ஐந்தாவது தலைமுறையாக நடனம்!
கலைத் துறையில் தொடர்ந்து ஐந்தாவது தலைமுறையாக முத்திரை பதித்து வருகின்றனர் பரதநாட்டிய சகோதரிகள்.
கலைத் துறையில் தொடர்ந்து ஐந்தாவது தலைமுறையாக முத்திரை பதித்து வருகின்றனர் பரதநாட்டிய சகோதரிகள். தஞ்சாவூர் மானோஜியப்பா வீதியைச் சேர்ந்த இவர்களது தாய் ஏ. செல்வி, பழம்பெரும் நாட்டிய கலைஞரான காரைக்கால் சாரதாம்பாளின் கொள்ளுபேத்தி. இவரது தாத்தா மாரிமுத்துப் பிள்ளை, தந்தை டி.எம். வாசுதேவன் பிள்ளை இசையுலகில் பிரபலமானவர்கள்.
"கலைநன்மணி' விருது பெற்ற செல்வி மரபுவழியில் பரத நாட்டியத்தைக் கற்று 40 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர். இவரது மகள் கல்யாணி, நந்தினி தற்போது ஐந்தாவது தலைமுறையாக பரதநாட்டியத்தில் புகழ்பெற்று வருகின்றனர். இவர்களில் கல்யாணி (36) தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் "கலை வளர்மணி' விருதும், இவரது தங்கை நந்தினி (31) கலை, பண்பாட்டுத் துறையின் "கலை இளமணி' விருது உள்பட பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளனர்.
தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட இவர்களில் திருமணத்துக்குப் பிறகு கல்யாணி சென்னையிலும், நந்தினி ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும் வசித்து வருகின்றனர். என்றாலும், இருவரும் இணைந்தே பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆடி வருகின்றனர். இதுகுறித்து கல்யாணி தெரிவித்தது:
""நான் 3 வயது முதல் பரதநாட்டியம் கற்றேன். இதேபோல, என் தங்கை நந்தினியும் சிறு வயது முதல் ஆட ஆரம்பித்தார். முதலில் எங்களுக்கு அம்மாதான் குரு. அம்மாவைப் பார்த்துதான் நாங்கள் ஆட ஆரம்பித்தோம். பின்னர், 12 வயது முதல் கே.ஜே. சரஸôவிடம் கற்றுக் கொள்ளத் தொடங்கினோம். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நாட்டிய குரு. இவரிடம் நிறைய கற்றுக் கொண்டோம்.
சென்னையில் நடைபெறும் மார்கழி சீசனில் பெரும்பாலும் எனது சகோதரியுடன் இணைந்து ஆடி வருகிறேன். மாமல்லபுரத்தில் நடைபெறும் நாட்டியக் கலை விழா, தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய விழா போன்றவற்றில் அதிகமாக ஆடியுள்ளோம். கேரளம், தில்லி, சத்தீஸ்கர், மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும் சென்றுள்ளோம்.
வள்ளலாரின் திருவருட்பா, குமரகுருபரரின் பிள்ளைத் தமிழ், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் உள்ளிட்டோரின் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆடி வருகிறோம்.
பரதநாட்டியத்தில் தெலுங்கு கீர்த்தனைகளே அதிகமாக உள்ளன. தெலுங்கு மன்னர்கள் காலத்தில் பாடல்கள் நிறைய உருவாக்கப்பட்டதே இதற்குக் காரணம். ஆனால், புரியாத மொழியில் பாடி ஆடினால் பாமர மக்களுக்குச் சென்றடையாது. எனவே, எங்களது நாட்டியம் அனைத்து விதமான
ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் தமிழ் வர்ணம் எடுத்து ஆடுகிறோம். கோயில்களில் அந்தந்த தெய்வங்களுக்கு ஏற்ப ஆடுவோம்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பாடல்கள் மட்டுமல்லாமல், யாரும் செய்யாத பாடல்களையும் எடுத்து, நாங்களே வடிவமைத்து ஆடி வருகிறோம். நான் குன்றக்குடி குறவஞ்சி நாட்டிய நாடகம் செய்துள்ளேன். இதேபோல, நந்தினி பாஞ்சாலி சபதம், அறுபடை வீடு போன்றவற்றை எடுத்து செய்துள்ளார். சிலப்பதிகாரம், திருக்குறள், ஆத்திச்சூடி உள்ளிட்டவற்றையும் பரதநாட்டிய வடிவில் ஆட முயற்சி செய்வதே எதிர்காலத் திட்டமாக வைத்துள்ளோம். உதாரணமாக அறம் செய்ய விரும்பு என்றால், அதற்கேற்ப கதை அமைத்து, குழந்தைகளுக்கும் புரியும் வகையில் நடனமாட முயன்று வருகிறோம்.
நாட்டியம் கற்றுக் கொண்டாலும் இடையே, பள்ளி, கல்லூரிக் கல்வியைத் தவறவில்லை. நான் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ.வும், பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பரதநாட்டிய
வியலும், எம்.பில். பட்டப்படிப்பும் பயின்றேன். இதைத்தொடர்ந்து நாட்டியவியலில் முனைவர் பட்டமும் பெற்றேன். இதேபோல, எனது தங்கை நந்தினி பி.சி.எஸ்., எம்.பி.ஏ., எம்.எப்.ஏ. (பரதநாட்டியம்) படித்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள கல்யாணி "பரதாலயா' என்ற பள்ளியை நடத்தி வருகிறோம்.