முகப்பு
சிறுவர்மணி

ரஞ்சனி டீச்சர்!

என் பேரு செந்தில்! ஊராட்சித் துவக்கப்பள்ளியில ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். விளையாட்டு,படிப்பு எல்லாத்துலேயும் சுமார்தான்!

சிறுவர்மணி

ரஞ்சனி டீச்சர்!

என் பேரு செந்தில்! ஊராட்சித் துவக்கப்பள்ளியில ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். விளையாட்டு,படிப்பு எல்லாத்துலேயும் சுமார்தான்!

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:49 AM
பகிர்:

என் பேரு செந்தில்! ஊராட்சித் துவக்கப்பள்ளியில ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். விளையாட்டு,படிப்பு எல்லாத்துலேயும் சுமார்தான்! அது மாத்திரம் இல்லே! எனக்கு ஆடத் தெரியாது! பாடத்தெரியாது! ஏன்...,சரியா பேசக்கூட வராது! சத்தம் போட்டுப் படிக்கவும் முடியாது! அதுக்கு என்ன காரணம்னா... எனக்குத் திக்குவாய்!

 நான் வாயைத் திறந்த உடனேயே என்னோட படிக்கிற பலபேர் என்னைக் கிண்டல் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க! எனக்கு எல்லார் கூடயும் பேசிக் கலந்து பழகணும்னு ரொம்ப ஆசையா இருக்கும்! ஆனா முடியாது! மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்! நான் தனியா இருந்தேன். எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது! வகுப்புக்கு ஒரு சுற்றறிக்கை வந்தது. அதில் பள்ளி ஆண்டு விழா தேதி அறிவிச்சு இருந்தாங்க!

 விழாவிற்கு இன்னும் ரெண்டு வாரங்கள் இருந்தது! ஊராட்சித் தலைவர் தலைமை தாங்க, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அது நடக்கப்போகுது! என்னோட வகுப்புல பல மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆர்வமா பேர் கொடுத்திருந்தாங்க! எனக்கும் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சியிலே பங்கு பெறணும்னு ரொம்ப ஆசையா இருந்தது! ஆனா இந்த திக்குவாயோட என்னால எப்படி இதிலெல்லாம் கலந்துக்க முடியும்? என்னோட படிக்கிறவங்க எல்லாரும் ரொம்ப ஆர்வமா நடனம் ...,நாடகம்...,கவிதை வாசிப்பு...,எல்லாத்தையும் உற்சாகமா ஒத்திகை பார்த்துக்கிட்டு இருந்தாங்க...,எல்லாம் மும்முரமா நடந்துகிட்டு இருந்தது!

 நான் எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். எனக்கு ஆர்வம் பீறிட்டுக்கிட்டு வந்தது! நாடக ஒத்திகை பார்த்துக்கிட்டிருந்த மாணவர் தலைவன் அகிலன் கிட்டே போய், ""எனக்...க்...கு... ஏதா...ஆ...ஆவது ஒரு சின்ன வேஷம் கூட்ட்.....டத்துல நிக்கற மாதிரி தர்றியா?''ன்னு கேட்டேன்.

 ""ஏண்டாப்பா...? வீரபாண்டிய கட்டபொம்மன் வேஷத்தை வேணும்னாலும் நீயே எடுத்துக்கோயேன்...,ஜாக்சன் துரை கிட்ட நீ திக்கித் திக்கிப் பேசறதைப் பார்த்து அவனை நாட்டை விட்டு ஓடிப் போயிடுவான்!'' அப்படீன்னு அவன் சொன்ன உடனே கூடியிருந்த மாணவர்கள் எல்லாரும் "கொல்' லுனு சிரிச்சாங்க. என் மனசு ரொம்ப நொறுங்கிப் போயிடுச்சு! அவமானம் தாங்காம என் கண்ணுலேர்ந்து தண்ணி  வந்திடுச்சு.

 அங்க மூணாம் வகுப்பு ரஞ்சனி டீச்சர் வந்தாங்க. அவங்க, ""உஷ்...! என்ன சத்தம்?''னு எல்லாரையும் அடக்கினாங்க. நான் கண்ணீரோடு இருக்கறத பார்த்து, ""செந்தில் இங்க வா! ஏன் அழறே?''ன்னு கேட்டாங்க.

