சிறுகதை: மகிழ்ச்சியின் அளவுகோல்!
""இந்த வருட ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது ஒரு பரிசாவது நீ வாங்குவதாக இருந்தால் மட்டுமே நாங்கள் உன் பள்ளிக்கு வருவோம்'' என்று உறுதியாக கூறியிருந்தனர் ஏழாம் வகுப்பில் படிக்கும் பாலுவின் பெற்றோர். ""நிச்
""இந்த வருட ஆண்டு விழா நிகழ்ச்சியின் போது ஒரு பரிசாவது நீ வாங்குவதாக இருந்தால் மட்டுமே நாங்கள் உன் பள்ளிக்கு வருவோம்'' என்று உறுதியாக கூறியிருந்தனர் ஏழாம் வகுப்பில் படிக்கும் பாலுவின் பெற்றோர்.
""நிச்சயம் வாங்குவேன்'' எனக் கூறியதோடு நில்லாமல், இரண்டு பரிசுகளையும் வாங்கினான் பாலு. அவன் பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலு வெகு நாட்களாக ஆசையோடு கேட்டிருந்த கைக்கடிகாரத்தை வாங்கிப் பரிசளித்தார் பாலுவின் தந்தை.
தான் வாங்கிய பரிசுகள் மற்றும் கைக்கடிகாரத்தையும் தாத்தாவிடம் காண்பித்துவிட்டு உறங்கப் போனான் பாலு. அனைவரும் உறங்கி விட்டனர். ஆனால், பாலுவுக்கு மட்டுமே ஏனோ தூக்கமே வரவில்லை. அங்கும் இங்கும் படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தான்.
ஏதோ ஒன்று மனதினை அழுத்துவது போன்ற ஒரு உணர்வு. பாலு இன்னும் உறங்கவில்லை என்பதை அறிந்து மெதுவாக எழுந்து பாலுவின் அருகில் வந்தார் தாத்தா. வாஞ்சையோடு தலைமுடியை கோதியவாறே,
""என்னப்பா... உறக்கம் வரவில்லையா?'' என்றார்.
""ஆமாம்... தாத்தா. கையெழுத்துப் போட்டியில் நான் முதல் பரிசு வாங்கியதில் ரொம்ப சந்தோஷம். ஆனால், கண்களை கட்டிக் கொண்டு யானைக்கு வால் வரைஞ்சு பரிசு வாங்கியதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தோஷம் இல்லை.''
""ஏன் அப்படி?''
""எங்க மிஸ் துணியால கண்களைக் கட்டிவிட்டு போர்டு தெரியுதா? அப்படின்னு கேட்டாங்க. நான் இல்லைன்னு பொய் சொல்லிவிட்டு நைசாக போய் சரியான இடத்தில் வால் வரைஞ்சுட்டேன். அப்ப என் மனசுல பரிசு வாங்கணும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்துச்சு. ஆனால், இப்ப "நீங்க கட்டினதுல சிறிய இடைவெளி இருக்குது. யானை தெரியுதுங்கற உண்மையை சொல்லியிருக்கணும். பரிசு கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை, உண்மையை சொன்னோம்கிற திருப்தி இருந்திருக்கும்.''
கண்கலங்கிய பாலுவின் கரங்களை அழுத்தமாக பற்றிய படியே தாத்தா பேசினார். ""எப்ப நாம செஞ்சது தவறு என உணர்ந்து அதற்காக வருத்தப்படறோமோ அப்பவே நாம திருந்திட்டதாக அர்த்தம். பாலு... நாம செய்யற சிறு நேர்மையில்லாத செயல்கூட நம் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துக் கொண்டு போய்விடும்.''
""தாத்தா! நேர்மையில்லாத செயல் அப்படீன்னா என்ன?''
""அதாவது... பொய் சொல்வது, திருடுவது, பொறாமை கொள்வது, பழிவாங்குவது, நம்பியவர்களுக்குத் துரோகம் செய்வது, பிறர்பொருளுக்கு ஆசைப்படுவது... இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இம்மாதிரி செயல்களில் ஈடுபடும் போதும் ஆரம்பத்தில் நமக்கு சந்தோஷம் கிடைக்கிற மாதிரி இருந்தாலும், பின்னாடி நம்மளோட மகிழ்ச்சி அனைத்தையும் பிடுங்கிக் கொள்ளும்.''
""ஆமாம்... தாத்தா, இனிமேல் இம்மாதிரி நேர்மையற்ற செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டேன்.''
""உன் வாழ்க்கை முழுவதிற்குமே இதை ஒரு அளவுகோலாக வைச்சுக்கலாம். எப்பொழுதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோமோ, அப்பொழுதெல்லாம் நாம் நேர்மையாக இருக்கின்றோம்.
எப்பொழுதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக இல்லையோ அப்பொழுதெல்லாம் நாம் நேர்மையோடு இல்லை என்பதை உணர்ந்துக் கொள்ள முடியும். எந்த விஷயத்தில் நேர்மையாக இல்லை என அறிந்து உடனே திருத்திக் கொள்ளவும் முடியும்'' என்றார்.
தாத்தாவின் கரங்களை பாசத்தோடு பற்றி தன் கன்னங்களில் வைத்துக் கொண்டு, ""தேங்க் யூ தாத்தா'' என்றான் பாலு.
பேரனின் மனக்கலக்கத்தினைப் போக்கி, நல்லதொரு வாழ்க்கைப் பாடத்தை கற்பித்த திருப்தி தாத்தா மனதிலும் நிறைந்திருந்தது.