முகப்பு
தமிழ்மணி

அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது

பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும்.

Updated On : 7 ஜூன் 2026, 4:56 pm IST
கோப்புப் படம்
பகிர்:

பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.

பாமரர்க்குப் புரியும்படி அவர்களின் மொழியிலேயே எளிய சொற்களால் தீயவழியில் செல்லக் கூடாது என்று வலியுறுத்த வேண்டும். ஆகவே, பழமொழிகளைச் சொல்லிவைத்தனர் நம் முன்னோர். பழமொழி நானூற்றிலுள்ள ஒரு பாடலைக் காண்போம்.

ஒற்கம்தாம் உற்ற இடத்தும், உயர்ந்தவர்

Advertisement

Advertisement

நிற்பவே, நின்ற நிலையின்மேல் வற்பத்தால்

தன்மேல் நலியும் பசிபெரிது ஆயினும்

புல்மேயாது ஆகும் புலி (119)

இந்தப் பாட்டுக்கு சான்றோர்கள் தாங்கள் எவ்வளவுதான் வறுமை அடைந்தபோதும் தங்களது கொள்கையிலிருந்து வழுவாமல் வாழ்வர். அஃது எதையொத்தது எனில், தன்னை வறட்சியுறச் செய்கிற பசி எவ்வளவு பெரிதென்றாலும் 'ஒருபோதும் புலி புல்லைத் தின்னாது' என்பதை ஒத்ததாகும் என்று பொருள். 'ஊரை ஒற்கம் (வறுமை) தீர்க்கும்' என்பது இளம்பூரணர் உரை மேற்கோள். வற்பம் - வறட்சி, பஞ்சம்.

குமரகுருபரரும் இதை வழிமொழிந்து, தமது நீதிநெறி விளக்கத்தில் சான்றோர்கள் எச்சூழலிலும் பழி

வரும் செயல்களைச் செய்யமாட்டார்கள். எதைப்போல எனின் 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது; அதைப்போல' என்று எடுத்துக்காட்டியுள்ளார் (பா.61). புலி இளைத்தாலும் புல்லைத் தின்னாது, புலி பசித்தால் புல்லைத் தின்னுமா? (தமிழ்ப் பழமொழிகள், கி.வா.ஜகந்நாதன்) ஆகிய பழமொழிகள் வழக்கில் உண்டு. இவற்றுக்கு இலக்கிய வடிவம்கொடுத்துப் புல் மேயாது ஆகும் புலி என்கிறது பழமொழி நானூறு.

அரிமா (சிங்கம்) பசித்தாலும் புல்லைத் தின்னாது என்ற பழமொழியும் அரிதாக இருந்துள்ளது. இவை ஒருபுறமிருக்க, வனத்திலுள்ள பூனை இனங்கள் அனைத்தும் புற்களைச் சாப்பிடும். பூனை இனத்தைச் சார்ந்த விலங்குகள் புலால் உண்பதால் அதன் செரிமான மண்டலத்தில் சிக்கல் ஏற்படும்போது, ஒவ்வாத உணவை வாந்தி எடுத்து வெளியேற்றுவதற்காக இவ்வாறு செய்கின்றன என்கின்றனர் விலங்கியல் வல்லுநர்கள்.

இக்காரணத்துக்காக புலியும் பெர்ரி, புல் முதலியவற்றைச் சாப்பிடும். உணவுப் பாதையில் ஏற்படும் சிக்கலைத் தனக்குத்தானே சரிசெய்துகொள்ளும் மருத்துவ முறை இது. இவ்வாறு நாய்கள் புற்களைச் சாப்பிட்டுச் செரிக்காத, சிக்கலான உணவைக் கக்குவதை நாம் கண்டிருப்போம். கருத் தாங்கிய புலிகள் பேறுகாலத்தில் புற்களைச் சாப்பிடுவதாக வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இச்செயல் உடலியல் சார்ந்ததேயன்றி உலகியல் சார்ந்ததன்று. பழமொழி நானூற்றிலே...

உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும்

குடிப்பிறப் பாளர்தம் கொள்கையின் குன்றார்

இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா

கொடிப்புல் கறிக்குமோ மற்று. (141)

என்ற பாடல் கொள்கையில் வழுவாத சான்றோர்களைப் பற்றிப் பேசுகிறது. உடுத்த உடை நைந்துபோய், உடலின் வளம் அழிந்தபின்னும்கூட நற்குடியில் பிறந்தவர்கள் தாம்கொண்ட உயர்ந்த கொள்கையிலிருந்து ஒருபோதும் வழுவார். இதற்குச் சான்று, பசிப்பிணி வருத்த, கண்கள் ஒளிகுன்றி இடுங்கிப்போன நிலையிலும் அரிமா கொடிபோலப் படர்ந்த புல்லைக் கறிக்காது என்று கூறப்பட்டுள்ளது.

இடுங்குகண் என்பது இடுக்கண் என விகாரப்பட்டதென்றும் துன்பம் நேருங்காலத்தில் கண் இடுங்குதலால் துன்பத்திற்கு இடுக்கண் எனப் பெயரென்றும் உணர்க என்று வை.மு.சடகோபராமாநுஜாசாரியரும்

சே.கிருஷ்ணமாசாரியரும் நாலடியார்க்கு எழுதிய

உரையால் (1914:129) இதை அறியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.