முத்துக் கதை
பெரிய பணக்காரர் ஒருவர், துறவி ஒருவரிடம் சென்றார். ""சுவாமி, என்னிடத்தில் ஏராளமாகப் பணம் இருக்கிறது.
அளவுக்கு மிஞ்சினால்...
பெரிய பணக்காரர் ஒருவர், துறவி ஒருவரிடம் சென்றார்.
""சுவாமி, என்னிடத்தில் ஏராளமாகப் பணம் இருக்கிறது. இருந்தாலும் எனக்கு நிம்மதியும் அமைதியும் இல்லை. என்ன காரணம்?'' என்று கேட்டார்.
அந்தத் துறவி, இதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் அருகில் நின்றிருந்த குழந்தையைக் கூப்பிட்டார்.
ஓர் ஆப்பிள் பழத்தை எடுத்து, அந்தக் குழந்தையின் கையில் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட குழந்தை மகிழ்ச்சியுடன் சிரித்தது.
இன்னொரு பழத்தை எடுத்துக் கொடுத்தார். அதையும் இன்னொரு கையில் பெற்றுக் கொண்டு அந்தக் குழந்தை சிரித்தது.
மூன்றாவது ஆப்பிளை எடுத்துக் கொடுத்தார். இரண்டு பழங்களையும் நெஞ்சிலே அணைத்துக் கொண்டு, மூன்றாவது பழத்தையும் குழந்தை வாங்க முயற்சித்தது. ஆனால், அந்தப் பழம் நழுவிக் கீழே விழுந்து விட்டது. ஏற்கெனவே இருந்த இரண்டு பழங்களும் தரையில் தவறி விழுந்து உருண்டன.
இப்போது, அந்தக் குழந்தை அழ ஆரம்பித்தது.
இதைக் காண்பித்து அந்தப் பணக்காரரிடம் துறவி சொன்னார்:
""குழந்தையைக் கவனித்தீர்களா? இரண்டு ஆப்பிள் போதும் என்று அந்தக் குழந்தை நினைத்திருந்தால், இப்படி அழ வேண்டிய நிலை அதற்கு வந்திருக்காது.''
பணக்காரர் புரிந்து கொண்டார். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் எஞ்சுவது துன்பமே!
-த.சீ.பாலு,
சென்னை.