FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

முல்லைக்கொடி பூத்த விழா

எட்டு அல்லது ஒன்பது வயதே நிரம்பிய சின்னஞ்சிறு பெண்; பெதும்பை என்கிறது இலக்கணம்!

Updated On : 8 பிப்ரவரி 2026, 5:59 pm IST
கோப்புப் படம்
பகிர்:

எட்டு அல்லது ஒன்பது வயதே நிரம்பிய சின்னஞ்சிறு பெண்; பெதும்பை என்கிறது இலக்கணம்! தாயும் தோழியரும் பார்த்து வியந்து மகிழ ஒரு புதுமையான விழாவைக் கொண்டாடுகிறாள். சில நாட்கள் முன்பு அவள் தனது வீட்டின் வெண்சுண்ணாம்பு தீட்டப்பட்ட மாடத்தில் நிலாவொளி வீசுகிற முற்றத்தில் தன் தோழிகளுடன் ஒரு சிறு முல்லைக்கொடியைக் கொண்டு வந்து நட்டிருந்தாள்.

அதற்கு புத்தம்புதுக் குடத்தில் எடுத்துவந்த நீரை ஊற்றி கண்காணித்து வந்தாள். கொடியும் நன்றாக வளர்ந்து பூக்கும் பருவத்தை அடைகிறது. அதில் உண்டாகும் அரும்புகள் இவளுடைய சின்னஞ்சிறு பற்களைப்போல் இருக்கின்றன. அதைப் பார்த்து, உள்ளத்தில் மிகுந்த அன்புதோன்ற, மகிழ்ச்சி அடைகிறாள். இதைக்கண்டு மகிழும் தாயிடம் கூறி வாத்தியங்கள் முழங்க ஏற்பாடு செய்கிறாள். இதைத் தன் தோழிகளுடன் சேர்ந்து ஒரு திருவிழாவாகவே கொண்டாடுகிறாள் இச்சிறுமி.

'.............. .............. ........... ...... மின்னுஞ்

Advertisement

Advertisement

சுதைநிலா முற்றத்துத் தோழியரும் தானும்

புதியகுட நீர்வார்த்துப் போற்றிப் -

பதமறிந்து (218)

தன்னைவளர்க் குஞ்செவிலித்

தாய்போல் நிதம்பேணி

மன்னி வளர்க்க வளர்முல்லை -

அன்னதுதான் (219)

தன்சிறுபற் போலரும்பு தான்படைப்பக்

கண்டுசிறந்

தன்பு மலர அகமலர்ந்து - ........................... (220)

......................................................... தாயர் களிதூங்க

மேதகு பல்லியம்வாய் விட்டார்ப்பப் -

போதவிழும் (221)

கோதை புதுவிழாக் கொண்டாடித் தன்பருவ

மாதருடன் அங்கண் மகிழ்போதில் ................'

(222)

இந்த இனிய நிகழ்ச்சியை, முல்லைக்கொடி முதல்மலர் பூத்ததனை, பெதும்பைப் பருவச் சிறுமியர் ஒரு விழாவாகவே கொண்டாடுவதை நாம் திருப்பூவண நாதருலாவில் காண்கிறோம்.

திருப்பூவண நாதருலா எனும் சிற்றிலக்கியம் திருப்பூவணம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் அழகிய நாயகர் (திருப்பூவண நாதர்) எனப்படும் சிவபெருமான் திருவுலாப் போந்த

தாகக் கூறி, திருப்பூவணம் கந்தசாமிப் புலவரால் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது.

இறைவன் 'உலா' எனப்படும் வீதிவலம் வரும்போது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகிய எழுவகை மங்கையர் அவரைக் காண வருவார்கள். அந்த எழுபருவத்து மங்கையருக்கான செயல்களைக் கூறும் உலா இலக்கியத்தில் பெதும்பையானவள் செய்யும் இந்தச் செயலை விவரித்துள்ளது நயமாகவும் புதுமையாகவும் உள்ளது.

மற்ற உலா இலக்கியங்களில் இந்தச் செய்தி காணப்படவில்லை. பெதும்பைப் பருவ மகளிர் சிறுமிகளுடனும் சேராது, பருவ

மங்கையரினும் சேராது நடுப்பட்ட பருவத்தினர். இவர்களை வருணிப்பது மிகவும் கடினம். ஒளவையாரும்கூட இதனால், 'பேசும் உலாவில் பெதும்பை புலி' என்கிறார்.

திருப்பூவண நாதருலாவானது சொல்லணி, பொருளணி, உவமை நயம், இன்னும் பல சிறப்புகள் கொண்டு அமைந்துள்ளது.

'நவில்தொறும் நூல்நயம் போலும்' எனும்

குறளுக்கிணங்க அமைந்த அருமையான

சிற்றிலக்கியம் ஆகும்.

பொன்னனையாள் எனும் உருத்திர கணிகை விருப்புடன் திருப்பூவண நாதருக்குப் பொன்னால் விக்கிரகம் செய்துவைத்ததும் அதற்காக ஈசன் இரசவாதம் செய்த திருவிளையாடலும் நினைவுகூரத்தக்கன. இந்நூலாசிரி

யரான கந்தசாமிப் புலவரும் பொன்னனை

யாளின் மைந்தர் என எண்ண இடமுள்ளது.

அதிவீரராம பாண்டியர் இயற்றியுள்ள நைடதத்திலும் நாட்டுப் படலத்தில் மகளிர் கொண்டாடும் இந்த விழா குறித்த

செய்தியைக் காணலாம்.

அல்லி இதழ்களாலாகிய அழகிய மாலையை அணிந்த மகளிர் அன்புடன் வளர்த்த முல்லைக்கொடியானது மெல்லிய அரும்புகளைத் தந்தது என்றெண்ணி மகளிர் அதற்குத் திருவிழாக் காணுகின்றனர்; அந்த

இடத்தில் வாத்திய ஒலி முழங்குகிறது

என்கிறார் புலவர்.

'அல்லியங் கோதைமாத ரன்பொடு

வளர்த்த முல்லை

மெல்லரும் பீன்றதென் னாவிழா

வயர்முழ வினோடு........................'

என்பன பாடல் வரிகள்.

இதிலிருந்து நாம் நம் மூதாதையர்

வாழ்க்கையை மிகுந்த ரசனையோடு

போற்றிக் கொண்டாடினர் என அறிந்து

உள்ளம் பூரிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments