சிறுவர்மணி

வாங்க! கதை எழுதிப் பார்க்கலாம்...

கதை கேட்க விரும்பாத குழந்தைகள் உலகத்தில் எங்குமே இல்லை. அவர்களுக்குச் சுவாரஸ்யமான, பிடித்தமான கதையைச் சொன்னால், உடனே எல்லாக் குழந்தைகளும் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள். இதிகாசங்கள், காவியங்

அழகிய பெரியவன்

கதை கேட்க விரும்பாத குழந்தைகள் உலகத்தில் எங்குமே இல்லை. அவர்களுக்குச் சுவாரஸ்யமான, பிடித்தமான கதையைச் சொன்னால், உடனே எல்லாக் குழந்தைகளும் ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கிவிடுகிறார்கள். இதிகாசங்கள், காவியங்கள், புராணக்கதைகள் ஆகியவை எல்லா நாடுகளிலும் இருக்கின்றன. அதைப்போல, சிறுவர் கதைகளும் எல்லா நாடுகளிலும் வெகுகாலம் முதற்கொண்டே இருக்கின்றன. தெனாலிராமன் கதைகள், மரியாதைராமன் கதைகள், ஈசாப் கதைகள், முல்லா கதைகள், நாட்டுப்புறக் கதைகள் ஆகியவையெல்லாம் சிறுவர்களுக்காகச் சொல்லப்பட்டவைதான். இந்தக் கதைகளுக்கெல்லாம் முந்தியது, பாட்டி வடை சுட்ட கதையாகக்கூட இருக்கலாம்.

இன்றைய நவீன காலத்தில் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டாலும், கதை கேட்கும் வழக்கம் மாறிவிடவில்லை. குழந்தைகள் சித்திரக் கதைகளை (இஞஙஐஇந) விரும்பிப் படிக்கிறார்கள். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ விளையாட்டுகள் என எல்லாமே கதைகளால் ஆனதுதானே! தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்ட காலம் சென்றுவிட்டாலும், எந்திர தாத்தா பாட்டிகளிடம் தொலைக்காட்சிப் பெட்டிகளிடம் கதை கேட்கும் வழக்கம் போகவில்லை. தொலைக்காட்சிகளில் இருபதுக்கும் மேற்பட்ட ஒளித்தடங்கள் (இஏஅசசஉகந) குழந்தைகளுக்கென்றே இருக்கின்றன.  

நமக்கு ஏன் கதைகள் பிடிக்கின்றன? கதைகளைக் கேட்பதால் நமக்கு என்ன பயன்? கதைகள் நம் ஆசைகளுக்குத் தீனி போடுகின்றன. இயல்பு வாழ்க்கையில் நம்மால் செய்ய முடியாத பல செயல்களும், நாம் வாழ முடியாத பல வாழ்க்கைகளும் கதைகளில் வருகின்றன. அவற்றைக் கேட்கும் நாம், கற்பனையில் நம்மை அக்கதைகளோடு இணைத்துக்கொள்கிறோம். அக்கதைகளுக்குள் வாழ்ந்து பார்க்கிறோம்!

கதைகளைக் கேட்பதால் நமது படைப்புத் திறமையும், கற்பனை ஆற்றலும் தூண்டப்படுகின்றன. பல நாட்டுக் கதைகளையும், பல கால கட்டத்தைச் சேர்ந்த கதைகளையும் கேட்கும்போது, நமது பொது அறிவு வளர்கிறது. கதை சொல்பவர்களை எல்லோருக்குமே பிடிக்கும். அவர்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். நீங்கள் எதிர்காலத்தில் ஆசிரியராகவோ, சிறந்த நிர்வாகியாகவோ, பேச்சாளராகவோ, தலைவராகவோ ஆகவேண்டும் என்று விரும்பினால், உங்களுக்குக் கதை சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்!

கதை கேட்பதும், கதைகளைப் படிப்பதும், பார்ப்பதும் எளிமையானது. ஆனால், கதை எழுதுவது எளிமையானதா? அதுவும் உங்களைப்போன்ற சிறுவர்கள் கதை எழுதுவது என்பது சுலபம்தானா? அது அவர்களால் முடியுமா?

