சிறுதானிய விவசாயத்தை மீட்டெடுத்தவர்!
பொது முடக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்தாலும், ஒரு சிலர் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தவறவில்லை.
பொது முடக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையையும், பொருளாதாரத்தையும் பாதித்தாலும், ஒரு சிலர் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தவறவில்லை. தங்கள் அனுபவத்தாலும், புதிய எண்ணங்களாலும் தொழில் முனைவோராக உருவாகியுள்ளனர். அந்த வகையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் முல்லூர் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விசாலா ரெட்டி உய்யலாவுக்கு சிறுதானிய விவசாயத்தை மீண்டும் துவங்க, விவசாயிகளிடையே ஊக்கத்தை ஏற்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.
இதுவே அவரை "ஐடென்சிடி' என்ற நிறுவனத்தை நிறுவி, இயக்குநர் பொறுப்பையும் ஏற்று தொழில் முனைவோராக மாற்றியது.
""வடநாட்டில் பால் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து நாட்டிலேயே மிகப்பெரிய கூட்டுறவு பால் பண்ணையை அமைத்து பால்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் அமுல் நிறுவனத்தைப் போல், விவசாயிகளை ஒருங்கிணைத்து மீண்டும் சிறுதானிய விவசாயத்தை துவங்குவதோடு, சிறுதானிய வங்கி ( மில்லட் பேங்க்) களையும் துவங்கும் திட்டமொன்றை வகுத்தார் விசாலா. பிரதமர் மோடி செப்டம்பர் மாதத்தை சத்துணவு மாதமாக அறிவிப்பதற்கு முன்பே, ஆகஸ்ட் 31 -ஆம் தேதியன்றே "ஐடென்சிடி" என்ற நிறுவனத்தைத் துவங்கி இயக்குநர் பொறுப்பேற்றார். இந்த நிறுவனத்தின் மூலம் விவசாயிகள் அறுவடை செய்யும் சிறுதானியங்களை நேரிடையாக கொள்முதல் செய்து, விவசாயிகள் நஷ்டமடையாத வகையில் விலையை நிர்ணயித்து சந்தையில் விற்பதுதான் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பருவத்திலும் என்னென்ன பயிர்களை விளைவித்தால் லாபம் காணலாம்? அறுவடை செய்யும் தானியங்களை இயற்கை பேரழிவுகளிலிருந்து எப்படி பாதுகாப்பது போன்றவைகளில் கவனம் செலுத்துவதோடு, பயிரிட தயக்கம் காட்டும் சிறுதானியங்களை மீண்டும் பயிரிட விவசாயிகளை அணுகி அவர்களை ஒருங்கிணைப்பது என விசாலா தீர்மானித்தார்.
மேலும் சிறுதானியங்களை பாதுகாக்க பயிரிடப்படும் கிராமங்களிலேயே சிறுதானிய வங்கிகளை நிறுவ முடிவு செய்தார். கூடவே விவசாயிகளுக்கு ஆலோசனை மற்றும் உதவி அளிக்க "கல்சுரல் அண்ட் கிரியேடிவ் இன்டஸ்ட்ரீஸ்' என்ற அமைப்பின் உதவியையும் பெற்றுள்ளார்.
சிறுதானிய வங்கி அமைப்பதற்காக முதற்கட்டமாக தன் கையிலிருந்து 2 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக அளித்து சிறுதானிய வங்கியைத் துவக்கி வைத்த விசாலா, சிறுதானிய விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள மில்லட் மிஷன், ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கும் உதவித் தொகையை பெற்று தரவும் ஏற்பாடு செய்துள்ளார்.
இத்திட்டம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.
முதன் முதலாக விசாலா, சிறுதானிய விவசாய திட்டத்தை அறிவித்த போது இதில் ஆர்வத்துடன் சேர்ந்து ஒத்துழைப்பு தர அவர்கள் கிராமங்களில் பிரபலமான 40 விவசாயிகள் முன் வந்தனர். இதற்காக பல கிராமங்களில் 150 முதல் 200 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டன. முதற்கட்டமாக விசாலா உறவினரின் 25 ஏக்கர் நிலத்தில் சிறுதானிய விவசாயத்தைத் துவங்க ஏழு விவசாயிகள் முன்வந்தனர். நிலத்தை உழுவதற்கு அவர்களிடம் டிராக்டர்கள் இருந்தாலும், பாரம்பரிய முறைப்படி நிலத்தை உழுவதற்கு ஏர்கலப்பை இலவசமாக அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாலா, மாவட்ட ஆட்சியாளர்களை அணுகி தன் திட்டத்தை விளக்கமாக கூறி சிறுதானிய வங்கி அமைப்பதற்கும், இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அனுமதியும் பெற்றார்.
பல கிராமங்களுக்கு நேரில் சென்று விசாலா தன்னுடைய திட்டத்தை விவசாயிகளிடம் கூறியபோது, மேலும் பல விவசாயிககள் சிறுதானிய விவசாயத்தில் ஈடுபட ஆர்வம் காட்டினர். ஏறக்குறைய 60 கிராமங்கள் இத்திட்டத்தில் இணைந்தன. 15 ஆண்டுகளுக்கு முன் விவசாயத்தை புறக்கணித்து பட்டுப்பூச்சி வளர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட நிலத்தில் மீண்டும் விவசாயிகள் சிறுதானிய விவசாயம் செய்ய முன்வந்தது ஒரு சுவையான அனுபவம்'' என்று கூறும் விசாலா, தற்போது 250 பேர் அமரும் அரங்கமொன்றை அமைத்து 65 அங்குல டிவி ஒன்றின் மூலம் சிறுதானிய விவசாயத்தைப் பற்றி ஆன்லைன் மூலம் விளக்கமளிக்கிறார்.
ஒவ்வொருவருடைய கருத்தையும் கேட்கிறார். அறுவடை செய்யும் தானியங்களை கெட்டுப் போகாமல் பானைகளில் எப்படி பாதுகாப்பது என்பது பற்றி விளக்கமளிக்கவும், விவசாயம் செய்ய முன் வருமாறு அழைக்கவும், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் அனுபவம் வாய்ந்த விவசாயிகளையும் வழிகாட்டியாக அமர்த்தியுள்ளார்.
எந்தெந்த பருவத்தில் எந்தெந்த தானியங்களை பயிரிட வேண்டும் அறுவடை செய்ய வேண்டும் என்பது பற்றி நான் கூறுவதை ஒவ்வொரு விவசாயியும் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுக்கவும் அனுமதியளித்துள்ளார். இயற்கை பேரிடரால் பயிர்கள் அழிய நேரிட்டால் பொருளாதார அடிப்படையில் ஏற்படும் நஷ்டத்தை அடுத்த பருவத்தில் ஈடு செய்ய எந்த தானியத்தை பயிரிட்டால் லாபமடையலாம் போன்ற ஆலோசனைகளையும் கூறுகிறார்.
இவரது திட்டத்திற்கு உதவி செய்ய படித்த இளைஞர்களும், பெண்களும் முன்வந்துள்ளனர். மாநில அரசு மற்றும் இவர்களது ஒத்துழைப்பு எனக்கு உற்சாகமளிக்கிறது'' என்கிறார் விசாலா ரெட்டி உய்யலா.