 ""மிஸ்..., எனக்கும் இவங்களைப் போல கலை நிகழ்ச்...ச்...சிகளிலே எல்..லா...ஆ...ம் கலந்துக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு! ஆனா என்னால ஆ...ஆடவும் முடியாது! ப்ப்பாட...வும் முடியாது...,பேசவும் முடியா...ஆ...து!'' அப்படீன்னு அழுதுகிட்டே சொன்னேன்.

 ரஞ்சனி டீச்சர் என்ன பரிவோட பார்த்தாங்க....,என்னை தனியா அழைச்சுக்கிட்டுப் போனாங்க..., அவங்க எனக்கு ஆதரவா ஏதாவது செய்வாங்கன்னு எனக்கு தோணிச்சு! எனக்கு என்னவோ அந்த நொடியிலே அவங்கள ரொம்ப பிடிச்சிடிச்சு!

 நான் நினைச்சாப்போலேயே அவங்க என்னைப் பார்த்து,

""கவலைப்படாதே செந்தில்! நான் உனக்கு பத்து வரி எழுதித் தரேன்...,அதை நீ தெனமும் எனக்குத் திக்காமல் படிச்சுக் காட்டணும்! இதை நீ யார்கிட்டேயும் சொல்லக் கூடாது சரியா?''

 ""படிக்கும்போது எனக்குத் திக்...க்...குமே...!''

 ""திக்காம படிக்கறதுக்கு நீதான் முயற்சி செய்யணும்! முயற்சி செய்தா முடியாதது எதுவுமில்லே!''

 ""சரி மிஸ்''என்றேன்.

 அன்னியிலேர்ந்து தினமும் ஒரு தடவை ரஞ்சனி டீச்சரிடம் படித்துக் காட்டத் துவங்கினேன்.

ஆண்டு விழாவும் வந்தது. கலை நிகழ்ச்சிகள் களை கட்ட ஆரம்பித்தன. கரகோஷம் விண்ணைப் பிளந்தது! கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்குத் தலைவர் பரிசுகள் வழங்கினார். பிறகு,ரஞ்சனி டீச்சர், ""இப்போது ஐந்தாம் வகுப்பு மாணவன் செந்தில் நாம் அனைவரும் சிறந்த குடிமக்களாக விளங்க தனிநபர் உறுதிமொழியை வாசிப்பார். அனைவரும் எழுந்து நின்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்'' என்று அறிவித்தார்.

 மாணவர்கள் எல்லாருக்கும் ரொம்ப ஆச்சரியமாவும் பயமாவும் இருந்துச்சு! என்னோட வகுப்பு ஆசிரியை கமலம் டீச்சர் பயப்பட்டாங்க. எங்க நான் திக்கித் திக்கி உறுதி மொழிகளை வாசிச்சிடுவேனோன்னுதான்!

 நான் ஒலி வாங்கி முன்னால போனேன். எல்லாரும் அமைதியா, ஆர்வமா, பயத்தோட கவனிச்சாங்க. ""அனைவருக்கும் வணக்கம்!'' னு கூறிவிட்டு கணீரென்ற குரலோட உறுதி மொழியை படிக்கத் தொடங்கினேன்.

1. நான் எனது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வேன்.

2. என்னால் முடிந்த அளவு மரங்களை நட்டுப் பராமரிப்பேன்.

3. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பேன்.

4. முதியோர்களுக்கு மரியாதை தருவேன்.

5. மாற்றுத் திறனாளிகளுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

6. கல்வி அறிவற்ற ஒருவருக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தருவேன்.

7. பள்ளியில் கற்றுக் கொண்ட நெறிமுறைகளை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பேன்.

8. தேசியச் சின்னங்களையும், பொதுச் சொத்துக்களையும் பாதுகாப்பேன்.

9. ஜாதி மத வேறுபாடுகளுக்கு இடம் தரமாட்டேன்.

10. நம் நாட்டின் கலாச்சாரத்தைப் பின்பற்றி நாட்டுப் பற்றுடன் வாழ்வேன்.

