கதை சொல்லும் குறள் - 71: கண்ணாடியும் முகமும்!
சசிகுமார் கண்ணாடி முன் நின்று தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டான்.""சாதாரண டி ஷர்ட்டிலேயும் ஜீன்ஸ் பேண்டிலேயுமே அசத்துவான்.
சசிகுமார் கண்ணாடி முன் நின்று தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டான். ""சாதாரண டி ஷர்ட்டிலேயும் ஜீன்ஸ் பேண்டிலேயுமே அசத்துவான். இன்னைக்குக் கோட் சூட்டிலே இருக்கான், கேக்க வேண்டுமா என்ன'' என்று நண்பன் வினய் கூற, அந்த அறையில் சிரிப்பலை எழுந்து அடங்கியது.
சசிகுமாரின் உள்ளம் ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்தது. இன்று அவன் பெண் பார்க்கப் போகிறான். கடந்த ஆறு மாத காலமாக அவனுடைய அம்மா சாருமதி பெண்களின் புகைப்படங்களைக் காட்டி, அவனுடைய சம்மதத்தைக் கேட்டிருக்கிறாள்.
சசிகுமார் சிறிது கூட அசைந்து கொடுக்கவில்லை. ""பிடிக்கலை'' என்பதுதான் அவனுடைய வாயில் இருந்து உதிரும் வார்த்தையாக இருந்தது.
""டேய், உனக்குன்னு இனிமேதான் அந்தப் பிரம்மா ஒரு பெண்ணைப் படைச்சு அனுப்பனும், ஆனா அவ வளர்ந்து வருவதற்குள் நீ கிழவன் ஆயிடுவே'' என்பாள் சாருமதி.
""அதெல்லாம் ஒன்றும் இல்லை, எனக்குப் பிடிச்சவள் எப்பொழுதோ பிறந்துட்டா, அவ கூடிய சீக்கிரம் என்னைத் தேடி வருவா'' என்பான் சசிகுமார்.
போன வாரம் அம்மா ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் கொண்டு வந்து காட்டினாள்.
""வாவ்'' என்று வாய்விட்டு சசிகுமார் கூவியே விட்டான்.
புகைப்படத்தில் இருந்த பெண் ஊர்வசி, ரம்பா ரேஞ்சுக்கு இருந்தாள்.
""அம்மா எனக்குப் பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது, ஆனால் அவளை நேரில் பார்க்க வேண்டும், பேசவேண்டும் பிறகுதான் சம்மதம் சொல்லுவேன்''.
""உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? நேற்றுதான் புரோக்கர் கபிலன் இந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் கொண்டு வந்து கொடுத்தார். பார்த்த உடனேயே எனக்கும், அப்பாவுக்கும் மிகவும் பிடித்துவிட்டது. காலையில் ஜோசியரிடம் சென்று இரண்டு பேருடைய ஜாதகத்தைக் கொடுத்தேன், ஒன்பது பொருத்தம் இருக்கிறது என்று சொல்லிவிட்டார்''.
""எனக்கு ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை அம்மா''.
""ஆனால் எனக்கும், அப்பாவுக்கும் நம்பிக்கை இருக்கே. எங்களுடைய ஒரே மகன் நீ. கடல் போன்ற சொத்துக்கு ஒரே வாரிசு. சாருமதி ஐடி கம்பெனியின் எம்டின்னா சும்மாவா. நீ தீர்க்காயுசுடன் குழந்தை, குட்டியோடு நீண்ட காலம் வாழவேண்டாமா?''
""பொண்ணு பெரிய ஜமீன்தார் பரம்பரையில் வந்தவ. உன்னைப் போலவே அவங்க பெற்றோருக்கு ஒரே பெண். அழகு, அந்தஸ்து, செல்வம் இது எல்லாம் ஒருசேர அவ உனக்குப் பெண்டாட்டியா வந்தா, எவ்வளவு நன்றாக இருக்கும். எல்லாம் நம்ம குலதெய்வம் மகமாயி அருளாலே நல்லபடியா முடியணும்''.