முடியும்! சிறுவர்கள் கதைகள் எழுதலாம்! கதைகள் கேட்பது எவ்வளவு சுலபமானதோ, அதுபோன்று கதைகள் எழுதுவதும் சுலபமானதே! ஆனால், கதை சொல்வதற்கும், கதை எழுதுவதற்கும் சில பயிற்சிகளும், திறமைகளும் உங்களுக்கு அவசியம். அவற்றை வளர்த்துக் கொண்டால் நீங்கள் அற்புதமான கதைகளை எழுதலாம்.

கதை சொல்ல வேண்டும், கதைகளை எழுதவேண்டும் என்ற விருப்பமும் அதற்குத் தேவையான ஆற்றலும், நம் எல்லோரிடத்திலும் இயல்பாகவே இருக்கின்றன. உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லோருமே கதைகளைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆமாம்! நேற்றுவரை நடந்தவை எல்லாமே கதைகள்தான். நேற்றுவரை நடந்தவை மட்டுமல்ல; சென்ற நிமிடம்வரை நடந்தவைகூட கதைகள்தானே! நாம் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும்போது, நடந்து முடிந்தவற்றைப் பற்றிதானே பெரும்பாலும் பேசுகிறோம். அப்படிப் பேசாமல் நம்மால் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியாது அல்லவா? அப்படியானால், உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களுமே கதை சொல்லிகள்தான்! அப்படியென்றால், கதை எழுதுகிறவருக்கும், பிற மக்களுக்கும் என்ன வேறுபாடு? கதை எழுதுகிறவர், தான் கதை சொல்கிறோம் என்ற உணர்வோடு எழுதுகிறார். பிறர் அந்த உணர்வின்றியே பேசுகிறார்கள். இதுதான் அடிப்படை வேறுபாடு.

கதை சொல்வதற்கும், கதை எழுதுவதற்கும் முதலில் உங்களுக்கு ஆர்வம் வேண்டும். பிறரைக் கவரும் வகையில் ஒரு கதையைச் சொல்லவேண்டும் என்ற ஆர்வம். இந்த ஆர்வம்தான் கதை எழுதுவதற்கான அடிப்படை. உங்களைச் சுற்றி நடப்பவற்றையும், இதற்கு முன்னர் நடந்தவற்றையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் வேண்டும். மக்களின் பேச்சு வழக்கையும், அவர்கள் பயன்படுத்தும் சொற்களையும் கவனமாகக் கேட்டு மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி வாழ்கின்ற மக்களின் சமூக நிலை, அவர்களின் நம்பிக்கைகள், அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் பற்றியெல்லாம் அறிய வேண்டும்.

இது மட்டும் போதாது. விலங்குகள், பறவைகள், செடிகொடிகள், பருவகாலங்கள், பல வகையான தொழில்கள் பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இவற்றோடு, மொழி அறிவும் மிக மிக அவசியம். நீங்கள் கதையை எழுதப்போகும் மொழியில் நல்ல பயிற்சி உங்களுக்குத் தேவை.

மொழிப் பயிற்சிக்கும், கதைகளை எழுதும் முறைகளை அறிவதற்கும் நீங்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும். டால்ஸ்டாய், செக்காவ், மாபசான், ஓஹென்றி, ஜே. கே. ரெüலிங் போன்ற வெளிநாட்டு எழுத்தாளர்களின் கதைகளையும் - பாரதியார், புதுமைப்பித்தன், கல்கி, வல்லிக்கண்ணன், நாரண துரைக்கண்ணன், கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சா.தமிழ்ச்செல்வன், யூமா. வாசுகி, அழ.வள்ளியப்பா, கவிமணி, வாண்டுமாமா போன்ற தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் படிக்கவேண்டும். இவர்களில் பலர் குழந்தைகளுக்காகவும் எழுதியுள்ளனர். இங்கு உதாரணத்திற்காக சில எழுத்தாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதைத் தவிர உலக அளவிலும், தமிழ் நாட்டிலும் இன்னும் பல சிறந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் உங்கள் பெற்றோர்களோ, ஆசிரியர்களோ உங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்.

