பிடிவாதம்!- சிறுகதை
நைட் டிபனுக்கு தோசையும், குருமாவும் பண்ணட்டுமா?'' ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்த கணவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்கும் சாக்கில் உள்ளே கட்டிலில் குப்புறக் கிடந்த மகன் ரிஷியை ஓரக்கண்ணால்
சிறுவர்மணிபிடிவாதம்!- சிறுகதை
நைட் டிபனுக்கு தோசையும், குருமாவும் பண்ணட்டுமா?'' ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்த கணவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்கும் சாக்கில் உள்ளே கட்டிலில் குப்புறக் கிடந்த மகன் ரிஷியை ஓரக்கண்ணால்
நைட் டிபனுக்கு தோசையும், குருமாவும் பண்ணட்டுமா?'' ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டு இருந்த கணவர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்கும் சாக்கில் உள்ளே கட்டிலில் குப்புறக் கிடந்த மகன் ரிஷியை ஓரக்கண்ணால் பார்த்தாள் ராதா.
டேபிளில் அமர்நது சத்தமில்லாமல் வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்த பூமிகா அம்மாவை பசியோடு பார்த்தாள்.
''ம்... செய். ஆனா, பூமிகா ஹோம் ஒர்க் செய்து முடிக்கட்டும். அப்புறம்தான் சாப்பாடு...'' அப்பா அதட்டலாய் சொன்னார்.
அம்மா சுட்ட தோசையின் வாசனை மூக்கைத் துளைத்தது. ரிஷி மூக்கை தலையணையில் வைத்து அழுத்திக் கொண்டான்.
உடம்பின் ஒவ்வொரு அணுவும் பசியில் தெறித்தது. ஆனால், அதையும் மீறிய பிடிவாதமும், கோபமும் அவனை அசைவற்று படுக்க வைத்திருந்தது.
ரிஷி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய தங்கை பூமிகா நான்காம் வகுப்பு. அவர்களுடைய அப்பா கிருஷ்ணமூர்த்தி போஸ்ட்மேன். அம்மா ராதா இல்லத்தரசி. உடன் பாட்டி பர்வதம்.
கிருஷ்ணமூர்த்தியை பொறுத்தவரை அவருக்கிருந்த மிகப் பெரிய குறையே ரிஷியின் பிடிவாதம் தான்.கேட்டது கேட்ட மாத்திரத்தில் கிடைக்கவில்லையென்றால் வீடே இரண்டாகி விடும்.
அது ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகட்டும், இல்லை சிக்ஸ் பேக்ஸ் பேண்ட்டாகட்டும் எல்லாம் உடனடியாக கிடைத்தாக வேண்டும். இல்லையேல் கையில் கிடைத்ததெல்லாம் தூக்கி அடித்து தீவிரவாத போராட்டம் செய்வான். அதற்கும் பலன் கிடைக்கவில்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து மிதவாதப் போர் புரிவான்.
அப்பாவும், அம்மாவும் அவன் மீது இரக்கப்பட்டு அந்தப் பொருளை வாங்கித் தந்து விடுவார்கள். ஆனால், ரிஷி நினைத்துக் கொள்வான் தன்னுடைய பிடிவாதம் வெற்றி பெற்றுவிட்டதாய்..!
இன்றும் அப்படித்தான்.
ஸ்கூலில் இருந்து வரும் போது கோபமாய்த்தான் வந்தான். ஷூ, சாக்ஸ், வாட்டர் பாட்டில், பேக் என எல்லாவற்றையும் திசைக்கொன்றாய் விசிறியடித்தான்.
''அட... என்னடா இது, வரும்போதே இத்தனை கோபத்தோட வர்றே...'' பாட்டி பார்வதம் கேட்டார்.
''ஏய்... கிழவி, நீ சும்மா கிட...'' என்று அவன் கத்தவும், பின்னாலிருந்து அவன் முதுகில் ஓங்கி ஒரு அறை விட்டார் அவனது அம்மா.
''என்ன திமிர் உனக்கு..! பெரியவங்களுக்கு மரியாதை தரணும்னு நீ படிக்கிற பள்ளிக்கூடத்தில சொல்லித் தரலியா..! எப்பப் பாரு எடுத்தெறிஞ்ச பேச்சு...''
கோபமும், அவமானமுமாய் கண்ணீர் பொங்க அம்மாவை பார்த்தான்.
''என்னடா முறைக்கிறே..?''
''எனக்கு நாளைக்கே செல்போன் வேணும்...''
''அவன் கேட்டதும் ராதா ஒரு நொடி அதிர்ந்து போனாள். அவர்கள் வீட்டில் யாருக்கும் செல்போன் உபயோகிக்கும் பழக்கமே இல்லை. வீட்டில் லேன்ட்லைன் போன் ஒன்று இருந்தது. அப்படியிருக்கையில் ரிஷி கேட்டபோது தன் காதுகளாலேயே நம்ப முடியவில்லை.
