முகப்பு
மகளிர்மணி

ஆப்பிள் எனும் அருமருந்து...

'ட்ரைடர்பெனாய்டுகள்', 'ஃபிளாவனாய்டுகள்', 'பாலிபினால்கள்' போன்ற மருத்துவத் தன்மைகள் கொண்ட சேர்மங்கள் ஆப்பிளில் இருப்பதால், புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது

Updated On : 14 ஜூன், 2025 at 6:29 PM
ஆப்பிள்
பகிர்:

'ட்ரைடர்பெனாய்டுகள்', 'ஃபிளாவனாய்டுகள்', 'பாலிபினால்கள்' போன்ற மருத்துவத் தன்மைகள் கொண்ட சேர்மங்கள் ஆப்பிளில் இருப்பதால், புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது என்பது கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் நடத்திய ஆய்வில் உறுதியாகியிருக்கிறது.

இதுகுறித்து கார்னெல் உணவு அறிவியல் இணை பேராசிரியரும் ஆய்வின் மூத்த ஆசிரியருமான ரூய் ஹை லி கூறியிருப்பது:

இந்த மூன்று சேர்மங்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும். ட்ரைடர்பெனாய்டுகள், ஆப்பிள் தோலில் காணப்படும் பல சேர்மங்கள், புற்றுநோய் செல்கள் பரவுவதைத் தடுக்கின்றன; கொல்கின்றன. குறிப்பாக புகைப்பிடிப்பவர்கள், அதிகமாக மது அருந்துபவர்கள் ஆப்பிள் போன்ற 'ஃபிளாவனாய்டு' நிறைந்த உணவுகளை உட்கொள்வது புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். கல்லீரல், பெருங்குடல், மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிராக ஆப்பிளில் இருக்கும் சேர்மங்கள் செயல்புரிகின்றன .

ஆப்பிள்கள், பிற உணவுகளில் காணப்படும் 'பைட்டோ கெமிக்கல்கள்' எனப்படும் பல சேர்மங்கள், முக்கியமாக ஃபிளாவனாய்டுகள், பீனாலிக் அமிலங்கள், மார்பகப் புற்றுநோய் செல்களில் கட்டி வளர்ச்சியைத் தடுப்பது உட்பட, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன'' என்கிறார்.

எடித் கோவன் ஆய்வு: எடித் கோவன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 2019-இல் நடத்திய ஆய்வில், ஆப்பிள், தேநீர் போன்ற ஃபிளாவனாய்டு நிறைந்த பொருள்களை உட்கொள்வது புற்றுநோய், இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது, குறிப்பாக புகைப்பிடிப்பவர்களும் மது அருந்துபவர்களும் ஒவ்வொரு நாளும் 500 மில்லி கிராம் ஃபிளாவனாய்டுகளை உட்கொண்டால், புற்றுநோய், இதய நோய் தொடர்பான மரண ஆபத்து வெகுவாகக் குறையும் என்பதை ஆய்வில் உறுதி செய்துள்ளனர்.

'பல்வேறு தாவர அடிப்படையிலான உணவுகளில், பழங்களில், பழரசங்களில், காணப்படும் பல்வேறு வகையான ஃபிளாவனாய்டு சேர்மங்களை உட்கொள்வது முக்கியம். இதை உணவின் மூலம் எளிதில் அடைய முடியும்: ஒரு கப் தேநீர், ஒரு ஆப்பிள், ஒரு ஆரஞ்சு, 100 கிராம் ப்ளூபெர்ரி, 100 கிராம் ப்ரோக்கோலி, ஃபிளாவனாய்டு சேர்மங்களையும் 500 மி.கி.க்கும் அதிகமான மொத்த ஃபிளாவனாய்டுகளையும் வழங்கும்' என்று முன்னணி ஆராய்ச்சியாளர் நிக்கோலா பாண்டோனோ கூறுகிறார்.

மற்றொரு ஆய்வு: இன்னொரு ஆய்வில், ஆப்பிளின் பீனாலிக் சேர்மங்களான புளோரெட்டின், குர்செடின், அதன் கிளைகோசைடுகள், குளோரோஜெனிக் அமிலம், கேட்டசின், எபிகாடெசின் ஆகியவற்றிலிருந்து புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி வருகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக ஆப்பிளின் தோலில் இருக்கும் ட்ரைடர்பெனாய்டுகள் குறிப்பிடத்தக்க வேதியியல் தடுப்பு மற்றும் வேதியியல் பாதுகாப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. ஆப்பிளின் பைட்டோ கெமிக்கல்கள், பல நன்மை பயக்கும் உடல் ஆரோக்கிய விளைவுகளை வழங்கி, புற்றுநோயைத் தடுக்கும் கருவியாகச் செயல்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.