புத்தகம் வாசிக்கும் பழக்கம், ஒரு மொழியின் கட்டமைப்பையும், அதன் வளத்தையும் உங்களுக்குச் சொல்லித் தரும். இந்தப் பின்னணிகளோடு அமர்ந்தால், பிறரைக் கவரும் வகையிலான கதைகளை நீங்கள் எழுதத் தொடங்கிவிடலாம். இப்போது ஒரு கதையில் இருக்கவேண்டிய அம்சங்கள் என்ன? அதன் கட்டமைப்பு எப்படி அமையலாம் என்பதைப் பார்க்கலாம். ஒரு கதையை வாய் மொழியாகச் சொல்வதற்கு குரல் வளமும், சொற்களை உச்சரிப்பதில் ஏற்ற இறக்கங்களும், முகபாவங்களும் தேவைப்படுகின்றன. அதேபோலத்தான், ஒரு கதையை எழுதவேண்டுமென்றாலும் சில அம்சங்கள் தேவைப்படுகின்றன. இந்த அம்சங்களை எட்டு வகையாகப் பிரிக்கலாம். அவை, 1.கதைக் கரு, 2.கதைப் பாத்திரங்கள், 3.பாத்திரங்களின் பெயர்கள், 4.கதை நிகழும் களம், 5.விவரிப்பு, 6.தலைப்பு, 7.கதையின் அளவு, 8.கதையின் தன்மை ஆகியவையாகும்.

1. கதைக் கரு

கதைக் கருதான் ஒரு கதையைச் சிறப்புடையதாக்குகிறது. நீங்கள் பார்த்த, கேட்ட, அனுபவித்த சம்பவங்கள் எதுவும் கதையின் கருவாகலாம். ஏதாவது ஒரு கருத்தைச் சொல்ல விரும்பினால் விலங்குகள், தாவரங்கள் பேசுவதுபோலக்கூட எழுதலாம். மந்திர தந்திரக் கதைகள், துப்பறியும் கதைகள், நகைச்சுவைக் கதைகள், இயல்பு வாழ்க்கைக் கதைகள் என்று பல வகையான கதைகள் அவற்றின் கருக்களைக் கொண்டே வகை பிரிக்கப்படுகின்றன.

2. கதைப் பாத்திரங்கள்

கதைப் பாத்திரங்கள் ஒரு கதையை உயிரோட்டமுடையதாக்குகின்றன. நீங்கள் பார்க்கும் பல வகையான குணங்களையும், தோற்றங்களையும் கொண்ட மனிதர்களை மாதிரியாகக்கொண்டு கதைகளை எழுதலாம். மனிதர்கள் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த உயிரினமும், பொருட்களும்கூட கதாபாத்திரங்கள்தான். ஒரு வண்ணத்துப் பூச்சி பேசுவதுபோலக்கூட கதை எழுதலாம்! தவறில்லை.

3. பாத்திரங்களின் பெயர்கள்

கதா பாத்திரங்களுக்குப் பெயர் வைப்பது என்பது கவனத்துடன் செய்ய வேண்டிய ஒன்று. கதையின் கருவுக்கும், பாத்திரத்தின் தன்மைக்கும் ஏற்ப பெயர் வைக்க வேண்டும். உதாரணமாக, விவசாயி ஒருவரைப் பற்றிய கதை என்றால் அவருக்கு முகேஷ், ரமேஷ் என்று பெயர் வைப்பது பொதுவாக நமது சூழலில் பொருத்தமாக இருக்காது.

4. கதை நிகழும் களம்

கதை நிகழும் களம் என்பது கதையை நம்பகத் தன்மைகொண்டதாக்குகிறது.  கிராமம், நகரம், காடு, கடல், விண்வெளி, மரம் என எதுவும் கதைக் களமே. கதைக் களத்தைத் துல்லியமாக விவரிக்க வேண்டும்.

5. விவரிப்பு

ஒரு கதையில், விவரிப்பு என்பது மிகவும் முக்கியமான அம்சம் ஆகும். சம்பவங்களை உரிய ஒழுங்கின்படி ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்வதே விவரிப்பு. இந்த அம்சமே, ஒரு கதாசிரியரைத் தனித்துக் காட்டுகிறது. நீங்கள் எந்தளவு உங்கள் மொழியில் திறமை பெற்றிருக்கிறீர்களோ, அதன்படிதான் விவரிப்பு அமையும். சின்னச் சின்ன வாக்கியங்கள், எளிய சொற்கள் ஆகியவையே குழந்தைகள் கதைக்கு ஏற்ற மொழிநடையாகும்.

