்க்கையைக் கழித்தால் கையில் நாலு காசு எப்படி சேரும்? கிராமத்துப் பெருமாள் கோயிலைச் சேர்ந்த அர்ச்சகர் வெங்கடேசன் ஸ்கூட்டரில் பவனி வருகிறார். கோயிலைத் தவிர புரோகிதர் தொழிலையும் செய்கிறார்.

சிவபெருமான் அறிவைத்தான் கொடுப்பான். அதைப் பயன்படுத்திக் காசு சம்பாதிக்க வக்கில்லை என்றால் அவன் என்ன செய்வான்?

தினமும், ராத்திரி படுக்கையில், கணவனுடன் சண்டைதான். எதற்கும், பிடிகொடுக்காமல் "நமசிவாய' என்று சொல்லிவிட்டு, திரும்பிப் படுத்த மறுநிமிடம் குருமூர்த்தியை நித்திரை தேவதை ஆட்கொண்டு விடுகிறாள். மங்களம் மட்டும்தான் மேகலையின் கல்யாணம், செந்திலின் எதிர்காலம் பற்றி எல்லாம் கவலைப்பட்டு நடுநிசியைத் தாண்டி நாள்முழுவதும் வீட்டுவேலை பார்த்த அலுப்பால் தூங்கத் தொடங்குவாள்.

அன்று மாலை, இரவு உணவிற்காக பருப்புத் தொகையல், ரசத்தைச் செய்துவிட்டு, அவசரம் அவசரமாக மங்களம் கிளம்பினாள். கடந்த பத்து நாள்களாக சிவன் கோயிலில் பெரியபுராணம் பேருரையை சாம்பசிவ சாஸ்திரிகள் நடத்திக் கொண்டு வருகிறார். என்ன அருமையான பேச்சு! 63 நாயன்மார்களில் பதினைந்து பேர்களைத் தேர்ந்தெடுத்து, பெரிய புராணத்திலிருந்து மேற்கோள்களைக் காட்டி சாம்பசிவ சாஸ்திரிகள் பேசுவதைக் கேட்டால், நாஸ்திகனும், ஆஸ்திகன் ஆகிவிடுவான்.

மங்களத்திற்கே சிவபெருமானின் மீது பக்தி மிகுந்து விட்டது. தன் கணவனுடன் வாழ்ந்தும் அஞ்ஞானியாக சிவபெருமானின் திருவடிகளில் தன் குடும்ப பாரத்தை வைத்து விட்டு நிம்மதியாக வாழத்தெரியாத தன் நிலையை எண்ணி வெட்கமுற்றாள்.

சாம்பசிவ சாஸ்திரிகள், சமுதாயத்தில் பெரும் அந்தஸ்தில் இருந்தார். பல வெளிநாடுகளில் தன் ஆன்மிகப் பேருரைக்காக பயணம் மேற்கொள்பவர். அவரை இந்த சிறிய கிராமத்திற்கு வரவழைத்தவர் குருமூர்த்தியாக இருந்தார். எப்படி இது சாத்தியப்பட்டது என்றால் குருமூர்த்தியின் பால்ய சிநேகிதனாக சாம்பசிவ சாஸ்திரிகள் இருந்ததனால், அவரின் அழைப்பை ஏற்று இங்கே வந்து தங்கி பேருரையாற்ற ஒத்துக் கொண்டார்.

சாம்பசிவ சாஸ்திரிகள் திருப்தியாக சாப்பிட்டு முடித்தார். அரைத்துவிட்ட சாம்பார், உருளைக்கிழங்கு கறி, அப்பளம், பாயசம் என்று அதிக வகைகள் இல்லாத சாப்பாடு. குருமூர்த்தியின் அன்பு கட்டளைக்கு உடன்பட்டு அவருடைய வீட்டிற்கு சாப்பிட வந்திருந்தார்.

தாம்பூலம் முடிந்து, புறப்படும் நேரம், ""குருமூர்த்தி, உன் மனைவியையும் கூப்பிடு, நான் கிளம்புகிறேன், போகும்முன் ஒரு விண்ணப்பம், உன் மகள் மேகலையை என் வீட்டு மருமகளாக ஆக்கிக்கொள்ள ஆசைப்படுகிறேன். என் ஒரே மகன், அமெரிக்காவில் பணிபுரிகிறான். தாயில்லாதவனை ஒழுக்கத்தோடு வளர்த்திருக்கிறேன். ஆறு மாதங்களில் இந்தியா திரும்பி இங்கேயே அவன் பணிபுரிந்து கொண்டு இருக்கும் வங்கியின் கிளையில் சேர இருக்கிறான்,

உங்களுக்கு சம்மதம்தானே, இதோ இதுதான் என்னுடைய பையனின் புகைப்படம்'' என்று குருமூர்த்தியின் கைகளில் சாம்பசிவ சாஸ்திரிகள் ஒரு புகைப்படத்தைத் திணித்தார்.

ஆவல் உந்த மங்களம் புகைப்படத்தை எட்டிப் பார்க்க, அங்கே பேரழகனாகச் சிரித்துக் கொண்டு காட்சி அளித்தான் அந்த இளைஞன்.

""சாம்பசிவம், என்னால் உன் தகுதிக்கு...'' என்று குருமூர்த்தி சொல்லி முடிக்கும்முன்,

""ஒரு பைசாகூட நீ செலவு செய்யவேண்டாம், உன் மகள் என் பையனுக்கு ஏற்ற அழகுடனும், குணத்துடனும் இருப்பதைப் புரிந்து கொண்டேன். அதுவே போதும்''.

மங்களம் கல்லாகச் சமைந்தாள். அநாவசியமான கவலைகளில் தான் மூழ்கி இருக்க, எல்லாவற்றையும் சிவனின் காலடியில் வைத்துவிட்டு சிவனே என்று தனக்கு வழங்கப்பட்ட கடமையைச் சரியாகச் செய்து மனநிம்மதியோடு வாழ்ந்த தன் கணவனைப் பார்த்துக் கண்கலங்கி நின்றாள் மங்களம்.

""தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது''.

(குறள் எண்: 7)

பொருள் : தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு அன்றி மற்றவர்களுக்கு மனக் கவலையைப் போக்குவது கடினம்.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →