முத்துக் கதை: பெருந்தன்மை!
""வனஜா! அடுப்பெரிக்க சுள்ளி வேணும்! கொஞ்சம் காட்டுக்குப் போய் சுள்ளி பொறுக்கி கட்டி எடுத்து வா!''
""வனஜா! அடுப்பெரிக்க சுள்ளி வேணும்! கொஞ்சம் காட்டுக்குப் போய் சுள்ளி பொறுக்கி கட்டி எடுத்து வா!''
""சரி, பாட்டி''என்ற வனஜா காட்டுக்குள் சென்றாள்! காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்க ஆரம்பித்தாள். பெரிய மரங்களோடு புதர்களும் அந்தக் காட்டில் நிறைந்திருந்தது! அவளுக்கு சுள்ளிகள் நிறையவே கிடைத்தன!
அடர்த்தியான அந்தக் காட்டில் ராஜா ஒருவர் பரிவாரங்களும் வேட்டைக்கு வந்திருந்தார். மதிய வேளை! ராஜா மிகவும் களைப்படைந்திருந்தார்! ஒரு மரத்தடியில் அயர்ந்து ஓய்வெடுக்கலானார்.
சுள்ளிகளைப் பொறுக்கிக் கட்டாகக் கட்டிக்கொண்டாள் வனஜா. வெகுதூரம் வந்ததாலும் களைப்பாக இருந்ததாலும் அவளுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது! காட்டில் பழங்கள் நிறைந்த மரங்கள் நிறைய இருந்தன!ஒரு மரத்தின் உச்சியில் பழுத்த பழங்கள் அவள் பசியை மேலும் தூண்டியது! அருகில் இருந்த கல் ஒன்றை எடுத்தாள். பழங்களைக் குறிபார்த்து கல்லை எறிந்தாள்! கல் பழத்தைத் தாக்கிவிட்டு மேலும் பறந்து சென்றது! பழமும் விழுந்தது!
கீழே விழுந்த பழத்தை வனஜா ருசி பார்த்துக்கொண்டிருந்தாள்!
வனஜா எறிந்த கல் புதர்களுக்கு அப்பால் ஒரு மரநிழலில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ராஜாவின் மீது வந்து விழுந்தது! ராஜா "ஆ' என்று அலறினார்! நெற்றியில் கல் பட்ட இடத்தில் குருதி வழிந்தது! கல்லெறிந்தது யாரென்று அறிய காவலர்கள் விரைந்தனர்!
பழத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்த வனஜாவைக் கண்டுபிடித்து விட்டனர்! கையில் பழத்துடன் அச்சம் நிறைந்த முகத்துடன் அவள் காணப்பட்டாள்! அவளை காவலர்கள் அரசர் முன்பு கொண்டுபோய் நிறுத்தினர். மன்னர் அச்சிறுமியைப் பார்த்தார்.
வனஜா பயத்துடன், ""அரசே! நான் சுள்ளி பொறுக்கவே இந்தக் காட்டிற்கு வந்தேன். களைப்பும் பசியும் மேலிட்டதால் மரத்திலுள்ள பழத்தை விழச்செய்ய கல்லெறிந்தேன். அது தங்கள் மீது விழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை...,என்னை மன்னியுங்கள்...''என்றாள்.
மன்னர் அந்தப் பெண்ணை அன்புடன் நோக்கி, மேலும் சில பழங்களைத் தருவித்து அவளைப் பசியாறச் செய்து தன் முத்துமாலை ஒன்றையும் வனஜாவிற்குத் தந்தார்.
காவலர்கள் அரசரைக் கேள்விக்குறியோடு பார்த்தனர்.
அரசர் புன்னகையுடன்,""தன்னைக் கல்லெறிந்து தாக்கும் ஒருவருக்கு மரம் பழத்தைத் தருகிறது! அந்தக் கல் ஒரு மன்னன் மீது விழுந்தால் தண்டனையா தருவது? அப்படி தண்டனை தந்தால் மரத்தைவிட மன்னன் தாழ்ந்துவிட மாட்டானா?''என்று பெருந்தன்மையுடன் குருதியைத் துடைத்துக்கொண்டே கூறினான் மன்னன்.
காவலர்கள் மன்னனின் பெருந்தன்மையைக் கண்டு வியந்தனர்!
சுள்ளிக்கட்டைச் சுமந்து கொண்டு வனஜா முத்துமாலை ஆட குதூகலத்துடன் வீடு திரும்பினாள்!