6. தலைப்பு

கதைக்கு தலைப்பு வைப்பதும் ஒரு முக்கியமான கலைதான். ஒரு கதைக்கு ஏற்ற பொருத்தமான, அதே சமயம் வித்தியாசமான தலைப்பாக வைக்க வேண்டும். இப்படிப்பட்ட வித்தியாசமான தலைப்பு ஒரு கதையை வாசகர் மனதில் என்றும் நிலை நிறுத்தும்.

7. கதையின் அளவு

கதையின் அளவு மிகவும் இன்றியமையாதது. உடலுக்கு ஏற்ப உடை அணிவது அழகு தருவதுபோல, கதைக் கருவிற்கு ஏற்ப கதையின் அளவு அமைவதே சிறப்பு. சிறுகதை என்றால் சிறிய அளவுகொண்ட கதை என்பதுதானே பொருள்? எனவே, அந்த வரையறையை மீறக்கூடாது. பொதுவாக, சுருக்கமாகவும் அழுத்தமாகவும் எழுதுவதே சிறப்பானதாகும்.

8. கதையின் தன்மை

ஒரு கதையின் தன்மை என்பது அந்தக் கதைக்கு உயிரைப்போன்றது. ஒரு கதையைப் படிக்கும் வாசகர்கள், அந்தக் கதையை எழுதியவர் எந்தக் கோணத்தில் விஷயங்களைப் பார்க்கிறார், எழுத்தாளரது உலக அறிவு என்ன? அவருடைய நியாய தர்மம் என்ன? அவர் யார் பக்கம் நிற்கிறார்? என்பதுபோன்ற விஷயங்களை முக்கியமாகக் கவனிப்பார்கள். எனவே, கதை எழுதப்போகும் நீங்கள், நீதி நியாயத்தின் பக்கம் நின்றே கதைகளை எழுத வேண்டும்.

இந்த எட்டு அம்சங்களைவிடவும் முக்கியமான ஒன்று உள்ளது. உங்கள் கதைகளில் நீதி போதனைகளை வலிந்து சொல்ல வேண்டியதில்லை என்பதே அது. நீங்கள் கதையில் முன் வைக்கும் கருத்தை, கதை விவரணை மூலமாகவும். கதைச் சம்பவங்கள் மூலமாகவும் இயல்பாகச் சொல்ல வேண்டும்.

மேலும், படித்து இன்புறும் வகையில் ஒரு கதையை எழுதினாலே போதுமானதுதான். ஏனெனில், கதையைப் படிக்கும் வாசகர்களுக்கும் சொந்தக் கருத்துகள் இருக்கின்றன. ஒரு நல்ல வாசகர், ஒரு கதையிலிருந்து எதையாவது பெற்றுக்கொள்வார் என்பது உறுதி. ஒரு கதை, அதை வாசிக்கும்போது மன மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தந்தால் அதுவே சிறந்த குழந்தைகள் கதை.

அருமை நண்பர்களே, மேலே சொன்ன விஷயங்களை மனதில் வைத்து கதைகள் எழுதிப் பார்க்க முயலுங்கள். கட்டாயம் முயலுங்கள். இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளைப் பற்றி உங்கள் பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் உரையாடுங்கள். கதை எழுதுவது தொடர்பாக அவர்கள் மேலும் நல்ல கருத்துகளை உங்களுக்குச் சொல்வார்கள். தொடக்க முயற்சிகள் ஏற்ற பலனைத் தரவில்லையென்றாலும் மனம் தளர்ந்துவிடாதீர்கள். விடாமல் முயற்சி செய்து பாருங்கள். காலப்போக்கில் நீங்கள், கதை எழுதுவது தொடர்பாக இன்னும் நிறையக் கற்றுக்கொள்வீர்கள். சிறந்த எழுத்தாளர்களாகிவிடுவீர்கள். உங்கள் கதைகளைப் படித்து பலபேர் மகிழ்வார்கள். இது நிச்சயம்! நாளைய மிகச்சிறந்த எழுத்தாளர்களான உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள். அன்பின் முத்தங்கள்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT