முகப்பு
சிறுவர்மணி

முத்துக் கதை: வதந்தி!

""கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் அரசே, உண்மைதான் என்றும் நிலைத்திருக்கும்'' அமைச்சர் சொன்னதைக் கேட்ட மன்னர் சிந்தனையில் ஆழ்ந்தார். விஷயம் இதுதான்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

""கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் அரசே, உண்மைதான் என்றும் நிலைத்திருக்கும்'' அமைச்சர் சொன்னதைக் கேட்ட மன்னர் சிந்தனையில் ஆழ்ந்தார். விஷயம் இதுதான். ஒற்றன் ஒருவன் ஒரு செய்தி கொண்டுவந்தான். எதிரி நாட்டு மன்னன் சில விஷமிகளை நாட்டுக்குள் அனுப்பி "மன்னர் படுத்த படுக்கையாக இருக்கிறார்..., தேறுவது கஷ்டம்' என பொய்யாகச் செய்தி பரப்பி வந்தான்.

மன்னர் உடல் நலமில்லாமல் விஷக் காய்ச்சலால் ஒரு மாதம் அவதிப்பட்டார். அதனால் வெளியே செல்வதைத் தவிர்த்து வந்தார். அதைச் சாக்காக வைத்துக்கொண்டு இப்படி வதந்திகள் பரவின.

ஒரு நல்ல நாளில் மன்னர் யானைமீது பவனி வந்து நகர வீதிகளில் மக்களைச் சந்தித்து எல்லோரையும் நலம் விசாரித்து அரண்மனைக்குத் திரும்பினார். அப்போதுதான் அமைச்சர் ""கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்தான் மன்னா'' என்றார்.

""சரி, எட்டு நாள் என்ன காலக் கெடு'' என கேட்டபோது விகடகவி வெங்கண்ணா,""மன்னா! நான் ஒரு வதந்தியைப் பரப்புகிறேன்.

(அது என்ன வதந்தி என்று அரசரிடம் கூறிவிட்டு) அது எப்படி எட்டு நாட்கள் சென்று தங்களுக்கு வந்து சேருகிறது எனப் பாருங்கள்'' எனச் சொல்லி வணங்கிச் சென்றான்.

வெங்கண்ணா மறு நாள் தன் மனைவியிடம் ""நேற்று அரண்மனைக்குப் போயிருந்தேன் அல்லவா... அப்போது மகாராணி வளர்ந்து வரும் பெண் மயில் குஞ்சு பொரித்தது. ஆண் ஒன்று பெண் ஒன்று...யார் கிட்டேயும் சொல்லிவிடாதே'' என்றான்.

அவன் மனைவி அதை மனதில் முடிந்து வைத்துக் கொண்டு மறு நாள் ஆற்றங்கரையில் அவள் பக்கத்து வீட்டுக்காரி காதில் அதைச் சொன்னாள்.

அவள் தன் பக்கத்து வீட்டுக்காரியிடம், ""அரண்மனையில் மயில்ன்னு ஒருத்தி இருக்காளே ஒரே பிரசவத்தில் ஆண் ஒன்று பெண் ஒன்று செக்கச் செவேல்னு இரட்டைக் குழந்தைகளைப்

பெற்றெடுத்திருக்கிறாளாம்...'' எனச் சொல்ல எட்டாம் நாள் மந்திரி, ""மன்னா நாட்டில் ஒரு வதந்தி''

""என்ன அது...?''

""நம் அரண்மனையில் உள்ள காவலன் மயில் சாமியின் இரண்டு பெண்டாட்டிகளுக்கும் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது என்று''.

வெங்கண்ணா கூறிய செய்தியை முன்னமே அறிந்த மன்னர் விழுந்து விழுந்து சிரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.