எங்கள் கிராம விளையாட்டு
கண்ணை மூடணும் சின்னக் குழந்தைகள்காணாது ஓடி ஒளியணும்
கண்ணை மூடணும் சின்னக் குழந்தைகள்
காணாது ஓடி ஒளியணும்
கண்ணைத் திறந்ததும் கண்டு பிடிக்கணும்
"கண்ணா மூச்சி' விளையாட்டு!
இரண்டு அணிகள் இடையில் கோடு
பாடிச் சென்றே தொடுவதும்
வருபவர் தொட்டுப் போக விடாமல்
பிடிப்பதும் "சடுகுடு' விளையாட்டு!
கோட்டைப் போடணும் கோட்டுக் கொருவர்
காவலுக் காக நிற்கணும்
கோட்டைத் தாண்டி உள்ளே போகணும்
"உப்புக் கோடு' விளையாட்டு!
நொண்டி வந்தால் கோட்டுக் குள்ளே
பாய்ச்சல் காட்டி விலகணும்
நொண்டிக் கொண்டே ஆளைத் தொடணும்
"நொண்டிக் கோடு' விளையாட்டு!
எல்லைக் கோடு கட்டம் கட்டமாய்
ஏணியைப் போல இருந்திடும்
சில்லைப் போட்டு சிறுமிகள் ஆடும்
"சில்லுக் கோடு' விளையாட்டு!
கட்டைக் கழிகளை வண்ணம் தீட்டி
கைகளில் பிடித்துத் தட்டியே
வட்டமாய்ச் சுற்றி ஆடிப் பாடி
வந்திடும் ஆட்டம் "கோலாட்டம்'!
"பல்லாங் குழி'தான் பலகையில் ஆட்டம்!
தரையில் உருட்டிடும் "தாயம்'!
எல்லாம் பார்த்தே மகிழ்ந்து போகலாம்
இனிதே எங்கள் கிராமத்தில்!