முகப்பு
சிறுவர்மணி

கருவூலம்: சார்லி சாப்ளின்!

உலகப் புகழ் பெற்ற மிகச் சிறந்த, நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் என்பது எல்லோரும் அறிந்ததே! இன்று வரை அவரது நகைச்சுவைப் படங்கள் பல சானல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதே அதற்கு சாட்சி! அவருடைய நகைச்சுவை காலத்தால் அழியாதது!

Updated On : 3 ஜூன், 2016 at 9:27 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:55 PM

உலகப் புகழ் பெற்ற மிகச் சிறந்த, நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் என்பது எல்லோரும் அறிந்ததே! இன்று வரை அவரது நகைச்சுவைப் படங்கள் பல சானல்களில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதே அதற்கு சாட்சி! அவருடைய நகைச்சுவை காலத்தால் அழியாதது!

சாப்ளின் 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் தெற்கு லண்டனை அடுத்த லாம்பெத் என்னும் இடத்தில் பிறந்தார். ஐந்து வயதான சாப்ளின் முதன் முறையாக 1894ஆம் ஆண்டில் மேடை ஏறிப் பாடினார்.

1895ஆம் ஆண்டு சார்லிசாப்ளினின் அன்னை மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அடிக்கடி மனநோய்க்காக "கேன்ஹில் மனநோய் மருத்துவ மனை'யில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

Advertisement

1896ஆம் ஆண்டு சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் "ஹான்பெல் அனாதைகள் பள்ளி'யில் சேர்க்கப்பட்டார்கள்.

சார்லிக்கு ஒன்பது வயதில் பள்ளிப் படிப்பு நின்றது!

"எய்ட் லங்காஷைர் இளைஞர்கள்' என்ற நாடகக் குழுவில் 1898ஆம் ஆண்டு சேர்ந்தார்.

1903ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி ஷெர்லக் ஹோம்ஸ் நாடகத்தில் சாப்ளின் நடித்தபோது அவருக்கு வயது 14.

"ஃபிரெட் கார்னோ' நாடகக்குழுவில் முதன் முறையாக 1908ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஃபிரெட் கார்னோ குழுவோடு சேர்ந்து 1910ஆம் ஆண்டு சார்லி அமெரிக்கா சென்றார்.

1913ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் இருந்த "கீ ஸ்டோன்' ஸ்டூடியோவில் சார்லி சாப்ளின் பணியாற்றச் சென்றபோது அவருக்கு வயது 24.

1914ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி "பிழைப்புக்காக' (MAKING A LIVING) என்ற படத்தில் முதல் முறையாக சாப்ளின் நடித்தார். அது "கீ ஸ்டோன்' தயாரிப்பு. அந்த நிறுவனத்திற்காக ஓராண்டில் முப்பத்தைந்து படங்கள் நடித்துக் கொடுத்தார்! இது போல எந்த நடிகரும் நடிக்க முடியுமா? அவற்றில் இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு சார்லி சாப்ளின் இயக்குநராகவும் இருந்தார். மிகமிகக் கடுமையான உழைப்பு!

1914இல் உலகப் போர் ஆரம்பித்தது.

டிசம்பரில் எஸ்ஸôனே நிறுவனத்துக்குச் சென்றார். அந்நிறுவனத்துக்காக ஓராண்டில் 15 திரைப்படங்கள் தயாரித்துக் கொடுத்தார். என்னே அவரது உழைப்பு!!

1915ஆம் ஆண்டு சார்லியின் புகழ் பெற்ற "டிராம்ப்' படம் வெளிவந்தது! இப்படத்தில்தான் சார்லி சாப்ளின் நாடோடி கதாபாத்திரம் வடிவமைக்கப் பெற்றது.

சார்லிக்கு வயது 27 இருக்கும்போது "மியூச்சுவல் ஃபிலிம் கார்ப்பரேஷன்' நிறுவனத்தில் 1916ஆம் ஆண்டு ஒப்பந்தமானார். அந்த திரைப்படக் கம்பெனிக்காக சாப்ளின் தயாரித்துத் தந்த எட்டு படங்கள் அந்த ஆண்டு வெளிவந்தன. மியூச்சுவல் நிறுவனத்திற்காக சார்லி சாப்ளின் தயாரித்த நான்கு படங்களில் ஒன்றான "தி இம்மிக்ரான்ட்' 1917ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்தது.

ஃபர்ஸ்ட் நேஷனல் திரைப்படக் கம்பெனியில் 1918ஆம் ஆண்டு ஜனவரி மாதம் "நாயின் வாழ்க்கை' என்ற படத்தைத் தொடங்கினார். அந்தப் படத்தில்தான் முதல் முறையாக செயற்கை விளக்குகளை படப்பிடிப்பின் போது பயன்படுத்தினார். முதல் உலகப்போர் முடிவடைய ஒரு மாதம் இருக்கும்போது "ஷோல்டர் ஆர்ம்ஸ்' படம் திரையிடப்பட்டது.

1919ஆம் ஆண்டு பிரபல நடிகர் டக்ளஸ் ஃபேர்பங்க்ஸ், அவரது மனைவியும் நடிகையுமான மேரி பிக்ஃபோர்டு ஆகியோருடன் சேர்ந்து "யுனைடட் ஆர்டிஸ்ட்' எனும் பெயரில் ஒரு திரைப்பட நிறுவனத்தை உருவாக்கினார்.

உலகப் புகழ் பெற்ற "தி கிட்' திரைப்படம் வெளிவந்தது. சாப்ளினின் அன்னை மன நலம் தேறி 1921ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார்.

1925ஆம் ஆண்டு சார்லியின் உலகப் புகழ் பெற்ற "தி கோல்ட் ரஷ்' படம் வெளிவந்தது.

1928இல் "யுனைடட் ஆர்டிஸ்ட்' நிறுவனத்திற்காக "தி சர்க்கஸ்' என்னும் படத்தைத் தயாரித்தார். இதே ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் நாள் சார்லியின் தாய் ஹன்னா மரணமடைந்தார்.

சிறப்பு ஆஸ்கர் பரிசை 1929ஆம் ஆண்டு பெற்றார் சாப்ளின்!

அவருக்கு மிகப் பிடித்த படம், "சிட்டி லைட்ஸ்.' அது மெüனப்படம். அப்போது பேசும் படங்கள் வர ஆரம்பித்து விட்டன. ஆனாலும் இவரது மெüனப் படம் வெற்றிப் படமானது! எல்லோருக்கும் பெரிய ஆச்சரியம்!! காட்சிகளை அப்படிச் செப்பனிட்டார் அவர்! சரியான அயராத உழைப்பு!

1936ஆம் வருடம் "மாடர்ன் டைம்ஸ்' படத்தை உருவாக்கினார். இதுவும் வெற்றி!

பிறகு, "தி கிரேட் டிக்டேட்டர்' படத் தயாரிப்பில் ஈடுபட்டார்! இதுவும் வெளிவந்து வெற்றிப் படமாக ஆனது!

1939இல் உலகப் போர் மூண்டது! 1942 இறுதியில் அமெரிக்காவும் அதில் கலந்து கொண்டது.

1947ஆம் ஆண்டு "மான்ஸ்யூர் வெர்தோக்ஸ்' படத்தில் சார்லி சாப்ளின் வசனம் பேசி நடித்தார். அதில் அவர் வழக்கமாக நடிக்கும் நாடோடி கதாபாத்திரம் இல்லை. நாடோடி கதாபாத்திரம் "மாடர்ன் டைம்ஸ்' படத்திற்குப் பிறகு தொடரவில்லை.

அமெரிக்கா சாப்ளின் மீது பல குற்றங்களைச் சுமத்தியது. அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறி, அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியது. சார்லி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த சூழ்நிலையிலும் அவர் "லைம் லைட்' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அது வெளிவந்தது. ஆனால் அவர் அமெரிக்காவிலிருந்து 1952ஆம் ஆண்டு வெளியேறினார். அவரது குடும்பம் சுவிட்சர்லாந்தில் குடியேறியது.

1954ஆம் ஆண்டு சார்லி சாப்ளினுக்கு உலக சமாதானக் கழகம் விருது வழங்கி கெüரவித்தது. விருதுக்கான பரிசுத் தொகையை பாரிஸ், லண்டன் ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கினார்!

இங்கிலாந்தில் இருந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்கள் சார்லிக்கு கெüரவ டாக்டர் பட்டங்களை வழங்கின!

1971ஆம் ஆண்டு பிரான்ஸ் விருது வழங்கி கெüரவித்தது.

1972ஆம் ஆண்டு அமெரிக்கா சாப்ளினுக்கு "சிறப்பு ஆஸ்கார் விருது' வழங்கி கெüரவித்தது! குற்றங்கள் சுமத்தி வெளியேற்றப்பட்ட ஒருவருக்கு இப்படி ஒரு விருது! இதன் மூலம் அமெரிக்கா தன் கறையைத் துடைத்துக் கொண்டதோ? 1952இல் அமெரிக்காவை விட்டு வெளியேறிய அவருக்கு இருபது வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு விருது. சாப்ளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! விருதினைப் பெற அவர் அமெரிக்கா சென்றார்.

1975ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் சாப்ளினுக்கு "சர்' பட்டம் வழங்கினார்!

அழியாப் புகழ் பெற்றவர் அவர்! நம்மை சிரிப்பிலும் சிந்தனையிலும் ஆழ்த்தியவர்!

1977ஆம் ஆண்டு! டிசம்பர் 25ஆம் தேதி 88வயது ஆன "சார்லி சாப்ளின்' உறங்கிக் கொண்டிருந்த போதே மறைந்து விட்டார்!

அன்று "கிறிஸ்துமஸ்' நாள்!

விண்ணுலக தேவதைகளுக்கும், தேவர்களுக்கும் அவர் மகிழ்ச்சி ஊட்டிக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.