குறையொன்றும் இல்லை!
பூஜைக்கு ஆயத்தமானார் குரு! சில பூஜை திரவியங்கள் வாங்க வேண்டியிருந்தது.
பூஜைக்கு ஆயத்தமானார் குரு! சில பூஜை திரவியங்கள் வாங்க வேண்டியிருந்தது. சீடனை அழைத்தார். பூஜைப் பொருட்களை வாங்க கடைத்தெருவிற்கு அனுப்பினார் அவர். சீடனும் குருவின் கட்டளைக்குப் பணிந்து கடைத்தெருவிற்குச் சென்றான். அவனுக்கு குருவின் மீது பக்தியும் மதிப்பும் மிக அதிகம்!
அவ்வூரில் யோகி ஒருவர் இருந்தார். அவருக்கு குருவின் மீது மிகவும் பொறாமை!
கடைத் தெருவில் பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த சீடனைச் சந்தித்தார் யோகி! அவனை வழி மறித்து, ""உன்னுடைய குருவிற்கு ஒன்றும் தெரியாது...அவரால் எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்த முடியாது. அவர் ஒரு ஏமாற்றுப் பேர்வழி. என்னைப் பார்! நான் நீரில் நடப்பேன்...,நெருப்பை மிதிப்பேன்...,மற்றும் வானில் பறப்பேன்! உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நீ உன் குருவிடம் எதனையும் பயில முடியாது! நேரத்தை வீணாக்காதே!''என்றார்.
அதற்கு அந்த சீடன், ""என் குருவின் மீது நான் மிக்க மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறேன். அவர் அற்புதம் மிக்கவர்! நான் அவரை வணங்க அந்த அற்புதம்தான் காரணம்.'' என்றான் சீடன்.
""என்ன அற்புதத்தைக் கண்டாய் அவரிடம்?'' என்று கேட்டார் யோகி.
""அவர் பிறரைப் பற்றி எப்போதும் குறை கூற மாட்டார். எல்லோரிடமும் உள்ள நிறைகளையே காண்பவர் அவர்...,இந்த அவரது குணம்தான் எல்லா அற்புதங்களைக் காட்டிலும் மிக அற்புதமானது என நான் நினைக்கிறேன். எனவே அவரை நான் பக்தியுடன் வணங்குகிறேன்.'' என்றான் சீடன்!
யோகி வெட்கித் தலைகுனிந்தார்.