''என்னடா உலர்றே..! செல்போனா..! உனக்கா..! இப்ப அதுக்கென்ன அவசியம் வந்தது...''
''என் வகுப்பில ரவி, சுரேஷ், கோபி எல்லாரும் செல்போன் வெச்சிருக்காங்க. அதுவும் காஸ்ட்லி செல்போன். நான் கிளாஸ்ல ஃபர்ஸ்ட் ரேங்க். அப்படியிருக்கையில் என்கிட்ட ஒரு செல்போன் கூட இல்லையின்னு அவங்கள்லாம் கேலி பேசறாங்கம்மா...''
ராதா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
''செல்போன் இல்லாட்டி கேலி பேசுவாங்களா..! அதுவும் எட்டாவது படிக்கிற பையனைப் பார்த்து. ஸ்கூல் பசங்க செல்போன் பயன்படுத்தக் கூடாதுங்கிறது உங்களுக்குத் தெரியுமா, இóல்லையா? உங்க டீச்சர் என்ன பண்றாங்க..? நாளைக்கு நான் அவங்களை வந்து பார்க்கிறேன்...'' அம்மா அதட்டலாய் சொல்லவும் ரிஷியின் கோபமும், பிடிவாதமும் இரட்டிப்பானது.
யூனிபார்ம் கூட கழட்டவில்லை. அப்படியே போய் கட்டிலில் படுத்தவன்தான் அசையவில்லை.
அப்பா வந்த போதுகூட எழுந்திருக்கவில்லை. விஷயம் என்னவென்று விசாரித்த கிருஷ்ணமூர்த்தி, ரிஷியை அழைத்து பக்குவமாய் எடுத்துச் சொன்னார். அவனுடைய பிடிவாதமும், கோபமும் எல்லை மீறவே "பளார் பளார்'வென்று கன்னத்தில் அறைந்தார்.
ரிஷியுடைய தீவிரவாத போராட்டம், உண்ணாவிரதப் போராட்டமானது. நைட் சாப்பிடமாட்டேன் என்றுதான் இந்த அடம்.
அம்மா சாப்பிட அழைத்த போது, பிடிவாதமாய் மறுத்தான்.
டைனிங் டேபிளில் தட்டுகள் பரிமாறப்படும் சத்தம், அதைத் தொடர்ந்து வீசிய தோசையின் வாசம் ரிஷிக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. வாயில் உமிழ் நீராய் சுரந்தது.
"சின்ன வேலையும், மிகக் குறைந்த சம்பளமும் உள்ள சுரேஷ், கோபி, ரவி ஆகியோருடைய அப்பாக்கள் எல்லாம் தங்கள் பிள்ளைகளுடைய சந்தோஷத்திற்கு பணம் ஒதுக்க முடிகிறது என்றால், அரசாங்க உத்யோகஸ்தரான அப்பாவால் பணம் ஒதுக்க முடியாதா..? எப்படியாவது நாளைக்கு செல்போனுடன் கிளாஸýக்கு போய் அசத்த வேண்டும்' ரிஷி மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்து விட்டு, விளக்குகளை அணைத்து விட்டு படுக்கச் சென்று விட்டார்கள்.
ரிஷிக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கொஞ்சம் தண்ணீராவது குடித்தால்தான் மூச்சே விடமுடியும் போல் தோன்ற, மெல்ல எழுந்து பூனை நடைபோட்டு ஹாலுக்கு வந்தான். ஹாலில் யாருமில்லை. சமையல்கட்டை ஒட்டிய அறையில் பாட்டி ஒருக்களித்து படுத்திருப்பது தெரிந்தது.
டைனிங்டேபிளை அடைந்தவனுக்கு டேபிளின் மேலிருந்த தண்ணீர்குவளை கவனத்தை ஈர்க்கவில்லை. மாறாக, பளபளப்பான அட்டைப் பெட்டியில் பொதிந்து கிடந்த லட்டு மனதை சுண்டியது. அப்பா வரும்போது வாங்கி வந்து இருக்கிறார். வாயில் எச்சில் சுரந்தது.
சாப்பிட்டால்தானே கோபம் தீர்ந்ததாய் அர்த்தம். பார்த்தால் கூடவா தப்பு..! தயங்கியபடியே அட்டைப் பெட்டியை பிரித்தான். வரிசையாய் லட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன்மீது அலங்காரமாய் வீற்றிருந்த முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவை லட்டின் அழகுக்கு அழகு சேர்த்தது.
