குற்றால அருவி
அருவியிலே குளித்திடவே கூடுது கூட்டம் அகம்மகிழ குரங்கினங்கள் போடுது ஆட்டம்!
அருவியிலே குளித்திடவே கூடுது கூட்டம்
அகம்மகிழ குரங்கினங்கள் போடுது ஆட்டம்!
கருத்தமேகம் சூழவந்து தூறுது தூறல்
களிப்புமிக இளந்தென்றல் தூவுது சாரல்!
விருப்பமுடன் எழில்மங்கை தந்திடும் முத்தம்
வந்தனமும் கூறிடுமே அருவியின் சத்தம்!
திரிகூட இராசப்பன் பாடிய பாட்டு
தென்பொதிகை மயங்கிடுதே தீந்தமிழ் கேட்டு!
குறத்திசொல்லும் குறியிங்கே பலிக்கும் பலிக்கும்
குறவஞ்சித் தமிழதிலே ஒலிக்கும் ஒலிக்கும்!
மறத்தமிழன் மாவீரம் பேசும் பேசும்
மறுப்பின்றித் தென்றலது வீசும் வீசும்!
அறிவிலுயர் சித்தர்புகழ் பாடும் பாடும்
அகத்துயரம் அதைக்கேட்டு ஓடும் ஓடும்!
குற்றால நாதனருள் ஊற்று ஊற்று
குன்றாத அவன்புகழை போற்று போற்று!
தேனூறும் குற்றாலம் இன்பம் இன்பம்
தேடிவந்தால் தீர்ந்திடுமே துன்பம் துன்பம்!
காணுறும் காட்சியெல்லாம் பசுமை பசுமை
காத்திட்டால் என்றென்றும் நன்மை நன்மை!
வான்மேகம் வந்துமுகம் காட்டும் காட்டும்
வருவோர்க்குக் கவியின்பம் ஊட்டும் ஊட்டும்!
ஏனின்னும் தயக்கமிங்கே வாங்க வாங்க
இதயமெல்லாம் இன்பமேந்திப் போங்க போங்க!