சட்னி நீண்ட நேரம் கெடாமல் இருக்க..
பச்சை மிளகாய் சேர்த்து சட்னி முதலியவற்றை அரைக்கும்போது, முதலில் மிளகாயைத் துண்டுகளாக்கி வெந்நீரில் போடவும்.
பச்சை மிளகாய் சேர்த்து சட்னி முதலியவற்றை அரைக்கும்போது, முதலில் மிளகாயைத் துண்டுகளாக்கி வெந்நீரில் போடவும். சற்று ஆறியதும் எடுத்து அரைத்தால், மிளகாய் நன்கு மசிவதுடன், சட்னி வெகு நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
கூட்டு, குருமா, சாம்பார், மோர்க்குழம்பு போன்றவை நீர்க்க இல்லாமல் கெட்டியாக இருப்பதற்காக கடைசியில் அரிசி மாவைக் கரைத்து விடுவோம். அதற்கு பதில், இந்தப் பதார்த்தங்களுக்காக தேங்காய், மிளகாய், தனியா போன்றவற்றை மிக்ஸியில் அரைக்கும்போதே அரை ஸ்பூன் அரிசி மாவையும் சேர்த்து அரைத்துவிட்டால், மாவுக் கரைசலும் நன்றாகக் கொதித்து, கூட்டு முதலியவை கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.
சட்னி வகைகள் (குறிப்பாக தேங்காய்ச் சட்னி) மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான ரய்த்தா தயார்.
Advertisement
ரவை, சேமியா உபயோகித்து கிச்சடி தயாரிக்கும்போது, தக்காளிப் பழத்தை முதலிலேயே சேர்த்தால், தக்காளித் துண்டுகள் மிகவும் குழைந்துவிடுவதுடன் கிச்சடியின் நிறமும் மாறிவிடும். தக்காளி போடாமல் கிச்சடி தயாரித்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடுங்கள். தக்காளித் துண்டுகளை கிச்சடியின் மேல்தூவி, ஒரு ஃபோர்க்கால் ஒரு முறை கிளறிவிட்டு கொஞ்ச நேரம் மூடி வைத்துவிடுங்கள், கிச்சடியின் சூட்டில் தக்காளி பதமாக வெந்துவிடுவதோடு, கிச்சடியின் நிறமும் மாறாமல் இருக்கும்.
புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருள்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்கவும். இவை, காற்றுபட்டால் நீர் விடும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படக்கூடும். கண்ணாடி அல்லது பீங்கான் டப்பாக்களில் பாதுகாத்து வையுங்கள்.
பிரெட் துண்டுகளின் மேல் வெண்ணெய் தடவுவதற்கு முன்னால், வெண்ணெய்யில் சிறிது பால் விட்டு நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெண்ணெய்யை சீராகத் தடவ சுலபமாக இருக்கும் வெண்ணெயும் குறைவாகவே தேவைப்படும்.