மகளிர்மணி

சாதனைப் பெண்...

இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் முதல் பெண் தலைவர், அமெரிக்காவில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி கிருஷ்ணன் ஜானகி அம்மாள்.

சா. அனந்தகுமார்

இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் முதல் பெண் தலைவர், அமெரிக்காவில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி உள்ளிட்ட சிறப்புகளைக் கொண்டவர் 'இடவேலத் கக்கத் கிருஷ்ணன் ஜானகி அம்மாள்.'

கேரள மாநிலத்துக்கு உள்பட்ட தெல்லிச்சேரியில் 1897 நவம்பர் 4இல் பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்ஸி. தாவரவியல் படித்தார். 1931இல் அமெரிக்காவுக்குச் சென்று, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றார். படிக்கும்போதே 'சைட்டோஜெனெடிக்ஸ்' எனப்படும் மரபணு ஆய்வில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர், 'ஜானகி பிரிஞ்சால்' எனப்படும் புதிய வகைக் கத்தரிக்காயை உருவாக்கினார்.

1934 இல் கோவையிலுள்ள கரும்பு இனப் பெருக்க மையத்தில் பணிக்குச் சேர்ந்தார். இந்திய வகைக் கரும்பை 'பப்புவா நியூ கினியா' நாட்டு வகைக் கரும்புடன் கலப்பு செய்து, அதிக இனிப்புத் தன்மை கொண்ட புதிய ஹைபிரிட் கரும்பு வகையை உருவாக்கத் துணைபுரிந்தார்.

'கோகேன்' என்று பெயரிடப்பட்ட அந்தக் கரும்பு உற்பத்தி சில ஆண்டுகளில் இரட்டிப்பானதால், கரும்பு இறக்குமதியை இந்திய அரசு குறைக்கத் தொடங்கியது.

'குரோமோசோம் அட்லஸ் ஆஃப் கல்டிவேட்டட் ப்ளான்ட்ஸ்' என்ற நூலை எழுதினார். லண்டனுக்கு அருகிலுள்ள 'விசுலே பார்க்'கில் மரபியல் வல்லுநராகச் சேர்ந்தார். மக்னோலியா வகை மலர் ஒன்றை 'பாலிப்ளாய்டு' ஆய்வு மூலம் உருவாக்கினார்.

பின்னாளில் அதற்கு 'மக்னோலியா கோபஸ் ஜானகியம்மாள்' எனப் பெயரிடப்பட்டது. அந்த மலர்கள், இன்றும் 'விசுலே பார்க்கில்' அவர் நட்டு வைத்த மரங்களில் பூத்துக் குலுங்குகின்றன. ஒரு தாவரத்தின் பெயராக இந்தியப் பெண் ஒருவரது பெயர் அமைந்தது இதுவே முதன் முறை.

1950இல் விமானப் பயணம் ஒன்றில் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைச் சந்தித்தபோது, இந்தியத் தாவரவியல் ஆய்வு நிறுவனத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை ஜானகியம்மாள் விளக்கினார். 1951இல் இந்தியா திரும்பினார். 'பொட்டானிக்கல் சர்வே ஆஃப் இந்தியா'வின் நிர்வாகப் பொது இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

ஜம்முவில் உள்ள 25 ஆயிரம் மூலிகைகள் அடங்கிய பூங்காவுக்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது அரசு.

இறுதி வரை திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்த ஜானகி, சென்னை மதுரவாயலில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் கள ஆய்வு மையத்தில் தன் இறுதி மூச்சு வரை மரபியல் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். 1977இல் இவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT