ஊரிலிருந்து தாத்தா வந்திருந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு சந்தைக்குப் போனான் திவாகர். மழை வரும் போலிருந்தது. ஆளுக்கொரு குடை கொண்டு போனார்கள்.
சந்தையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தாத்தாவிடம் அவரது குடையைத் தருமாறும் - காய்கறிகளைப் பார்த்து வாங்குமாறும் கேட்டுக் கொண்டான் திவாகர்.
தாத்தா தனது குடையைத் தரவில்லை. அதுமட்டுமல்ல; இவனது குடையையும் சேர்த்து வாங்கி வைத்துக் கொண்டார்.
தாத்தா சிரமப்படக்கூடாது என்று இவன் நினைக்க, பறிக்காத குறையாக இவனது குடையையும் வாங்கிக்கொண்ட அவரது செயல் இவனுக்கு மன சஞ்சலத்தை உண்டு பண்ணியது; அவன் அமைதியாகிவிட்டான்.
தாத்தாவோடு பணியாற்றி ஓய்வுபெற்ற நண்பர் ஒருவர், அருகாமை குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தார். தாத்தா அவரைப் பார்க்க ஆசைப்பட்டார். திவாகர்தான் கூட்டிக்கொண்டு போனான்.
ஸ்கூட்டரைக் கிளப்பி, தாத்தாவை பின்னால் அமரச் சொன்னான். தாத்தா உட்காரவில்லை. திவாகரையும் வண்டி ஓட்டவிடவில்லை. வலுக்கட்டாயமாக அவனை பில்லியனில் உட்கார வைத்து அவரே ஓட்டிக்கொண்டு சென்றார்.
தாத்தாவை பின்னால் உட்கார வைத்து, வண்டியை ஸ்டைலாக ஓட்டி, தனது வீரதீர பிரதாபங்களை எல்லாம் காட்ட ஆசைப்பட்ட திவாகருக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. தாத்தா அவனை இன்னும் சின்னப்பையன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்போலும். திவாகருக்கு பதினைந்து வயது ஆகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் அவன் பள்ளிப் படிப்பை முடித்து விடுவான்.
பக்கத்து ஊரில் திருமணம். தாத்தா உள்பட அனைவரும் பேருந்தில் போனார்கள். ஒரு மணிநேரப் பயணம்.
தாத்தா கிராமத்தில் இருந்து வந்ததன் பிரதான நோக்கமே அந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான். அப்படியே திவாகருக்காக இங்கே மூன்று நாள்கள் டேரா.
பேருந்து கிளம்பியதும் திவாகர் செல்போனில் பாட்டு போட்டுக் கேட்க ஆரம்பித்தான். "காதில் மாட்டிக் கேட்கும் ஹெட்செட் இருக்கிறதா' என்று கேட்டார் தாத்தா.
இவன் இல்லை என்றான். அப்படியானால் பாட்டு கேட்க வேண்டாம் என்ற தாத்தா இவன் பதிலைக் கொஞ்சம்கூட எதிர்பாராமல் செல்போனை வாங்கி, பாட்டை நிறுத்திவிட்டார். திவாகருக்கு குபுக்கென்று அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
தாத்தா ரொம்ப நல்லவர்தான். அவர் ஊரிலிருந்து வருகிறார் என்றால் திவாகர் ஏக குஷியாகி விடுவான். அவர் இவனை வெளியே கடைகளுக்குக் கூட்டிக்கொண்டு போவார். தின்பண்டங்கள், விளையாட்டுச் சாமான்கள் வாங்கித் தருவார். நிறைய கதைகள் சொல்லுவார். அவர் இங்கிருக்கும் நாள்களில் நேரம் போவதே தெரியாது.
அப்படிப்பட்ட தாத்தாதான் இப்போது எதையோ மனத்தில் வைத்துக்கொண்டு வெடுக் சுருக்கென்று நடந்து கொள்கிறார்.
தாத்தா வீட்டில் இல்லாத சமயம், தாத்தாவைப் பற்றி அம்மாவிடம் கோள் சொன்னான் திவாகர்.
""தாத்தா முன்னை மாதிரி இல்லைம்மா! ரொம்ப மாறிட்டாங்க! எதுக்கெடுத்தாலும் கோபப்படுறாங்க!''
என்றவன் நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக விவரித்தான்.
""தாத்தா கோபப்பட மாட்டாங்களே! அவங்க கோபப்பட்டாங்கன்னா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்!'' -திவாகரின் அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெளியே சென்றிருந்த தாத்தா வீட்டிற்குத் திரும்பினார்.
""இதோ தாத்தாவே வந்துட்டாங்களே! அவங்ககிட்டயே கேட்டுருவோம்!'' - என்றபடி திவாகர் சொன்னதை, தனது மாமாவிடம் எடுத்துச் சொன்னார் திவாகரின் அம்மா.
அதைக் கேட்ட தாத்தா சிரித்தார். சோபாவில் அமர்ந்தவர், திவாகரையும் அழைத்துப் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு பேசினார்-
""சந்தைக்குப் போகும்போது சுருட்டின குடையை சிலம்புக்கம்பை சுத்துற மாதிரி சுத்திகிட்டே வந்தான்! அப்படிச் செய்யாம வாடான்னு ரெண்டு தடவை சொல்லிப் பாத்தேன்! கேக்கலை! விளையாட்டுப் பையன்தான்! குடையோட முனை கூர்முனை; யார் மேலயாவது பட்டு காயம் உண்டாயிருச்சுனா? தெரியாமக்கூட பிறருக்குத் துன்பத்தைக் கொடுத்துடக் கூடாதில்லையா? அதுதான் சிரமமாக இருந்தாலும் பரவாயில்லைனு ரெண்டு குடையையும் நானே வாங்கி வைச்சுக்கிட்டேன்!'' என்றார்.
""பதினெட்டு வயசானாத்தான் வண்டி ஓட்ட அரசாங்கமே லைசன்ஸ் கொடுக்குது! ஏன்னா அப்பத்தான் விபத்து இல்லாம வண்டி ஓட்டுற ஒரு மனப்பக்குவம் வரும்ங்குறதால அப்படி ஓர் ஏற்பாடு! இப்ப விபத்துல சிக்குறவங்கள்ல நிறையப் பேரு இவனை மாதிரி ரெண்டுங்கெட்டான் பசங்கதானே? ஒரு தாத்தாவா நான் எப்படி இவனை வண்டி ஓட்ட அனுமதிக்க முடியும்?'' என்று எதிர்கேள்வி கேட்டார்.
திவாகரின் அம்மா குறுக்கிட்டுப் பேசினார், ""நீங்க சொல்றது வாஸ்தவந்தான் மாமா!
ஆனா, இவனைவிட சின்னப் பசங்கல்லாம் வண்டி ஓட்டுறாங்களே? அதுக்கு என்ன சொல்றீங்க?'' - கேட்டார்.
""எந்த ஒரு புதிய விஷயத்தையும் வேகமா கத்துக்கணும்ங்குற ஆர்வம் குழந்தைகளுக்கு இருக்கத்தான் செய்யும்! அது இயற்கை! ஆனா அதுல இருக்குற நல்லது கெட்டது, ஆபத்துகளைப் புரிய வைக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டு!'' என்றார் தாத்தா ஆணித்தரமாக.
அடுத்ததாக அவர் செல்போன் விஷயத்துக்கு வந்தார்.
""பாட்டு கேக்குற உரிமை நமக்கு உண்டு! அதே நேரத்துல சுற்றுப்புறத்தோட அமைதியைக் கெடுக்காம இருக்குற கடமையும் நமக்கு உண்டு. காதுல மாட்டிக் கேக்குற ஹெட்செட் இருக்கானு கேட்டேன்! இல்லைனு சொன்னான்! பஸ்சுக்குள்ள தேவை இல்லாத இரைச்சலை உண்டுபண்ண வேண்டாம்னு ஆஃப் பண்ண சொல்லிட்டேன்!'' என்றார் தாத்தா. இப்போது திவாகர் குறுக்கிட்டுப் பேசினான்.
""தாத்தா! நீங்க சொன்னா நாங்க கேட்டுக்குவோம்! மத்தவங்க கேப்பாங்களா? எல்லாரும் அவங்க அவங்க விருப்பப்படிதானே இருக்காங்க! அவங்களையெல்லாம் யார் கட்டுப்படுத்துறது?'' என்று கேட்டான்.
""நீ எனக்கு பேரன்! உனக்கு நல்லது சொல்ல வேண்டிய கடமை எனக்கிருக்கு! இதுமாதிரி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தாத்தா பாட்டி, அம்மா, அப்பா, குரு, நண்பன் இப்படி யாராவது நல்லது சொல்லுவாங்கணு நாம நம்புவோம்! மற்றபடி ஒரு சிலர் பொது இடங்கள்ல பொறுப்பில்லாம நடந்துக்குறதை நாம உதாரணமா எடுத்துக்கக்கூடாது திவாகர்!'' - என்றார் தாத்தா.
அவரே சற்று இடைவெளிவிட்டு, ""நாம செய்யுற ஒரு செயல் பிறருக்குக் கெடுதல் உண்டு பண்ணும்னா அந்தச் செயலை செய்யாம இருக்குறதுதான் நல்லது!'' என்ற தாத்தா, பின் அமைதியாகி விட்டார்.
பாதுகாப்பு, மற்றவர்கள் சௌகர்யம் என்று பல விஷயங்களை மனத்தில் வைத்துக்கொண்டுதான் தாத்தா இவனிடம் அப்படி நடந்து கொண்டிருக்கிறார். இவனுக்கு நற்பண்புகளை ஊட்ட வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்திருக்கிறது.
இந்த உண்மை புரியாமல் இவன் தாத்தாவை மிகவும் தவறாக எண்ணிவிட்டான்.
""என்னை மன்னிச்சிடுங்க தாத்தா!'' என்றபடி தாத்தாவின் மடியில் தலைசாய்ந்து கொண்டான் திவாகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.