முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்:  தோற்றம் எப்படி இருந்தாலும்...

காலை நேரம் நத்தையொன்றுகதிரவன் ஒளியில் புல்தரையில்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

காலை நேரம் நத்தையொன்று

கதிரவன் ஒளியில் புல்தரையில்

அசைந்து அசைந்து ஊர்ந்துவர

அதற்கு எதிரே கறுப்பு நிறக்

கம்பளிப் புழுவைப் பார்த்தது!

கண்டதும் முகத்தில் ஓர் வெறுப்பு!

கம்பியைப் போல உரோமங்கள்

நம்பித் தொட்டால் உடல் எரியும்!

இதையும் கடவுள் படைத்தானே

எதற்கு இந்த வீண் வேலை!

என்றே நினைத்தது உள்ளத்தில்

எதிரியைப் போல நோக்கியது!

"இருவரும் தானே ஊர்கின்றோம்

என்னை உறவாய் நினைத்திடுவாய்!

என்னிடம் சற்றுப் பேசிடுவாய் - அது

இதமாய் எனக்கு இருந்திடுமே!'

என்றே சொன்னது அப்புழுவும்

எரிச்சல் அடைந்தது அந்நத்தை!

"ஊர்ந்தால் உறவு வந்திடுமா - உன்

உருவம் உனக்குத் தெரியாதா?

என் எதிரே நிற்கத் தகுதி உண்டா? - இந்த

இடத்தை விட்டுச் சென்றிடுவாய்!

மீண்டும் இங்கே வந்தாலோ - நீ

மீள்வது கடினம் உணர்ந்திடுவாய்!'

பல நாள் சென்றன.. பின் ஒருநாள் - சிறகு

பல நிறத்தோடு பளபளப்பாய் - ஒரு

பட்டாம்பூச்சி செடிகொடியின்

பூக்களின் மேலே ஆடியது!

பார்த்தது நத்தை அதன் அருகே

பணிவாய்ச் சென்று வணங்கியது

"எத்தனை அழகு உன்னிடத்தில்

என்னிடம் பேச வருவாயா?'

என்றே அதனிடம் வேண்டியது

ஏழை போல ஏங்கியது!

"அன்று என்னை ஏளனமாய்

அழவே வைத்தாய் வெறுத்தாயே?

அந்தக் கம்பளிப் புழு நான்தான் - இன்று

அடைந்தேன் இந்தப் புதுமாற்றம்!

அழகை மட்டும் பார்ப்பதனால் - நாம்

அடையும் நன்மை எது..? சொல்வாய்!

தோற்றம் எப்படி இருந்தாலும்

தோழமை உணர்வு வேண்டாமா?

ஏற்றம் இறக்கம் இருந்தாலும்

என்றும் அன்பை விடலாமா?'

பதிலைச் சொல்ல வாயில்லை - நத்தை

பதுங்கிக் கொண்டது கூட்டுக்குள்!

பட்டாம் பூச்சி ரீங்கரித்துப்

பறந்தே சென்றது உயரத்தில்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.