""அம்மா நான் பாவனாவைப் பார்க்கணும் என்று...''
""அதைத்தான் சொல்ல வந்தேன், வேறு எதை எதையோ பேசிக் கொண்டு நிக்கறேன். வரும் வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு நாம அவங்க வீட்டுக்குப் பெண் பார்க்கப் போகிறோம், சந்தோசம்தானே''.
சசிகுமார் சந்தோசத்துடன் தலை அசைத்தான்.
""வாங்க, வாங்க'' என்று பெண் வீட்டார் ஏக மரியாதையுடன் வரவேற்றனர். பரஸ்பர அறிமுகத்துக்குப் பின்னர், பெண் பார்க்கும் படலம் தொடங்கியது.
பட்டுப் புடவை சரசரக்க பாவனா வந்தாள்.
அட, புகைப்படத்தில் பார்த்ததைவிட மேலும் அழகாகத் தெரிந்தாள்.
""டேய் உன் மனசு போலவே பெண் அமைஞ்சுட்டாடா'' என்று வினய், சசிகுமாரின் காதருகே கிசுகிசுத்தான்.
சசிகுமாரின் உள்ளம் சிறகடித்துப் பறந்தது. அவன் காதுகளில் இனிய கீதம் பாய்ந்தது.
எல்லோருக்கும் வணக்கம் கூறிவிட்டு, சிறிது நேரம் உட்கார்ந்து இருந்துவிட்டு, பாவனா உள்ளே சென்று விட்டாள்.
இனிப்பு, காரம், காபி பரிமாறப்பட்டது.
சாருமதிதான் பேச்சை ஆரம்பித்தாள். ""சசிகுமாருக்குப் பாவனாவுடன் கொஞ்ச நேரம் தனியாகப் பேசணுமாம்''.
பாவனாவின் தந்தையின் முகம் சடக்கென்று மாறியது. எங்கள் வழக்கத்தில் என்று ஏதோ சொல்ல வந்தவரை பாவனாவின் தாத்தா தடுத்தார்.
இந்தக் காலத்துப் பசங்களுக்கு இது வழக்கமாயிடுச்சு, நம்ப காலம் வேறே.
""தம்பி தாராளமாகப் போய் பேசுங்க'' என்றார்.
பாவனாவுடன், தனியாகப் பேசப்போகிறோம் என்பதே சசிகுமாருக்குச் சொர்க்கத்தில் நுழைவது போல பேரின்பத்தைக் கொடுத்தது.
""டேய் சசிகுமார், நாங்கள் எல்லாம் இங்கே உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிடாதே'' என்று கோபி சத்தமாகச் சொல்ல அங்கே எல்லோரும் சிரித்தனர்.
தனிமையில் இருவரும் விடப்பட்டனர்.
""பாவனா'' என்று சசிகுமார் அன்பொழுக அழைத்தான்.
தலையை நிமிர்த்தி அவனை நேருக்கு நேர் பார்த்த பாவனாவைக் கண்டு சசிகுமார் உள்ளம் திடுக்கிட்டான்.
வட்டமான நிலா போன்ற முகம் ஒளியை இழந்து இருந்தது. இரவு எல்லாம் தூங்காததைப் போலக் கண்கள் சிவந்திருந்தன. இமைகளில் காணப்பட்ட வீக்கம் அவள் அழுதிருப்பாளோ என்ற சந்தேகத்தைச் சசிகுமாரின் மனத்தில் எழுப்பியது.
எதையோ சொல்ல அவள் இதழ்கள் துடித்தன, பிறகு கோணின.
பக்கத்தில் நிழலாடுவது தெரிந்தது. அவர்களை யாரோ கண்காணிக்கிறார்கள் என்பது இருவருக்குமே புரிந்தது.
சசிகுமார்தான் பேசினான். அவனுடைய கேள்விகளுக்கு உம், இல்லை என்பதே பாவனாவின் பதிலாக இருந்தது.