என்று பதட்டப்படாம, திக்காம வாசித்து முடித்தேன். ஆசிரியர்கள் அத்தனை பேருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சி! எனக்கு எதையோ சாதிச்சுட்டா மாதிரி ரொம்ப பெருமையா இருந்தது! என்கூட படிக்கிற மாணவர்கள் எல்லாரும் ஒடி வந்து என் கையைக் குலுக்கிப் பாராட்டினாங்க! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது! பரிசு வாங்கறதைவிட இது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது!

 ஏற்புரை வழங்கிய காவல் துறை அதிகாரி, ""மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை! ஆனால் "தனி நபர் உறுதி மொழி' வாசித்த சிறுவனை நாம் பாராட்டியே ஆகவேண்டும்! இங்கு நடைபெற்ற அத்தனை கலை நிகழ்ச்சிகளின் மையக் கருத்துக்கும்

அவனது அந்த உறுதிமொழியே சாராம்சமாகும்! அதன்படி நடந்தால் நம் தேசம் உலக அரங்கில் பெருமை பெறும்! ஆகவே உறுதி மொழி வாசித்த அந்தச் சிறுவனைப் பாராட்டும் வகையில் இந்தப் பேனாவை என் அன்புப் பரிசாக அளிக்கின்றேன்!''

என்று கூறி எனக்குப் பேனா ஒன்றைப் பரிசாக அளித்தார்! எனக்கோ இன்ப அதிர்ச்சி!

 இதுநாள் வரைக்கும் என்னை கேலி செஞ்சதுக்காக அத்தனை மாணவர்களும் மாணவர் தலைவன் அகிலனும் ரொம்ப வருத்தப்பட்டாங்க! மாணவர்களும், பெற்றோர்களும் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் எனக்கு பலத்த கைதட்டல்!

 கூட்டத்தில் ஒருவராக வேடிக்கை பார்க்க வந்த என் தாய்க்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது! கண்களில் ஆனந்தக் கண்ணீர்! அம்மாவுக்கு மட்டுமா...? ரஞ்சனி டீச்சருக்கும்தான்!

 நான் ரஞ்சனி டீச்சர் கிட்டே போய், ""ரொம்ப தேங்ஸ் மிஸ்'' என்றேன்.

 ""நான்தான் உனக்கு தேங்ஸ் சொல்லணும் செந்தில்! என் நம்பிக்கை வீண் போகாம தினமும் கடினமா முயற்சி செஞ்சே பாரு! அதுக்காக! உன் கிட்ட இருந்தது தாழ்வு மனப்பான்மை! அதைப் போக்க நீதான் விடாம முயற்சி செய்தே! திக்குவாய்ங்கிறது சரி செய்யக் கூடிய குறைபாடுதான்! தினமும் முயற்சி செஞ்சா அந்தக் குறைபாடு முழுமையா நீங்கிவிடும்! தினமும் முயற்சி செய்ய மலைப்பாகவும் சோர்வாகவும் இருக்கும்! ஆனா நீ முயற்சியைக் கைவிடக் கூடாது! இந்தப் பரிசு உன் முயற்சியை மேலும் அதிகப்படுத்த ஒரு தூண்டுகோல் மாதிரி!''என்று ரஞசனி டீச்சர் வாழ்த்தினாங்க!

 அப்போ அங்க வந்த என்னோட வகுப்பு ஆசிரியை திலகம் டீச்சர், ""செந்தில் வள்ளுவரும் இதே கருத்தைத்தான்,

 "அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்

  பெருமை முயற்சி தரும்'னு சொல்றார். இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ""ஒரு செயலைச் செய்யத் தொடங்கறதுக்கு முன்னாலேயே இது செய்வதற்குக் கடினமானதுன்னு ஒருவன் சோர்வு அடையக் கூடாது. ஏன்னா இடைவிடாத முயற்சி அதை செய்து முடிக்கும் வலிமையைத் தரும்'' எனவே தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருக்கணும்! செய்வாயா?'' என்று கேட்டார்.

""நிச்சயம் செய்வேன் மிஸ்'' என்றேன் உறுதியாக!

முழு கட்டுரையைப் படிக்க →