கதை சொல்லும் குறள் - 34: நேற்றும் இன்றும்!
அத்திப்பட்டி கிராமமே, கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது.
அத்திப்பட்டி கிராமமே, கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்தது. தஞ்சாவூரின் நன்செய் நிலப் பகுதியில் இந்தக் கிராமம் இருந்ததால் ஆண்டுக்கு மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யும் நிலப்பகுதியாக மிளிர்ந்துக் கொண்டிருந்தது. நெல், கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்கள் மட்டுமே இங்கே பயிரிடப்பட்டன.
மொத்தம் ஐநூறு குடும்பங்கள் இங்கே வாழ்கின்றனர். இவற்றில் நூறு குடும்பங்கள் சொந்தமாக வயல்களைக் கொண்டவர்கள். மீதி நானூறும், மிராசுதார் கண்ணப்பரின் அறுபது ஏக்கர் நிலங்களிலும், அரிசி மில், கழனிகளிலும், சர்க்கரை ஆலைகளிலும் வேலை பார்ப்பவர்களாக இருந்தனர். கண்ணப்பரின் மூத்த மகன் குமரனுக்கு என்று பாதிச் சொத்தை அவனுடைய திருமணத்தின் பொழுதே கண்ணப்பர் எழுதிக் கொடுத்துவிட்டார்.
ஆனால் குமரன் பிரிந்து தனியாகச் செல்லாமல் தன் தந்தையுடனேயே வாழ்ந்து வருகிறான். கண்ணப்பரின் மனைவி சண்முகசுந்தரி தன் மருமகள் மகாலஷ்மியையும், மகள் மோகனாவையும் ஒன்றாகச் சீர்தூக்கி அன்பைச் செலுத்தியதினால் குடும்பத்தில் பிரிவினை என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாமல் போயிற்று. மகன் வயிற்றுப் பேத்தி வெண்ணிலா மீது கண்ணப்பரும், சண்முகசுந்தரியும் உயிரையே வைத்திருந்தனர்.
ஆறே வயதான வெண்ணிலாவும் ""தாத்தா, பாட்டி'' என்று அவர்களையேச் சுற்றி வருவாள். இருபது வயதான அத்தை மோகனாதான் அவளுக்குத் தோழியாகத் திகழ்ந்தாள். மோகனாவுக்குத் தக்க வரனாகத் தேடிக் கொண்டிருந்தனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கண்ணப்பருக்கு அறுபது வயது முடிந்தது. அதே சமயத்தில் கும்பகோணத்தில் ஒரு பெரிய இடத்தில் மோகனாவுக்கு, மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு கண் நோய்களுக்கான மேற்படிப்பைப் படித்துக் கொண்டிருந்த மகேந்திரனுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
குடும்ப ஜோசியரைக் கூப்பிட்டு கலந்துரையாடியதில், கண்ணப்பருக்கு அறுபதாம் கல்யாணத்திற்கான நாளைக் குறிக்கும்பொழுதே, அதற்கு மறுநாளும் நல்ல சுபமுகூர்த்த நாளாக இருந்ததினால் அன்றைக்கு மோகனா, மகேந்திரனுடைய கல்யாணத்தையும் நடத்திவிடலாம் என்று முடிவு செய்தனர்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பதுபோல அறுபதாம் கல்யாணத்திற்கு வரும் உற்றார், உறவினர்கள் மறுநாள் மோகனாவின் கல்யாணத்தையும் கண்டு களிப்பார்கள் என்பதால் இரண்டு விசேஷங்களுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கத் தொடங்கின.
ஊரையே வளைத்துப் பந்தல் போடப்பட்டது. தஞ்சாவூரின் தலைசிறந்த சமையல்காரர்கள் விருந்து படைக்கக் காத்திருந்தனர். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள், நாட்டிய மணிகள் என்று விருந்தினரை மகிழ்விக்க இருந்தனர்.
அத்திப்பட்டி கிராமத்திலிருந்த ஐநூறு குடும்பங்கள் மொத்தமும் இரு விசேஷங்களுக்கும் அழைக்கப்பட்டிருந்தனர். தன்னிடம் வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் புதுத்துணிகள், ரொக்கம் என்று கண்ணப்பர் கொடுத்து மகிழ்ந்தார். கும்பகோணத்திலிருக்கும் சம்பந்தியின் சொந்தங்கள் என்று எல்லோரையும் சேர்த்து மூவாயிரம் பேர் வருவார்கள் என்று கணிக்கப்பட்டது.
