இளமையில் வெல்!
கொச்சியில் "டெக் ஃபோஸ் 2கே16' (Techfoss 2k16) என்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
சிறுவர்மணிஇளமையில் வெல்!
கொச்சியில் "டெக் ஃபோஸ் 2கே16' (Techfoss 2k16) என்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
சாரங் சுமேஷ்
கொச்சியில் "டெக் ஃபோஸ் 2கே16' (Techfoss 2k16) என்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. மிகச் சிறிய கருவி முதல் மிகப் பெரிய கருவி வரை புதிய கண்டுபிடிப்புகள் ஒவ்வோர் அரங்கிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் ஓர் அரங்கில் மட்டும் மக்கள் கூட்டம் வெள்ளம்போல் அலை மோதுகிறது. அங்கு அப்படி என்னதான் இருந்தன? மூன்றே மூன்று ரோபோக்கள் மட்டும் இருந்தன. இவற்றை உருவாக்கியவர் பொறியியல் கல்லூரி மாணவரோ அல்லது பேராசிரியரோ அல்ல!
ஏழே வயதாகும் "சாரங் சுமேஷ்' என்னும் சிறுவன்தான். இவன் கொச்சியில் உள்ள "சாய்ஸ் பள்ளி'யில் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். இவன் தந்தை ஒரு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர். சாரங்கிற்கு செஸ் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். தன் தந்தையையும், நண்பர்களையும் பலமுறை தோற்கடித்து இருக்கிறான். ஆனால் அதைவிட சிறிய ரோபோக்களை உருவாக்குவது மிகவும் பிடிக்கும்.
பின்னாளில் தன் மகன் மிகப்பெரிய செஸ் விளையாட்டு வீரராக வருவான் என தந்தை நினைக்க மகனோ சிறிய பாட்டரி மற்றும் எலெக்ட்ரானிக் கருவிகளைக் கொண்டு ரோபோட்களை உருவாக்குவதில் மும்முரமாக இருந்தான். இதனால் "லெகோ' (கங்ஞ்ர்) என்னும் பொம்மை ரோபோட்களை உருவாக்கும் கருவியை அவனுக்கு வாங்கித் தந்தார் அவன் தந்தை.
அன்றிலிருந்து தன் கவனம் முழுவதையும் சாரங் அதிலேயே செலுத்தினான். அப்படி அவன் விளையாட்டாகக் கண்டுபிடித்தவை பல பொருள்கள். தன் தாத்தாவின் கைத்தடியில் எலெக்ட்ரானிக் சிப் ஒன்றையும் அலாரம் ஒன்றையும் பொருத்தினான். அதை எடுத்துக்கொண்டு நடந்தபொழுது பாதையில் ஏதேனும் தடைகள் எதிர்ப்பட்டால் அது ஒலி எழுப்பியது. விளையாட்டான கண்டுபிடிப்புதான்! ஆனால் பார்வையற்றோருக்கு அது எவ்வளவு பயன்படும் என்று அவனுக்குத் தெரிய நியாயமில்லை.
ஆட்டோ ரிக்ஷா பொம்மை ஒன்று ஓடாமல் இருந்தது அவனிடம். அதில் புது சக்கரங்களைப் பொருத்தினான். சென்சார்களையும், எலெக்ட்ரானிக் சிப் ஒன்றையும் பொருத்தினான். அதை இயக்க புது ரிமோட் ஒன்றையும் கண்டுபிடித்தான்.
இப்பொழுது ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் ஆட்டோ ரிக்ஷா தயாராகிவிட்டது.
தரையைச் சுத்தம் செய்யும் சிறிய ரோபோட் ஒன்றையும் அவன் உருவாக்கி இருக்கிறான். அவன் அம்மா குண்டூசிகள் மற்றும் சிறிய ஆணிகள் கொண்ட பெட்டியைத் தவறுதலாகக் கீழே போட்டுவிட்டார். பல குண்டூசிகளும், ஆணிகளும் அலமாரிக்கு அடியிலும் மேலும் பல இடுக்கான சுத்தம் செய்ய முடியாத பகுதிகளுக்குள்ளும் சென்று சிதறிவிட்டன. அவற்றைத் திரட்டி எடுக்க மிகவும் சிரமமாக இருந்தது. சாரங்கிற்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. தான் தயாரித்த சிறிய நகரும் இயந்திரத்தில் ஒரு காந்தத்தை ஒட்டினான். அந்த இயந்திரத்தை அறை முழுவதும் இயக்கினான். எங்கெங்கோ சிதறிக் கிடந்த குண்டூசிகளும், ஆணிகளும் ஓடி வந்து காந்தத்தில் ஒட்டிக்கொண்டன.
இந்த மாதிரியின் அடிப்படையிலேயே அவன் சுத்தம் செய்யும் ரோபோட்டைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறான். இந்தக் கருவிகளை எல்லாம் அவன் தன் தந்தையின் உதவியுடனும், வழிகாட்டுதலின் படியுமே செய்திருக்க முடியும் என்பதில் ஐயமில்லை! "ஒரு பொருளைப் பார்த்தவுடன் அதை எதற்குப் பயன்படுத்தலாம் என்ற யோசனையை அவன் என்னிடம் கூறுவான். அதற்குத் தேவையான கருவிகளை வாங்கிக் கொடுப்பது மட்டுமே என் வேலை! அதை வடிவமைப்பதும், ஆராய்ச்சி செய்வதும் அவன் வேலை! அவன் தன் முயற்சிகளில் பலமுறை தோற்று இருக்கிறான். சிலசமயம் ஒரு பொருளை உருவாக்க முயற்சி செய்தபொழுது அது வேறொரு பொருளாக உருவானதும் உண்டு! அவன் முயற்சிதான் எங்களைப் பிரமிக்கச் செய்கிறது!' என்று கூறுகிறார் அவன் தந்தை.
பெங்களூருவில் நடைபெற இருக்கும் ரோபோட்டிக்ஸ் கண்காட்சியில் பங்கு பெற விரும்புகிறான் சாரங். காரணம் ரோபோட் பற்றி மேலும் பல விஷயங்களை அங்கு தெரிந்து கொள்ளலாம் என்ற ஆர்வமே! அன்றாட வாழ்வை மேலும் எளிமையாக்கப் பல கருவிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவன் நோக்கமாகும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாம் போட்டி ஒன்றை ஆரம்பித்து வைத்திருந்தார். அதன்படி ரோபோட் ஒன்றின் ஆரம்ப வடிவை (Blue Print of a Robot) அங்கு அனுப்ப வேண்டும். அப்படிப் பெறப்படும் கருத்துகளில் எது மிகவும் சிறந்ததோ அது தெரிவு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். சாரங் தற்பொழுது தான் வடிவமைத்த ரோபோட் பற்றிய தகவல்களை புதுதில்லிக்கு அனுப்புவதில் மும்முரமாக இருக்கிறான்.
"ரோபோட்டிக்ஸ்' பற்றிய கருத்துகள் எளிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதும் மேலும் பல புதிய கருவிகளைக் கண்டறிய வேண்டும் என்பதும் இந்த இளம் மேதையின் விருப்பமாம்!
""இளைய பாரதத்தினாய் வா! வா! வா!!''