முகப்பு
சிறுவர்மணி

நாடுகள் அறிவோம்... நேபாளம்

தெற்காசிய நாடு. சீனாவுக்கும் நமது நாட்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. ஒரு சிறிய இந்திய மாநிலத்தின் அளவுதான் இருக்கும். உலகிலேயே அதிக அளவு ஏற்றத்தாழ்வான பகுதிகளைக் கொண்ட நாடு என்று கூறுகிறார்கள். நாட்டி

Updated On : 28 டிசம்பர், 2023 at 3:55 PM
பகிர்:

தெற்காசிய நாடு. சீனாவுக்கும் நமது நாட்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. ஒரு சிறிய இந்திய மாநிலத்தின் அளவுதான் இருக்கும். உலகிலேயே அதிக அளவு ஏற்றத்தாழ்வான பகுதிகளைக் கொண்ட நாடு என்று கூறுகிறார்கள். நாட்டின் தாழ்வான பகுதிகள் கடல் மட்டத்திலும் உயர்ந்த பகுதிகள் உலகிலேயே மிகவும் உயரமான இடங்களிலும் இருக்கின்றன. இமயமலைத் தொடர்களை தன்னகத்தே கொண்ட நாடு. உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் இங்குதான் உள்ளது (8,850 மீட்டர் உயரம்).

 இமயமலைத் தொடர் 10 முதல் 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. உலகின் பத்து உயர்ந்த சிகரங்களில் எட்டு நேபாளத்தில் உள்ளன.

 மரங்களைத்தான் தங்களுடைய வாழ்வாதாரமாக நேபாள மக்கள் நம்பியிருக்கின்றனர். சமையல் செய்வதற்கும் எரியூட்டுவதற்கும் பெரும்பாலும் மரங்களையே பயன்படுத்துகிறார்கள். இதனால் இங்கு ஏராளமான மரங்கள் வெட்டப்படுகின்றன. இதன் காரணமாக அடிக்கடி நிலச்சரிவு போன்ற விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

 மரங்களை அதிகமாக வெட்டுவதாலும் மக்கள் தொகை அதிகரிப்பினாலும் இங்குள்ள விலங்குகள் குறைந்து கொண்டே வருவது மற்றுமொரு இயற்கை பாதிப்பு.

 வங்கப்புலி, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், பனிச்சிறுத்தை, டால்பின் வகை மீன்கள் ஆகியவை அரியவகை விலங்கினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நேபாளத்துக்கு இந்த விலங்குகளைக் காணவே வருவதால் அரசாங்கம் இந்த அரிய வகை விலங்குகளைப் பாதுகாப்பதற்காக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 "யெதி' (பனிமனிதன்) இங்குள்ள மலைப் பகுதிகளில் உலவுவதாகவும் ஒரு நம்பிக்கை இன்றும் இருக்கின்றது. இதுவரை யாரும் இந்த மனிதனை பார்த்ததில்லை என்றாலும் அவனுடைய காலடித் தடங்களைப் பார்த்ததாகப் பலர் கூறி, அந்தத் தகவல் செய்தியாக்கப்பட்டுள்ளது.

 இங்கிருந்த லும்பினி என்ற நகரத்தில் கி.மு.563-ல் புத்தர் தோன்றினார். 1800-ம் ஆண்டுகளில் தெற்காசியாவின் பலம்வாய்ந்த நாடுகளில் ஒன்றாக நேபாளம் இருந்தது. இந்தியா, பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் வந்தபோது நேபாளம் தனது பலத்தை இழக்க நேரிட்டது.

 ஆங்கிலேயரான சர் ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவரின் ஞாபகார்த்தமாக இங்குள்ள உயர்ந்த மலைச்சிகரமான எவரெஸ்ட்டுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இங்குள்ள "ஷெர்பா' எனப்படும் மலையேறி மக்கள் இந்தச் சிகரத்தை "சோமோலுங்மா' (உலகின் தெய்வத்தாய்) என்றே அழைக்கின்றனர். எவரெஸ்ட் சிகரத்தின் மற்றொரு பெயரான "ஸôகர்மாதா'வுக்கு நேபாள மொழியில் "வானத்தின் நெற்றி' என்று அர்த்தம்.

 சர் எட்மண்ட் ஹிலாரி (நியூசிலாந்து நாட்டவர்) மற்றும் டென்சிங் என்ற நேபாள ஷெர்பாவும் இணைந்து 1953-ம் ஆண்டில் எவரெஸ்ட் மலையின் உச்சிக்கு முதன்முதலில் சென்றனர். அதன் பிறகு பல முயற்சிகள் நடைபெற்றன. அவற்றில் நிறையத் தோல்விகளும் சில வெற்றிகளும் அடக்கம்.

 நேபாள மக்களில் பெரும்பாலோர் இந்துக்கள். ஆனாலும் இந்து மதம் மற்றும் பௌத்த மதம் இரண்டையும் கடைப்பிடிக்கும் மக்களும் இங்கு உள்ளனர். சாதி இங்கு ஒழிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

 ஷெர்பாக்கள் உயர்ந்த மலைப் பகுதிகளில் பிறந்து வளர்ந்து வருவதால் அவர்களுக்கு இங்குள்ள மலைகளைப் பற்றிய அத்தனை விஷயங்களும் தெரியும். ஆகவே இவர்கள் மலையேறிகளாகவே பிழைப்பு நடத்துகிறார்கள். மலையேற வரும் வெளிநாட்டுவர்களுக்கு மலையேறப் பயிற்சி கொடுப்பதும் இவர்கள்தான். இவர்களின் உதவியின்றி யாரும் இங்குள்ள உயர்ந்த மலைச் சிகரங்களின் மீது ஏற முடியாது.

 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்ட ஆட்சி நடைபெறுகின்றது.

 தலைநகரம்: காத்மண்டு

 மக்கள்தொகை: 2,93,91,000

 மொழி: நேபாளி

 நாணயம்: நேபாள ரூபாய்

 மதம் : இந்து, பெüத்தம், கிறித்தவம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.