குமரனும், மகாலஷ்மியும் ஓடி ஓடி வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
கண்ணப்பருக்கு இரண்டு விசேஷங்களும் மிக விமர்சையாக, நல்லபடி நடந்து முடிய வேண்டுமே என்று உள்ளூரக் கவலை இருந்தது.
அறுபதாம் கல்யாணத்திற்கு இரண்டு நாள்களே இருந்தது. அன்று குலதெய்வம் தஞ்சாவூர் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கான எல்லா ஏற்பாடுகளையும் குமரன் செய்திருந்தான். அதிகாலை எழுந்து குளித்து முடித்து, காலை ஆகாரத்தை சம்பந்தி வீட்டாரோடு சாப்பிட்டுவிட்டு, கார்களில் கோயிலுக்குப் புறப்பட வேண்டிய நேரம் வந்தது.
""சண்முகா'', தன் மனைவியை கண்ணப்பன் இப்படித்தான் அழைப்பார்.
""என்னங்க''.
""எனக்குக் கொஞ்சம் தலை சுத்தறாப் போல இருக்கு. காலையிலிருந்தே மார்பிலே அழுத்தறாப்போல என்னவோ செய்யுது. குடிக்கக் கொஞ்சம் தண்ணீ கொண்டுவா''.
அவ்வளவுதான், சண்முகசுந்தரி பதறி ஊரையே கூட்டி விட்டாள்.
குமரன் பதறிக் கொண்டு ஓடி வந்தான். ""அப்பா, வாங்க உடனே டாக்டரிடம் போகலாம்'' என்றான்.
""குமரா, முதலில் கோயிலுக்குப் போவோம். பிறகு தஞ்சாவூரில் நம்ப குடும்ப டாக்டரிடம் போய்க் காண்பிக்கலாம்'' என்றார்.
அதற்குள் அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாகப் போகும் மகேந்திரன், விரைந்து வந்தான். அவனுடைய அப்பா ஒரு ரத்தக்கொதிப்பு நோயாளி என்பதால், ஸ்டெதஸ்கோப்பையும், பி.பி. அப்பாரட்டûஸயும் எப்பொழுதும் போகும் இடங்களுக்குக் கொண்டு செல்வானாம். அதை வைத்துக் கண்ணப்பரைப் பரிசோதித்துவிட்டு, பயப்படும்படி ஒன்றும் இல்லை, வாயுத் தொல்லைதான் என்று மருந்து எழுதிக் கொடுக்க, அதைத் தருவித்துச் சாப்பிட்ட அரைமணி நேரத்தில் கண்ணப்பர் சுறுசுறுப்பாகி விட்டார்.
மகேந்திரனின் கைராசியை அனைவரும் புகழ்ந்தனர். கோயிலில் நல்லபடியாகப் பூஜைகள் முடிந்தன. மறுநாள் தொலைதூரத்திலிருந்து வரும் உறவினர்கள் வரத் தொடங்கினர். அமெரிக்காவிலிருந்து சண்முகசுந்தரியின் அண்ணன் தன் குடும்பத்தோடு வந்துவிட்டார்.
நெடுநாட்களுக்குப் பிறகு வந்த மச்சானோடு கண்ணப்பர் நள்ளிரவு தாண்டியும் பேசிக் கொண்டிருந்தார்.
மறுநாள் பொழுது விடிந்தது. ஹோம குண்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கலசநீரில், கண்ணப்பர் தம்பதிகள் புனித நீராடினர். தங்களுடைய சுற்றத்தாரும், நண்பர்களும் தங்கள் தலையில் ஊற்றிய நீரோடு அவர்களுடைய ஆனந்தக் கண்ணீரும் கலந்தது. நல்ல முகூர்த்த நேரத்தில் கண்ணப்பர் தன் மனைவியின் கழுத்தில் மங்கல நாணைக் கட்டினார். ஒரு பந்திக்கு இருநூறு பேர் என்று சாப்பிட்ட விருந்தாளிகளின் எண்ணிக்கை மூவாயிரத்தையும் தாண்டி இருந்தது.