பத்து நிடப் பேச்சில் சசிகுமாருக்கு நன்று விளங்கிப் போனது. அவளுடைய முகமொழி அவளுடைய உள்ளத்தைக் கண்ணாடியாய் பிரதிபலித்தது. பாவனாவிற்கு இந்தக் கல்யாணத்தில் எள்ளளவும் இஷ்டம் இல்லை. அவளுடைய மனதைப் பாறையாக ஏதோ ஒரு துன்பம் அழுத்தி அவளைப் பாடாய்ப்படுத்துகிறது.
""ஏண்டா, இப்படிச் சொல்லறே? உனக்குப் புத்தி பேதலித்து விட்டதா'' என்று சாருமதி பெருங்குரல் எடுத்துக் கத்தினாள்.
""உஸ் சத்தம் போடாதேம்மா எனக்குப் பெண்ணைப் பிடிக்கவில்லை. இதை அவர்களுக்குச் சொல்லிவிடு'' என்று கூறிவிட்டு சசிகுமார் தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டான்.
""ஏங்க இப்படி இடிச்சு வெச்ச புளியாட்டம் உட்கார்ந்து இருக்கிறீர்கள்? என்ன ஏதுன்னு அவனை விசாரிக்க மாட்டீங்களா?''
""சாருமதி, என்னை என்ன பண்ணச் சொல்லறே? இந்த காலப் பசங்களைப் புரிஞ்சுக்கவே முடியாது. அந்தக் காலத்தில் என் பெற்றோர் சொன்னாங்க என்று உன்னைப் பார்க்காமலேயே சம்மதம் சொன்னேன். இப்ப பிள்ளைகள் சொல்லறாப்போல பெற்றோர் ஆட வேண்டி இருக்கு''.
இரண்டு நாளாகியும், நண்பர்களும், பெற்றோரும் எவ்வளவு கேட்டும் சசிகுமார் காரணம் எதையும் சொல்லவில்லை. அந்தப் பெண் வேண்டாம் என்பதே பதிலாக
இருந்தது.
""சரி சாருமதி, நாளைக்குப் பெண் வீட்டாரிடம் பேசி விடுகிறேன்'' என்று ரங்கசாமி சோகமாகச் சொன்னார்.
இரவு எட்டு மணி இருக்கும், புரோக்கர் கபிலன் வேக வேகமாக வந்தார்.
""வாங்க'' என்றாள் சாருமதி.
""அம்மா செய்தி கேட்டீங்களா அந்தப் பெண் பாவனா, வீட்டை விட்டு ஓடிப் போயிடுச்சாம். காலேஜிலே அவளோடு படிச்ச பையனைக் காதலிச்சுதாம். அவன் வேற ஜாதின்னு வீட்டுலே ஒத்துக்கலையாம். வீட்டுலே கல்யாணப் பேச்சை எடுத்ததிலே இருந்து ஒரே அழுகை, ஆர்ப்பாட்டம் தானாம். இந்த இடம் குதிர்ந்துவிடும் என்று வீட்டிலே பேசிக்கிட்டாங்களாம். அதான் லெட்டர் எழுதி வெச்சிட்டு ஓடிடுச்சாம்''.
சாருமதி, கல்லாகச் சமைந்தாள்.
""அம்மா'', சசிகுமார் மென்மையாக அழைத்தான்.
""சசி'' என்று சாருமதி விம்மினாள்.
""அன்று பாவனாவைத் தனிமையில் சந்தித்தபொழுது அவளின் முகத்தைப் பார்த்தே, அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். ஒரு பெண்ணின் மீது பழி சொல்லக் கூடாது என்று அவளைப் பிடிக்கவில்லை'' என்று கூறினேன் என்ற மகனைச் சாருமதி பெருமையுடன் அணைத்துக் கொண்டாள்.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
( குறள் எண்: 706)
பொருள் : கண்ணாடி தன் முன் உள்ளதைக் காட்டுவது போல, ஒருவரது மனதில் உள்ளதை அவரது முகம் காட்டிவிடும்.
.(தொடரும்)