லட்டை தின்றால்தானே தப்பு. முந்திரியை தின்றால் என்னாகப் போகிறது. அவனுடைய வைராக்கியம் கால் கிலோ குறைய, லட்டின் மீதிருந்த முந்திரி, கிஸ்மிஸ்களை நோண்டி திண்ண ஆரம்பித்தான். பசி கொண்ட வயிறும், ருசிகண்ட நாக்கும், ஒரே ஒரு லட்டு மட்டும் தின்றுவிட்டு போகலாம் என்ற முடிவை, நான்கு லட்டுகளை திண்ணும் வரை தள்ளிபோட வைத்தது. நான்காவது லட்டை தின்ற பிறகுதான் அந்தக் கவலை எழுந்தது.
காலையில் எழுந்து லட்டுகளை காணவில்லை என்றால் வீட்டிலுள்ளவர்கள் நிச்சயமாய் இவனைத்தான் நினைப்பார்கள். அதிலிருந்து தப்பிக்க வழி, அவனுடைய குட்டி மூளை ஏதேதோ தப்பு கணக்குகளைப் போட்டு, அடுத்த விநாடி சர்க்கரை நோய்கண்ட பாட்டியின் மீது பழிபோட துணிந்தது.
லட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டியை பாட்டியின் தலைமாட்டில் வைத்து விட்டு அவன் நகர முற்பட, அறையின் விளக்குகள் உயிர் பெற்று சிரித்தது. அவன் தலைகுனிந்து நிற்க, அறைவாசலில் அப்பாவும், அம்மாவும் நின்றிருந்தனர். வெளிச்சம் பட்டு பாட்டியும் விழித்து விட்டார்.
''சபாஷ்! ரிஷி, கிளாஸ்ல நீதானே நம்பர் ஒன்! இப்போ திருட்டு வேலையிலும் நீதான் நம்பர் ஒண்ணா..? அவமானமா இல்லையா ரிஷி. உன் வீட்டிலேயே நீ திருடி திண்ண...'' அம்மா அதட்டினாள்.
''ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா..?'' பாட்டி இருவரையும் அதட்டிவிட்டு, பேரனை இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டாள்.
''எதுக்கு ரிஷி அழுவறே..? உங்க தாத்தா தான் சொல்லுவாரு, நன்றும் தீதும் பிற தர வாரா'னு. அது எத்தனை நிஜமாச்சு பார்த்தியா..! உன் படிப்பும், புத்திசாலித்தனமும் செல்லாத காசானதுக்கு காரணம் உன் பிடிவாதமும், கோபமும் தானே..! உங்க தாத்தா உனக்கு ரிஷிகுமார்னு பேர் வச்சதுக்கு காரணம், நீ பொருமையிலயும் புத்திக் கூர்மையிலும் ரிஷிகள் மாதிரி இருக்கணும்னுதான். ஆனா, நீ அதுக்கு நேர் எதிரா இருக்க, அது தப்புன்னு உனக்குப் புரியலையா..?''
''ரிஷி கண்ணு, உங்கப்பாவால உனக்கு செல்போன் வாங்கித் தர முடியாம இல்ல. ஆனா, உன் வயசுள்ள பிள்ளைகள் செல்போன் பயன்படுத்தறது சட்டப்படி குற்றம். சட்டத்தை மீறி, உன் ஆசிரியர்களை ஏமாற்றி, உன் அப்பா அம்மாவை கஷ்டப்படுத்தி, செல்போன் வாங்கி, உன் உடன்படிக்கிற வசதியில்லாத மாணவர்களை ஏங்க வைக்கப் போற. நீ செல்போன் வாங்கறதால இத்தனைப் பேற கஷ்டப்படுத்த போறே. இப்போ சொல்லு, அந்தப் பொருள் உனக்கு வேணுமா..?''
''இல்ல பாட்டி, பசங்க என்னை கஞ்சன்னு கேலியாய் பேசறாங்க...''
''பேசட்டும் அதனாலென்ன..! வீண் பகட்டுக்கும், ஆடம்பரத்திற்கும் தான் மரியாதை தருவேன்னு சொல்ற நண்பர்கள் கூட இனி சேராதே. செல்போன் என்ன அதைவிட உயர்ந்த பொருளெல்லாம் உரிய நேரத்தில் உன்னைத் தேடி வரும். அதுவரை பொறுமையாகவும், அமைதியாகவும் காத்திருக்கணும்.
இனிúóமல் உன்னை தலைகுனிய வைத்த கோபத்தையும், பிடிவாதத்தையும் விட்டுடுவேன்னு பாட்டிக்கு உறுதி கொடு...''
பாட்டி கைநீட்ட தெளிந்த மனதோடும், மாறிய குணத்தோடும் பாட்டியின் கரத்தோடும் அவனும் கரம் சேர்த்தான்.
கிருஷ்ணமூர்த்தியின் மனதை இதுநாள் வரை அரித்துக் கொண்டிருந்த குறை மெல்ல விலகியது.