கருவூலம் பட்டாசு!
பட்டாசின் வரலாறு சுவாரஸ்யமானது! கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டன!
சிறுவர்மணிகருவூலம் பட்டாசு!
பட்டாசின் வரலாறு சுவாரஸ்யமானது! கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டன!
பட்டாசின் வரலாறு சுவாரஸ்யமானது! கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பட்டாசுகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டன! அப்போது பட்டாசுகள் இளமூங்கில் கழிகளில் வெடிமருந்து அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டன! மூங்கில் கழியின் ஒரு முனையை களிமண்ணால் அடைத்து, குழல் போன்ற பகுதியில் கரித்தூள் மற்றும் வெடிபொருட்களை அழுத்தமாக அடைத்து ஒரு வகை காய்ந்த புல்லைத் திரியாகப் பயன்படுத்தினர். இதுவே சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பட்டாசு ஆகும்!
இவ்வகைப் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட அதிர்வில் பறவைகளும், விலங்குகளும் அலறி ஓடின! எனவே "துர் தேவதைகளை விரட்டுதல்' என்ற சடங்கிற்காகவும், மத நம்பிக்கைக்காகவும் இத்தகைய மூங்கில் வெடிகள் தயாரிக்கப்பட்டு பெருமளவு வெடிக்கப்பட்டன! இவ்வகைப் பட்டாசுகளை "பாசு' (BAOZHU) என்று அழைத்தனர்.
வேதியல் முறைப்படி வெடிமருந்து உற்பத்தி செய்யப்பட்ட பின்னர், மூங்கிலுக்கு பதிலாக காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன.
சீனாவில் எல்லா பண்டிகை நாட்களிலும், இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை அன்றும், நேபாளத்தில் "டிஹார்' என்ற பண்டிகையின் போதும், "அசுரர் தினம்' என்ற திருவிழா சமயத்தில் மொராக்கோ நாட்டிலும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.
உலகில் எந்த நாடாக இருந்தாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அரசிடம் உரிமை பெற்று பட்டாசுகளைத் தயாரிக்கவோ, விற்கவோ முடியும்!
ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், சிங்கப்பூர், இந்தோனேஷியா, இத்தாலி, மலேஷியா, பிலிப்பைன்ஸ், நார்வே போன்ற நாடுகள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து உள்ளன.
இந்துக்கள் வசிக்கும் பெரும்பாலான வெளிநாடுகளில் தீபாவளிப் பண்டிகை அன்று அரசிடம் முன் அனுமதி பெற்று, பாதுகாப்பான மைதானம் போன்ற இடத்தில் பட்டாசுகளை வெடிக்கிறார்கள். ஆனால் வீட்டு வாசலில் இவர்கள் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு, ஓலி மாசுபாடு, பறவைகள் மற்றும் விலங்குகள் நலன், ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான நாடுகள் அதிக ஓசையை ஏற்படுத்தும் பட்டாசுகளை விரும்புவதில்லை. அதற்கு பதிலாக கண்ணைக் கவரும் வாணவேடிக்கை வெடிகளையே அதிகம் விரும்புகின்றனர். இவற்றை இரவில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் பறவைகள், மற்றும் விலங்குகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை.
இந்தியாவில் மட்டுமே அதிக ஓசையுடன் வெடிக்கும் பட்டாசுகளை அதிகம் விரும்புகின்றனர். தமிழகத்தில் "அரவங்காடு' என்ற இடத்தில் வெடி மருந்துத் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்தியாவில் பட்டாசு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது சிவகாசி ஆகும். உலக அளவில் பட்டாசு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா ஆகும். பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் சீனா பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டுகிறது!
பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க சில விதிகள்!
பட்டாசு வெடிக்கப் புறப்படுமுன்..., ஒரு பெரிய வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். எரிந்து முடிந்த கம்பி மத்தாப்பு, போன்றவற்றை இதில் போட்டுவிடலாம்.
