மனிதத் தோற்றம் ஒன்றே!
கருப்புப் பசு வெள்ளைப் பசுசிவப்புப் பசு உண்டு;- ஆனால்கறக்கும் பாலின் வெண்மை நிறம்ஒன்றே யன்றோ தம்பீ!
கருப்புப் பசு வெள்ளைப் பசு
சிவப்புப் பசு உண்டு;- ஆனால்
கறக்கும் பாலின் வெண்மை நிறம்
ஒன்றே யன்றோ தம்பீ!
அரும்பூக்களில் அரளி, குவளை
வகைகள் பல உண்டு;- ஆனால்
அவற்றின் தேனில் தித்திக்கும் சுவை
ஒன்றே யன்றோ தம்பீ!
பறவையினத்தில் கொக்கு, நாரை
பருந்து, ஆந்தை உண்டு - ஆனால்
பறக்கச் சிறகை விரிக்கும் வழக்கம்
ஒன்றே யன்றோ தம்பீ!
உறங்கும் நாய்க்கும் உறுமும் புலிக்கும்
உருவபேதம் உண்டு;- ஆனால்
உயிரைக் காக்கும் சுவாசக்காற்று
ஒன்றே யன்றோ தம்பீ!
நாடு வேறு, மதங்கள் வேறு,
இனங்கள் வேறு நம்மில்;- ஆனால்
நமக்கமைந்த மனிதத்தோற்றம்
ஒன்றே யன்றோ தம்பீ!
கேடுகெட்ட பேதம் பேசி
பகைவளர்த்தல் தவிர்ப்போம்;- தம்பீ
கீழ்மை வீழ்த்தி மேன்மை வாழ்த்தி
ஒன்றுகூடி உவப்போம்!