அன்று இரவு குமரனும், மகேந்திரனும் தங்கள் நண்பர்களுடன் தஞ்சாவூரில் ஒரு பெரிய ஹோட்டலில், இளைஞர்களுக்கே உரிய முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர். மறுநாள் மகேந்திரன், மோகனா திருமணமும் விமர்சையாக நடந்து முடிந்தது.
இரவு வரவேற்பில் தஞ்சாவூர் ஜில்லாவின் அதிமுக்கிய பிரபலங்கள் எல்லாம் வந்து குவிந்தனர். பொய்க்கால் குதிரை ஆட்டம் தொடங்கி கிராமிய நடனங்கள் அரங்கேறின. பிறகு மலையாள செண்டை மேளம், கர்நாடக இசை, பரதநாட்டியம் என்று இதுபோன்ற விசேஷத்தை அத்திப்பட்டி கிராமம் கண்டதே இல்லை என்று மக்கள் பேசிக்கொண்டே வீடு திரும்பினர்.
மறுநாள் பொழுது வழக்கம்போல விடிந்தது. அன்று பகல் விருந்துண்ட பின், சம்பந்தி வீட்டார் மணமக்களுடன் கும்பகோணத்திற்குக் கிளம்பிச் செல்ல இருந்தனர். கண்ணப்பரின் மச்சான் மட்டும் மேலும் நான்கு நாட்கள் அத்திப்பட்டி கிராமத்தில் தங்கிவிட்டுப் பிறகு அமெரிக்காவுக்குச் கிளம்பிச் செல்லத் திட்டமிட்டு இருந்தார்.
தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த சமையல்காரர், பகல் விருந்துக்குப் பிறகுதான் கிளம்பிச் செல்ல இருந்தார். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, மோகனாவுக்குச் சீராகக் கொடுக்க இருந்த பட்சண வகைகளை செய்து குவித்துக் கொண்டிருந்தார். சரியாக ஆறு மணிக்கு சுடச்சுட பில்டர் காபியைத் தயாரித்தார். அடுத்து பொங்கல், மெதுவடை, பாதாம் அல்வா, பூரிக் கிழங்கு, தோசை என்று காலை ஆகாரத்தின் பட்டியல் நீண்டு இருந்ததால் அதைத் தயாரிப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார்.
வீட்டுப் பெண்கள், கைகளில் காப்பி டபராக்களோடு தங்கள் அறைகளை நோக்கிச் சென்றனர்.
""ஐயோ'', என்கின்ற பெரும் குரல் அந்த வீட்டையே அதிர வைத்தது. அவ்வளவுதான் குடும்பம் முழுவதும் அந்த அறையை நோக்கி ஓடியது.
அங்கே கண்ணப்பரின் ஒரே செல்வ மகன் குமரன் நீங்காத் துயிலில் ஆழ்ந்திருந்தான். ஏன், எதனால், என்ன நடந்தது? என்று யாருக்குமே புரியவில்லை. முப்பத்து ஐந்து வயதே ஆன இளங்காளை, இந்த உலக வாழ்க்கைப் போதும் என்று கிளம்பி விண்ணுலகம் போயே போய்விட்டான்.
மருத்துவ உலகம் "மேசிவ் ஹார்ட் அட்டாக்' என்றது. ஊரும் உலகமும், ""எந்தப் கண் பட்டதோ தெரியலை, ஆனாலும் இவ்வளவு தடபுடலா கல்யாணத்தை அதுவும் இரண்டையும் நடத்தியிருக்கக் கூடாது'' என்றது.
""ஐயோ, குமரா எனக்குக் கொள்ளிப்போட ஒரு மகன் இருக்கிறான் என்று இருந்தேனே, உனக்குக் கொள்ளிப்போட வெச்சுட்டியே'' என்று கண்ணப்பர் கதறிக் கொண்டிருக்கிறார்.
கல்யாண வீடு, பிண வீடானது. இன்று இருப்பார், நாளை இல்லை என்பதே என் பெருமை என்று உலகம் மார்தட்டிக் கொண்டது.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு.
( குறள் எண்: 336)
பொருள்: இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்துவிட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகக் கொண்டது.
(தொடரும்)