ஒரு கம்பளிப் போர்வையும் இருந்தால் நல்லது. உடையில் தீப்பற்றிக்கொண்டால் போர்த்தி அணைத்து விடலாம்!
கண்டிப்பாக செருப்பு அணிந்து கொள்ளவும். கீழே இருக்கும் நெருப்புகள் காலைச் சுடாது அல்லவா?
எளிதில் தீப்பற்றாத பாதுகாப்பான கெட்டியான பருத்தி உடைகள் நல்லது.
பட்டாசுப் பெட்டியிலேயே சில விதிகள் எழுதியிருக்கும். அதைப் பார்க்கவும். பின்பற்றவும்.
அதிக சத்தம் உள்ள வெடி, மற்றும் விண்ணில் ஏவும் ராக்கெட் போன்ற வெடிகளே திறந்த வெளி மைதானத்திற்கு எடுத்துச் சென்று வெடிக்கவும்.
வீட்டு வாசலில் பட்டாசு வெடிக்கும் போது ஜன்னல்கள், கதவுகளை மூடிவைத்தல் நல்லது! சில சீறும் வெடிகள் வீட்டினுள் புக நேரிடலாம்!
பெட்ரோல் நிரப்பிய கார், ஸ்கூட்டர், போன்ற வாகனங்களை ஷெட்டில் வைத்துப் பூட்டி விடுதல் நல்லது! அல்லது தூரமாக நிறுத்துவது நல்லது!
கூட்டமாக மனிதர்கள் இருக்கும் இடத்தில் பட்டாசு வெடிப்பதா? வேண்டாம்...வேண்டவே வேண்டாம்!
பட்டாசை எடுத்தபின் மீதி பட்டாசுகளை மூடியே வைக்கவும்!
சட்டைப் பாக்கெட், பேண்ட் பாக்கெட் போன்றவற்றில் திணித்துக்கொண்டு வெடிக்கப் போக வேண்டாம்.
கையிலேயே வைத்துக்கொண்டு வெடித்தல், கொளுத்தித் தூக்கிப் போடுதல், போன்ற அசட்டுத்தனமான விளையாட்டுகள் வேண்டாம்! டாக்டருக்கு அனாவசியமாக வேலை தரவேண்டாம்!
தெருவில் மரம், மின்சாரக் கம்பிகள், ஒயர்கள் இருக்கும் இடத்தில் ராக்கெட் போன்ற வாண வேடிக்கைகள் வேண்டாம்! மின் விபத்துகளையும் தவிர்க்கலாம்! திசை மாறும் நெருப்புச் சீற்ற விபத்துக்களையும் தவிர்க்கலாம்!
எரியும் ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, விளக்கு போன்றவற்றை பட்டாசுக் கட்டுகளுக்கு அருகே வைக்க வேண்டாம்
வாகனங்கள் நிறைந்த சாலையில்...? யம்மாடியோவ்!...,வேண்டவே வேண்டாம்!
சுமார் மூன்று அடிகளுக்கு மேல் தள்ளியே நின்று வாணங்களைக் கொளுத்தவும்.
முகத்திற்கு அருகில் பட்டசுகளைக் கொளுத்த வேண்டாம்.
வெடிக்காத பட்டாசுகளை உரித்து மருந்துகளைச் சேகரித்து நீங்களாக ஒரு பட்டாசை தயாரிக்க வேண்டாம். இதெற்கெல்லாம் யாரும் பதக்கம் தரப்போவதில்லை!
சின்னஞ்சிறு குழந்தைகளிடம் பட்டாசுகளைக் கொடுக்க வேண்டாம்.
சில சமயம் பட்டாசுத் திரி அணைந்தது போல காணப்படும். ஆனால் நெருப்பு இருக்கக் கூடும்! தைரியமாக கிட்டே போக வேண்டாம். அதை வெடிக்க வைக்க முயற்சியும் செய்ய வேண்டாம்! அப்படியே விட்டுவிடவும் வேண்டாம். தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டால் ரொம்ப நல்லது!
பெரியவர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடுங்கள்!
வாழ்த்துகள்! ஹாப்பி தீபாவளி!